Showing posts with label அல்ஹஸனாத். Show all posts
Showing posts with label அல்ஹஸனாத். Show all posts

சில சம்பவங்களும் விலை போகும் கண்ணியமும்

சமீலா யூசுப் அலி
சம்பவம் 01
கொழும்பு கண்டி பஸ்  புறக்கோட்டை தரிப்பிடத்திலிருந்து உறுமலுடன் புறப்படுகிறது.
பஸ்ஸில் சிற்றுண்டி விற்பவர்களின் குரல்கள் கலவையாக ஒலிக்கின்றன.
திமு திமு வென்று ஒரு இஸ்லாமியச் சகோதரர்கள் கூட்டம் பஸ்ஸின் காலியான ஆசனங்களில் வந்தமர்கிறது.
வாட்டசாட்டமான தொப்பி தாடி இளைஞர்கள் .
ஏதோ தஃவா வேலைக்காக சென்று விட்டு வருவதை உணர்த்துவதான உரையாடல்கள்.
ஒரு சகோதரர் உரத்த குரலில் குர் ஆனை ஓதுவதும் செவிகளுக்கு வந்து போனது.
சில நிமிடங்கள் கழித்து ஏறிய ஒரு வயதான தாய் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்களை நோட்டமிடுகிறார். பஸ்ஸின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடும் வயது.இஸ்லாமிய ஊழியர்கள் யாரும் அசைந்து கொடுக்கவில்லை.
‘அம்மே வாடிவெண்ட’என எழுந்து இடம் கொடுக்கிறார் ஒரு நடுத்தர வயது சிங்கள சகோதரர்.

சம்பவம் 02
ஹொஸ்பிடலில் பார்வையாளர் நேரம்.
ஒரு கட்டிலைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம்.ஏதோ உல்லாசப்பயணத்துக்கு வந்தது போல குழந்தை குட்டிகள் சகிதம் புறப்பட்டு வந்திருப்பது விளங்கியது.
தேவைக்கதிகமான பேச்சும் சிரிப்பும் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை.
நோயாளிகள் மட்டுமல்லாது பார்வையாளர்களும் ஒரு வித வெறுப்புணர்வோடு
தலையை திருப்பிப்பார்ப்பது விளங்கியது.
செக்யூரிடி அலுவலர் ,நேரம் முடிந்து விட்டது என்பது சாம,தண்ட,பேத முறைகளில் உணர்த்திய பின்னரும் கூட்டம் நகர்வதாக இல்லை.
“இந்த முஸ்லிம்களே இப்படித்தான்’ என ஒரு  முணுமுணுப்பு ஓரமாய் எழுந்தது.

சம்பவம் 03
‘வாங்கோ மாமி,இரீங்கோ…
மிச்ச நாளா காணல்ல’
‘சொகமில்லாம ஈந்த மகள்’
‘டொக்டர்ட போகல்லியா மாமி’
‘ஓ…புள்ள சக்திவேல்  கிட்டத்தான் போன.அவன் நல்லம்.ஆனா மருந்து கொஞ்சம் பவர்’
‘ஏ மாமி
மஹிந்த …அவனும் நல்லம்.’
பாத்திமா மாமியும் ரைஹானா தாத்தாவும் கதையைத் தொடர்கின்றனர்.

‘உம்மா…………
 ஹதியாவொண்டு தாங்கும்மா……….
வாசலில் ஒரு குரல் ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்கிறது.
‘யாரென்னும்மா அது’ பாத்திமா மாமி.
‘ஆ மாமி இது வியாழக்கெழம வார முஸாபர் ஒண்டு.
கொஞ்சம் இரீங்கோ,அவருக்கு ஹதியா குடுத்துட்டு வாரென்’

அவன்= அந்திய மதத்தவர்
அவர்= முஸ்லிம்

சம்பவம் 04
மாஹிராவுக்கு திருமணம்.
மாப்பிள்ளை ஒரு டொக்டர்.வெளிநாட்டில் வேலை பார்க்கிறாராம்.
‘மாஹிரா வீட்டில் நேற்று மருதோண்டிக் கலியாணம்டீ’
ஷா…ஏண்டீ நீ வரல்ல..பாத்தீக்கோணுமே அவள் உடுத்தீந்த சாரி மட்டும் அம்பதுனாயிரமாம்டீ…
ரிஷாதா கண் இரண்டையும் அகல விரித்து ஹமீதாவுக்கு  சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘எனக்கும் வர ஈந்திச்சிடீ…அநியாயம்.மருதோண்டிக்கலியாணத்துக்கே இப்டீண்டா வெடிங் எப்டியோ தெரியாவே…
ஹமீதாவிடமிருந்து ஏக்கப்பெருமூச்சு ஒன்று வெளிப்படுகிறது.
‘மியாமில தான் வெடிங்காம்…
போறத்துக்கு இப்பவே அபாயாக்கு நல்ல ஷோல் ஒண்டு வாங்கோணும்’
இது ரிஷாதா.
‘அதில்லடீ கிப்ட் என்னடி குடுக்குற….மாஹிராட ஸ்டேடஸுக்கு மாதிரி கோல்ட்ல என்ன சரி வாங்கோணும்.’ ஹமீதாவின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.
‘இல்லாட்டி…
ஜாதியா ஈக்கும்.ரெண்டு பேரும் வேற வேறயா வாங்குவொம்…இல்லாட்டி சரில்லடீ’ இது ரிஷாதா.
‘அது சரி அடுத்த கெழம பர்வீண்ட கலியாணம் அதுக்கு என்னடி குடுக்கிற?’
ஹமீதா முடிக்க முன்னரே…
‘ஐய்யோடி ..அது ஊட்டுல நிகாஹ் தானே.ரெண்டு பேரும் சேர்ந்து என்னமாவது சின்னதா பிரஸன் ட் பண்ணா சரிதானே’ரிஷாதா சுலபாக விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள்.

சம்பவம் 05
நெய்ச்சோறு,கோழிக்குருமா, மாட்டிறைச்சிப்பொறியல்,மாசிசம்பல் ,வெஜிடபள் சாலட் என படு அமர்க்களமாய் மேசை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
நாலு ஊருக்கு மணக்கும் அளவுக்கு பார்த்து பார்த்து சமைக்கப்பட்ட விருந்து.
டுபாயிலிருந்து விடுமுறைக்காக வந்திருக்கும்  மகனையும் மருமகளையும் விழுந்து விழுந்து உபசரித்துக்கொண்டிருக்கிறாள் நஸீஹா.
‘உம்மா….
உம்ம்மாஆஆ…
‘மகள் அந்த வட்லாப்பக் கப்ப நானாக்கு எடுத்து குடுங்கோ
முன்னுக்கு யாரோ பேசிற சத்தம் கேட்ட…நான் பார்த்திட்டு வாரென்’
வெளிநாட்டு சாரி சரசரக்க சுலைஹா ஹோலுக்கு வருகிறாள்.
‘திண்டு ரெண்டு நாளும்மா…எனக்கில்லட்டீம் பரவல்லும்மா…இந்தப் புள்ள ரெண்டுக்குமாவது கொஞ்சம் சாப்பாடு தாங்க சீதேவி’
நடுத்தர வயது பெண் தலையில் முக்காட்டை இழுத்து விட்டுக்கொள்கிறாள்.கூடவே ஒட்டி உலர்ந்த தேகத்துடன் நண்டும் சிண்டுமாக இரண்டு பிஞ்சுகள்.
‘இதுகளால பெரிய கரச்சல்…சரியா சாப்பாட்டு நேரத்துக்கு வார…’புறு புறுத்துக் கொண்டே போன சுலைஹா ப்ரிஜில் நேற்று மிஞ்சியிருந்த பழைய சோற்றை ஒரு சொப்பிங் பேக் உள்ளே கொட்டினாள்.

……………………………………………………………………………………………..
ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.
கண்ணீர் விட்டாலும் கவலைப்பட்டாலும் பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து பிறந்த எமது முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை இது தான்.
விரும்பியோ வெறுத்தோ,அஃலாக் எனும் நற்பண்பாடுகளுக்கு சாட்சியாக விளங்க வேண்டிய நாம் இன்று அதன் எதிர்மறை உதாரணமாகிப் போன அவலம் நேர்ந்திருக்கிறது.

இஸ்லாத்தின் இனிய தூது முஸ்லிம்கள் மாத்திரம் முதுசமாகப்பெற்ற தனிச்சொத்தல்ல.
அது முழு மனித சமுதாயத்துக்குமான வழி காட்டும் ஒளிவிளக்கு.
இஸ்லாத்தின் நோக்கத்தை சில அறிஞர்கள் இரண்டாக வகுக்கின்றனர்.

01.மனித உள்ளத்துக்கு ஆறுதலும் அமைதியும் அளிப்பது.
02.வாழும் பூமியை சாந்தியும் சுபீட்சமுமானதாக மாற்றுவது

இஸ்லாமிய ஆட்சி பற்றியதான கனவுகள் முதல் முதல் விதையாய் ஊன்றப்பட வேண்டியிருப்பது பண்படுத்தப்பட்ட உள்ளங்களில் தான்.எனவே தான் தொழுகை முதற்கொண்டு ஹஜ் வரையிலான இபாதாக்களின் எதிர்பார்க்கை பண்பட்ட இதயங்களாக அமைந்திருக்கின்றது.
இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு பண்பாட்டின் அடித்தளத்தில் எழுந்ததொன்றாகும்.ஒரு காலத்தில் தியாகமும் ,விட்டுக் கொடுப்பும் நம்பிக்கை,நாணயமும் எமது அடிமரத்தின் வேர்களாக இருந்திருக்கின்றன.
இன்றோ முஸ்லிம் என்றாலே ஏமாற்றும் பொய் புரட்டும் ,ஆடம்பர வாழ்க்கை முறையும் நாகரீகமில்லாத நடத்தையும் என்றாகிப் போன சோகம் நெஞ்சு சுடுகிறது.
முஸ்லிம்கள்  பல்லின சமூகங்களின் மத்தியில் வாழும் போது ஒரு சாரார் தனித்துவம் பேண அந்திய சமூகங்களிருந்து ஒதுங்கி ஓரமாய்ப் போய்  புறக்கணிப்புக்காளாவதும் இன்னொரு சாரார் ஏனைய சமூகங்களோடு ஒன்றி வாழ்தலில் தம் தனித்துவ அடையாளங்களையே தொலைத்து விட்டுத் தவிப்பதுமான இரண்டு நிலைமைகளை எதிர்நோக்குவதைக் காணலாம்.

கொள்கையை விலை பேசாத திடவுறுதியும் இஸ்லாமிய நடைமுறைகளில் அசையாத நம்பிக்கையும் கொண்ட  அதே நேரம் ஏனைய சமூகங்களோடு நல்லெண்ணத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளக்கூடிய தனிமனிதர்களே எமது பிரகாசமான நாளையின் சிற்பிகள்.

இஸ்லாம் அன்பை பற்றி அதிகம் பேசுகிறது.
படைத்தாளும் இறைவன்,வழிகாட்டிய இறைதூதர்,பெற்ற தாய் தந்தையர்,உயிரில் தாங்கி வளர்க்கும் வாரிசுகள்,இணைந்து வாழும் துணைவர்கள்,நெருங்கிய உறவுகள்,நேசம் பாராட்டும் நட்புக்கள் ,வாய்பேசா உயிரினங்கள்…
அனைத்தின் மீதும் நிபந்தனையற்ற அன்பு வைக்குமாறு இஸ்லாம் எங்களை ஆற்றுப்படுத்துகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியிலும் மனிதாபிமானத்தினையும் நற்பண்பாடுகளையும் போஷித்து வளர்க்கிறது.
நேரத்தை பேணல் என்பது முஸ்லிம்கள் தவற விட்டுச் சென்ற ஒரு புதையல்.
தன்னம்பிக்கையும் தன் காலில் நிற்கும் வலிமையும் எத்தனை சவால்களையும் எதிர்த்து நிற்கும் துணிவும் நிலைகுலையாமையும் எம் முதுகெலும்பாய் இருந்திருக்க வேண்டியவை.

ஆடம்பரமும் படாடோபமும் பெருமையும் இலங்கை முஸ்லிம்களின்  நிலாக்கால இரவுகளாக இருந்த காலம் போய் இப்போது அன்றாட வாழ்க்கையாகி விட்டிருக்கிறது.
ஒரு நாள் திருமணத்துக்காகவும் இரண்டு பெருநாட்களுக்காகவும் இறைக்கப்படும் பணத்தில் ஒரு குட்டி விமானமே வாங்கி விடலாம்.
வீடுகளைக் கட்டுவதில் காட்டும் நேர்த்தியையும் அவதானத்தையும் நாம் குணநலன்களை, பண்பாடுகளை கட்டியெழுப்புவதில் காட்டுவதில்லை என்பதே கசப்பாயினும் உண்மை.
‘முஸ்லிம் சமூகத்தை நம்ப முடியாது.அவர்கள் வியாபாரத்தில் மோசடி செய்வார்கள்.ஏமாற்றுவார்கள்’ என்றெல்லாம் முஸ்லிம்களின் செயற்பாடுகள் மீது கருப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளது.நெருப்பில்லாமல் புகைவதில்லை என்பது நமக்குத் தெரிந்த விடயம்.
மேலதிகமாக ஆங்கிலம் சார் சூழல்களிலும் பல்கலைக்கழகங்கள் ,வேலைத்தளங்களிலும் ‘நான் ஒரு முஸ்லிம்’என்ற தனித்துவத்தைக் காட்டிக் கொள்ள வெட்கப்படுபவர்களும் ,அதை விட ஒரு படி மேலே போய் தொழுகையையும் ,தலை மறைக்கும் ஹிஜாபையும் கூட துறந்தவர்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
சூழலைப் பாதுகாப்பது எப்படிப் போனாலும் அதனை மாசுபடுத்துவதில் முன்னிற்கிறது முஸ்லிம் சமுதாயம்.ஆற்றங்கரைகளின் ஓரத்தில் குவிந்திருக்கும் குப்பைகூளங்களுக்கும் ,சுற்றாடலைப் பாதிக்கும் தொழிற்சாலைக் கழிவுகளுக்குமாக நாளை மறுமையில் நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்?
மொத்தத்தில் இஸ்லாம் வலியுறுத்தும் தனிமனிதப்பண்பாடுகளை மட்டுமல்லாது ,
சமூகப்பண்பாடுகளையும் ஒழுக்க விழுமியங்களையும், சில அழுகல் கனிகளுக்கு ஆசைப்பட்டு குறைந்த விலைக்கு விற்று விட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது.
கண்ணுக்குப்புலப்படாதிருக்கும்
நெருப்பை
உன் புழுதியிலிருந்து
பெற்றுக்கொள்!
பிறரின் வெளிச்சம் நீ வைத்திருக்கத் தகுதியற்றது
அல்லாமா இக்பால்

ஒரே நாளில் விசேட செய்தியான ரிப்கா

சமீலா யூசுப் அலி

ரிப்கா பாரி
நேற்று அமெரிக்காவின் ஒரு மூலையில் குறிப்பிடத்தக்க எந்த விதமான முக்கியத்துவமும் இல்லாத நிலையில் வாழ்ந்திருந்த ஒரு இளம்பெண்.

ஒரே நாளில் சர்வதேச ஊடகங்களில் விசேட செய்தியாக அல்லது தலைப்புச்செய்தியாக பேசப்படும் அளவுக்கு என்ன சாதித்திருப்பார்?
ரிப்கா,
ஒரே நாளில் விற்றுத்தீர்க்கப்பட்ட புத்தகமொன்றினை எழுதினாரா?
இமயமலைச்சிகரத்தை குறைந்த நேரத்தில் ஏறி முடித்தாரா?
விஞ்ஞான உலகமே மூக்கில் விரல் வைக்கும் கண்டு பிடிப்பொன்றின் சொந்தக்காரியா?
இல்லை
உலகத்திலேயே அதிக வருமானம் பெறும் தொழில் வல்லமை வாய்ந்த பெண்ணா?
காண்போரையெல்லாம் அதிசயிக்கச் செய்யும் அற்புதம் ஏதாவது அவரது கைவரப்பெற்றிருக்கிறதா?
இல்லை.இல்லை
இவையெதுவுமே இல்லை.
ரிப்கா பாரி என்ற 17 வயதுப்பெண் இஸ்லாத்தை விட்டு விட்டு கிரிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டார்.மட்டுமல்லாது ஒஹையோவிலுள்ள தன் வீட்டை விட்டு வெளியேறி ப்ளோரிடாவில் உள்ள கிரிஸ்துவ மதபோதகர் ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.தன் தந்தை தன்னைக்கொலைசெய்து விடுவார் என அஞ்சுவதாகவும் இலங்கைக்கு அனுப்பினால் அங்கு தன்னை புனிதக்கொலை செய்து விடுவார்கள் என்றும் நடுங்கிய குரலில் ரிப்கா ஊடகவியலாளர்களிடம் கூறும் காணொளிப்படங்களை தொலைகாட்சி மற்றும் இணையப்பெருவெளியில் தாராளமாகக்காணலாம்.
ரிப்கா பாரி இலங்கையில் காலி நகரைச்சேர்ந்தவர்.தந்தை ஒரு இரத்தினக்கல் வர்த்தகர்.தாய் வீட்டில் திருமண ஆடைகள் தயாரிப்பவர்.15 வருடங்களாக அமெரிக்காவில் வேரூன்றி இருக்கும் இந்தக்குடும்பம் மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ரிப்கா பொய் கூறுகிறார்.
ரிப்கா மூளைச்சலவைக்குள்ளாகி உள்ளார்.
ரிப்கா சர்வதேச கிரிஸ்தவ மதப்பிரச்சார வலைப்பின்னல் ஒன்றுக்குள் மாட்டிக்கொண்டுள்ளார்.
ரிப்காவை அடிப்படைவாதிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்
ரிப்கா அடக்குமுறைக்குள்ளாகும் முஸ்லிம் பெண்கள் வெடித்து வெளிவருவதன் வெளிப்பாடு..

இவ்வாறானதும் இதற்கதிகமானதுமான கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட்டன.வெளியிட்டு வருகின்றன.
முஸ்லிம் சமூகமும் துள்ளி எழுந்திருக்கிறது.எமது சமூகத்தின் நீண்ட தூக்கம் கலைக்க இவ்வாறான அதிர்ச்சி சம்பவங்கள் இடைக்கிடை நடைபெற்றாக வேண்டும்.
சரி ரிப்கா பாரியை ஒரு புறத்தில் வைப்போம்.இந்த சம்பவம் பற்றி பேசும் போது மூன்று விடயங்களை நாம் சிந்திக்காமலிருக்க முடியாது.
1.ஊடகங்களின் நடுநிலையற்ற போக்கும் முஸ்லிம்களின் ஊடகத்துறையும்
2.தஃவாவில் நவீன உத்திகளின் தேவை
3.மேற்கில் வாழும் முஸ்லிம் இளைய சமுதாயத்தின் நிலை

மேற்கத்திய ஊடகங்களில் ஒரு சிலவற்றை விடுத்து அனேகமானவை பக்கச்சார்பானவையாகவே இருக்கின்றன.இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களே இவற்றில் அதிகமானவற்றின் அடிப்படையாக இருக்கின்றன.உலக ஒழுங்கைப் பொறுத்தவரையில் சக்தி அல்லது வல்லமையை அடைந்து கொள்வதே நாடுகளின் பிரதான நோக்கமாகி விட்டிருக்கிறது.அது ஆயுதம்,இயற்கை வளம்,அதிகாரம்,பணம்,தொழிநுட்பம்  அல்லது கட்டுக்கோப்பான மனிதவளம் என எதுவாகவும் இருக்கலாம்.
இறைவனை முன்னிறுத்தி செயற்படும் சில நாடுகளும் இஸ்லாமிய இயக்கங்களும்,கொள்கைவாதிகளும்,ஆதிக்கசக்திகளுக்கும் அவற்றின் சுரண்டல்களுக்கும் அடிபணிய மறுப்பதன் காரணத்தால் அவை அல்லது அவர்கள் நாடுகளுக்கிடையிலான பலப்பரீட்சையில் பயங்கரவாதிகள் அல்லது அடிப்படைவாதிகளாக இனங்காட்டப்படுகின்றன;இனங்காட்டப்படுகின்றனர்.
மறுபுறத்தில் ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் சிந்தனைப்போக்கையே மாற்றியமைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது மீடியா.ஒரு மான்குட்டியை சிங்கம் என நிறுவவும் ,ஒரு தக்காளிப்பழத்தை ஆப்பிள் என்று நம்ப வைக்கவும் ஊடகங்களால் முடியும்.குறிப்பாக மேற்கின் மீடியாக்கள் இந்த விடயத்தில் நம்பமுடியாத அளவு ஆக்கத்திறன் கொண்டவை.
மீடியாத்துறையைப்பொறுத்தளாவில் முஸ்லிம்களின் பிரவேசம் அபூர்வமாகவே நிகழ்கிறது.அதிலும் ஆக்கத்திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட ஊடகவியலாளகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ரிப்கா பாரி- இந்த தனியான சம்பவமும்,அதற்கு ஊடகங்கள் கொடுத்த கயிறு திரிப்புக்களும் நமக்கு உணர்த்தி நிற்கும் விடயங்களில் நமக்கான ஊடகத்தின் தேவையும் ஏனைய ஊடகங்களில் எமது  திறமையான பங்களிப்பின் அத்தியாவசியமும் ஆழமான சிந்தனைக்குரியவை.இங்கு பெண்ணின் குரலின் அவ்ரத்தா இல்லையா போன்ற அடிப்படையான விவாதிப்புக்களை விடுத்து,சமூகத்தின் இரு பாதிகளினதும் பங்குபற்றல் முக்கியமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக எமது தஃவாமுறைமையில் வர வேண்டிய ஆக்கபூர்வமான மாற்றங்கள் மற்றும் புதிய உத்திகள் பற்றியதான பரவலான கவனயீர்ப்பு அத்தியாவசியப்படுகிறது.
இன்றைய எமது சமூகத்தில் தஃவா சிலபோதுகளில் மிகக்கடூரமாகவும் கவர்ச்சியற்ற விதத்திலும் முன்வைக்கப்படுகிறது.
அல்லாஹ்வின் அன்பை விட தண்டனைகளே கோடிட்டுக்காட்டப்படுகின்றன.இஸ்லாத்தைப்பொறுத்தவரை ஹராமான விடயங்கள் மிகச்சிறிய பகுதியாகும்.அவை இன்னவை தான் என தெளிவாக அல்குர் ஆனிலும் சுன்னாவிலும் வரையறுக்கப்பட்டுள்ளன..அவை தவிர்ந்த மற்ற அனைத்துமே ஹலால்;ஆகுமானவை.ஆனால் இன்றைய எமது தஃவா பாவங்களுக்கான தண்டனையையும் நரக வேதனையையும் சொல்லி மக்களது மனங்களை அச்சமூட்டும் அளவிற்கு இறைவனின் அதீதமான அன்பையோ அல்லது இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மையையோ சொல்லி ஆர்வமூட்டுவதில்லை.இஸ்லாம் இயற்கையாகவே மனிதன் இலகுவாகப்பின்பற்றக்கூடிய மார்க்கம்.இஸ்லாத்தில் உள்ளங்களைக்கவரக்கூடிய ஏராளமான விடயங்கள் உள்ளன.இதனை தாஈக்களான நாம் எவ்வாறு எந்தவிதமான வழிகளில் சமூகத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்பதே மில்லியன் டொலர் கேள்வி.
கிரிஸ்தவ மார்க்கத்தைப்பொறுத்தவரை அன்பையும் ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு மக்களை எப்படி கவர்ந்திழுப்பது என்பது பற்றியான ஏராளமான அறிவூட்டல்களும் பயிற்சிநெறிகளும் போதகர்களுக்கு வழங்கப்படுகின்றன.இனிமையான பேச்சும் நம்பிக்கையூட்டும் தெம்பும் அதிநவீன உத்திகளும் கிரிஸ்தவ பிரச்சாரகர்களின் சிறப்பம்சங்களாகும்.
நம்மத்தியில் இஸ்லாத்தின் தூதைக்கொண்டு செல்வதில் இன்னும் அழகான வழிகள்,ஆக்கபூர்வமான முறைகள் கையாளப்படுவதிலுள்ள சாத்தியங்கள் பற்றி திறந்தமனதுடன் ஆராய்ந்தறிவதற்கு இந்த சம்பவம் அடிகோலியிருக்கிறது.
இங்கு இன்னும் ஆழமாக உற்றுநோக்க வேண்டியிருக்கும் அடுத்த விடயம் மேற்கில் வாழும் எமது இளைய சமுதாயத்தின் நிலைஆகும்.
உலகின் எந்தப்பிரதேசமும் இறைவனின் ஆட்சிப்பிரதேசமே.
முஸ்லிம் சமூகம் ஒரு தேசியத்துக்கோ அல்லது ஒரு எல்லைக்கோட்டுக்கோ சொந்தமானது அல்ல.பூமியின் எல்லா இடங்களுக்கும் பரந்து சென்று அல்லாஹ்வின் அற்புதங்களைக்கண்டு வருமாறு இஸ்லாம் எங்களுக்கு கூறுகிறது.
எனினும் இன்று எமது சமூகம் வெளிநாட்டு வாழ்க்கைஎன்ற மூளைச்சலவைக்குள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களைப்பற்றி ஓர் உயர்வான அபிப்பிராயம் நிலவுகிறது.இதன் தீவிரம் எந்தளவுக்குச்செல்கிறது என்றால் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர், மேற்குநாட்டு பிரஜாவுரிமை பெற்ற மாப்பிள்ளை என்றால் வேறெதனையுமே யோசிப்பத்தில்லை;திருமணம் முடித்துக் கொடுத்து விடுகின்றனர்.இதற்காக மேற்கத்திய நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் சடவாதிகள் என்று ஒட்டுமொத்தமாகக் கூறுவதற்கில்லை.மேற்கிலிருந்து தான் இஸ்லாமியச்சூரியன் மீண்டும் அதன் பூரணவடிவத்துடனும் பிரகாசத்துடனும் உதயமாகிறது என்ற உண்மை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை விதைக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் வாழும் எமது இளைய சமுதாயத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அசாத்தியமான தேடல்கள் எதுவும் தேவையில்லை.
இணைய வீதியில் ஒரு பதினைந்து நிமிட உலா போதும்.
மேற்கத்திய சடவாத சிந்தனையின் ஆக்கிரமிப்புக்காளாகியிருக்கும் எமது இளைஞர்களின் வாழ்க்கைமுறைக்கும் வேற்று மத இளைஞர்களின் வாழ்க்கைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.
ரிப்கா பாரி பகிரங்கமாக கிரிஸ்த்தவ மார்க்கத்தைத் தழுவிகொண்டார்.
ஆனால் எத்தனை ரிப்கா பாரிக்கள் உள்ளத்தில் கிரிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வெளியில் முஸ்லிம் அடையாளங்களுடன் வலம் வருகிறார்கள் என்பது எமக்குத் தெரியாது.
எத்தனை பேருடைய உள்ளத்தில் மேற்குக்கலாச்சாரம் தெய்வமாய் வேரூன்றி இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை.
பக்குவமாய் பண்பாடாய் இருக்க வேண்டிய எமது இளம் பெண்களில் எத்தனை பேர் ஹிஜாபைத் தூக்கி எறிந்து விட்டு அரை குறை ஆடைகளுடன் திரிகின்றனர் என்பது எமது கவனத்துக்கு வருவதில்லை.
ரிப்கா பாரி வெள்ளியிலான சிலுவை ஒன்றை கழுத்து மாலையில் தொங்க விட்டிருந்தார்.
அதைப்பற்றி நாம் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்துகிறோம்.
முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் உள்ளத்தில் சுமந்திருக்கும் தொட்டுணர முடியாத சிலுவைகளைப்பற்றி எத்தனை சதவீதம் நாம் சிந்திக்கிறோம்?
இங்கு ஒட்டு மொத்தமாக இளைஞர்களை மட்டும் சுட்டுவிரல் நீட்டிக்குற்றம் சாட்டிவிட முடியாது.
இஸ்லாமியக்கலாச்சாரத்தையே மறக்கடிக்கச் செய்து கல்வி,தொழில்,திருமணம் என்று எதையாவது காரணமாக வைத்து
பிள்ளைகளை நவீன சடவாதத்துக்குத் தாரைவார்த்துள்ள பெற்றோர்கள் இறைவனின் நீதிமன்றத்தில் விசாரணைக்குரியவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாது எமது தேசத்திலும் கூட சடவாதசிந்தனையில் தோய்த்தெடுத்த முஸ்லிம் பெற்றோர் இல்லாமலில்லை.வேறெதுவும் தேவையில்லை தன் பிள்ளை டொக்டர் ஆக வேண்டும் அல்லது பொறியியலாளராக வேண்டும் என்பதற்காய் எந்த நாட்டுக்குக்காவது போய் எதை இழந்தாவது படி என்ற மனோநிலையில் உள்ள  தாய்,தந்தைமாரும் எம்மிடையே இருக்கின்றனர்.
இவையெல்லாம் சிந்தனைக்குரியவையே.
ரிப்கா பாரி கிரிஸ்தவத்துக்கு மாறினார் என்பது கசப்பான உண்மை தான்;எனினும் இதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமே இல்லை.
இந்த சம்பவத்தில் இஸ்லாத்துக்கெதிரான திட்டமிடப்பட்ட சதியொன்றில் குறித்த கிரிஸ்தவ பிரச்சார அமைப்பு ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படிகிறது.
அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மனித இனத்தை வளப்படுத்தும் பணிக்காக உலகிற்கு அனுப்பப்பட்ட முஸ்லிம் சமூகம்,
இந்தச்சம்பவத்தை ஒட்டி உணர்ச்சிவசப்பட்டு  பொங்கி எழுவதை விட
நீண்டகால நோக்கில் சிந்தித்து செயற்படுவதே அறிவுபூர்வமானது.

நீண்டு நெடித்தோடும் ஆறு, தேங்கி நாற்றமெடுக்கக்கூடாது!!!

 



சமீலா யூசுப் அலி

Dr Siham Kardhawi









இஸ்லாமிய இயக்கம் ஆரம்பித்து பல்லாண்டுகள் கடந்தாலும் சடவாதச்சிந்தனைகளைக்கும் மாக்ஸிசப்போக்குகளுக்கும் தனியொருவளாகவும் வினைத்திறனுடனும் முகங்கொடுக்கக்கூடிய பெண் தலைமைத்துவம் இன்னுமே வெளிவரவில்லை.பெண்கள் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆண்களின் இரக்கமற்ற முயற்சிகளின் விளைவே இது.ஏனெனில் பெண்கள் அவர்களை வெளிப்படுத்த ,அவர்களது விசேட தலைமைத்துவ ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்காட்ட அல்லது ஆண்களின் ஆதிக்கம் இல்லாது பெண்கள் தமது வேலைகளை தாமே முன்னெடுத்துச்செல்லும் வல்லமையை நிரூபிக்க ஆண்கள் ஒரு போதும் உண்மையான வாய்ப்புக்களை வழங்கவில்லை.பெண்களின் இஸ்லாமியப்பணி வெற்றிபெறுவதற்கும் இஸ்லாமிய இயக்கத்தில் நீடித்திருக்கவும் ,இஸ்லாமிய இயக்கம் பெண் தலைமைகளை பிரசவிப்பது கட்டாயமாகி விடுகிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.பெண் தலைவர்கள் அழைப்புப்பணி,சிந்தனை,அறிவியல்,இலக்கியம்,கல்வி போன்ற அனைத்துத்துறைகளிலும் தோன்ற வேண்டும்.ஆண்களைப்போலவே பெண்களும் இறைவனுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்ய முடியும்.உயிர்த்தியாகத்தாக்குதலில் பெண்கள் முன் செல்லலாம்.அது முடியாத ஒரு வேலையோ அல்லது கடினமான ஒரு பணியோ அல்ல.அபரிமிதான அறிவுடைய ஆண்களும் இருக்கிறார்கள் பெண்களும் இருக்கிறார்கள்.அறிவும் புத்தாக்கத்திறனும் ஆண்களுடைய தனியுரிமை அல்ல.
அல்குர்ஆனில் அல்லாஹ் ,தனது மக்களை அறிவுடனும் வீரத்துடனும் வழிநடாத்திய சேபாவின் அரசியைப் பற்றி வீ’ணுக்காக சொல்லவில்லை.”
பெண்களின் சமூகப்பங்களிப்பு பற்றி கலாநிதி யூசுப் அல் கர்ழாவியின் சிந்தனையிலிருந்து சிதறிய சில துளிகள் இவை.
பெண்களை கண்ணியத்தையும் மரியாதையையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வியல் மட்டுமல்லாது சமூகவியல்,அரசியல்,அறிவியல் துறைகளிகளும் தனித்துவமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது டொக்டர் யூசுப் அல் கர்ளாவியின் வஹியின் அடியில் எழுகின்ற சிந்தனை.
1926 இல் எகிப்தின் குக்கிராமொன்றில் குடியானவப் பெற்றோர்களின் மடியில் தவழ்ந்த ஒரு குழந்தை இன்று வல்லரசுகளின் அடிநெஞ்சுக்கு நெருப்பு வைக்கும் வைகறைச்சூரியனாக எழுந்து நிற்கிறது,புகழனைத்தும் இறைவனுக்கே.
எட்டுத்திசைக்கும் ஒளி கொடுக்கும் நிலவை வீட்டு விளக்குக்குள் அடைக்க முடியாது.பெண்களின் பங்களிப்பை மறுத்து விட்டோ அல்லது மறந்து விட்டோ எந்தவோரு புரட்சியும் இஸ்லாமிய எழுச்சியும் சாத்தியமில்லை.
பெண்களின் பங்களிப்பினையும் முன்னேற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பற்றி மேடைகளில் முழங்கும் பீரங்கிகள் தம் பெண்கள் என்று வரும் போது வெறும் புஸ்வானமாய் போய்விடும் அவலம் அன்றாடம் காண்கிறோம்.
ஆக்ரோஷமாய் எழுதும் பேனாக்கள் கூட தன் மகள்,தன் மனைவி அல்லது தன் சகோதரி என்று வரும் போது ‘எதற்கு மேற்படிப்பு…. வம்பை வளர்க்காமல் வீட்டுக்குள் முடங்கு’ என்ற வசனங்கள் உதிர்ப்பது தான் வழமை.
பெண்ணின் தனித்துவத்தை மதித்து அவளது சமூகப்பங்களிப்பின் எல்லைகளை கண்காணத்தூரம் வரை விஸ்தரித்த கர்ளாவி அவர்கள் தன் பேச்சுக்கும் எழுத்துக்கும் வாழும் உதாரணமாக இருப்பது மிக மிக சந்தோசம் தருகிறது.
‘ஊருக்குத்தான் உபதேசம் உனகல்லடி மகளே” என்று வெறும் வாய்ச்சொல்லோடு நிறுத்தி விடாமல் தன் மகள்களை சாதனையின் எல்லை வரை பறந்து செல்ல சிறகுகள் வழங்கியிருக்கிறார் கர்ளாவி அவர்கள்.பேராசிரியர் டொக்டர் இல்ஹாம் கர்ளாவியும் டொக்டர் ஷிஹாம் கர்ளாவியும் ஒரு வரலாறு படைத்த தந்தைக்குப் பிறக்கும் பேறு பெற்றவர்கள்.
டொக்டர் இல்ஹாம் கர்ளாவி சர்வதேசரீதியில் அறியப்படும் ஓர் அணுவியல் விஞ்ஞானி.தற்போது கத்தார் பல்கலைக்கழகத்தில் அணுப் பெளதீகவியல் பேராசிரியராக பணியாற்றும் அவர்,தனது கலாநிதிப்பட்டத்தை (Ph.D.) லண்டன் பல்கலைக்கழத்திலிருந்து 1991 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.அவரது டொக்டர் பட்டத்திற்கான ஆய்வு பொசிட்ரொன் பெளதீகவியல் (Positron Physics) ஆகவிருந்தது.
பின்னாளில் டொக்டர் இல்ஹாம் ,கத்தார் பல்கலைக்கழகத்தில் பொசிட்ரொன் உத்தியை பயன்படுத்தும் ஆய்வு கூடத்தை நிறுவுவதற்காக தன் உடல் வருத்தி உழைத்தார்.மத்தியகிழக்கிலேயே முதன்முறையாக ‘மெது பொசிட்ரொன் கதிர் சக்தி மாறியை” அமைக்கும் பெருமை அவர் காலடியில் விழுந்தது,அல்ஹம்துலில்லாஹ்.இன்று முறையாக நிறுவப்பட்ட பொசிட்ரொன் ஆய்வு கூடத்தை நடாத்தி வரும் டொக்டர் இல்ஹாம் 2005 ஆண்டில் ‘மெது பொசிட்ரொன் கதிர்கள் ‘சம்பந்தமான ஒரு சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்து தலைமை வகித்தார். கத்தார் பல்கலைக்கழகத்தின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வுக்கான விருதும் 2008 இல் அறிவியலுக்கு பங்களித்த அறபுப்பெண்களுக்கான அஹ்மத் பதீப் விருதும் அவர் வீடு தேடி விசாரித்த குறிப்பிடத்தக்க அங்கீகாரங்கள்.
தேசிய,பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் பலதரப்பட்ட ஆய்வு முயற்சிகளில் சம்பந்தப்பட்டிருக்கும் இல்ஹாம் கர்ளாவி அவர்கள் பல்வேறு சர்வதேச விஞ்ஞான அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பது உபரிச்செய்தி.
அணு மற்றும் அது சார்ந்ததுறைகளில் சர்வதேச அரங்கில் கத்தாரைப்பிரதிநிதித்துவப்படுத்திவரும் டொக்டர் இல்ஹாம் அவர்கள் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் ஓர் அழகிய உதாரணம்.
அபரிமிதமான ஆர்வமும் தன்னம்பிக்கையும் புத்தாக்க வேட்கையும் இல்ஹாம் அல் கர்ளாவியின் இரத்தத்தில் ஓடுபவை.பெளதீகவியல் துறையை கற்பிப்பதற்கான திறன்களை முன்னேற்றுவதற்காக தன்னை உருக்கிக்கொண்டு உழைக்கும் இல்ஹாம் “கத்தார் பெளதீகவியல் அமைப்பி”னை நிறுவி அதனூடாக ஏராளமான பயிற்சிப்பட்டறைகளையும் பாடநெறிகளையும் நடாத்திவருகிறார்.

முஸ்லிம் உலகின் ஆன்மீகத்தலைவராக அறியப்படும் கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் இன்னொரு புதல்வி டொக்டர் சிஹாம் அல் கர்ளாவி ; சாதனை வானில் ஒளிவிடும்
இன்னொரு நட்சத்திரம். தற்போது கத்தார் விஞ்ஞான மற்றும் கலைகளுக்கான கல்லூரியின் டீனாகப் பணிபுரியும் டொக்டர் சிஹாம் கர்ளாவி அதற்கு முன்னர் கத்தார் அகடமியின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கத்தார் விஞ்ஞான மற்றும் கலைக்களுக்கான கல்லூரியின் இரசாயனவியல் துறைத்தலைவராகவும் மட்டுமல்லாது மாணவர் விவகாரங்களுக்கான  இணைத்தலைவராகவும் இயங்கியிருக்கும் ஒரு சாதனைப்பெண்.
கத்தார் பல்கலைக்கழகத்தில் 1981 ஆம் ஆண்டு  இரசாயனவியலில் முதற்பட்டம் பெற்ற டொக்டர் சிஹாம் கெய்ரோவின் புகழ் வாய்ந்த  “ஐய்ன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது M.Sc முதுமானிப்பட்டத்தைத்தொடர்ந்தார்.தனது கலாநிதிப்பட்டத்துக்காக 1987 இல் ஐக்கிய இராச்சியத்தின் பெர்க்செயர் பல்கலைக்கழகத்தோடு இணைந்தார்.டொக்டர் சிஹாம் அல் கர்ளாவி 1992 இலிருந்து 1994 வரை கத்தார் பல்கலைக்கழத்தின் இரசாயனவியல் இணைப்பேராசிரியராக தன் தனித்துவமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்,அல்ஹம்துலில்லாஹ்.

2003 இல் டாட் “DAAD” (Deutscher Akademischer Austausch Dienst) என்ற விருது சிஹாமின் கதவுகளைத்  தட்டியது.17க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளைச் (இவை synthetic organic chemistry and photochemistry சம்பந்தமானவை) சொந்தம் கொண்டாடும் விரல்கள் டொக்டர் சிஹாமுக்குரியவை.


பெண்ணின் தனித்துவத்தை மதித்து அவளது சமூகப்பங்களிப்பின் எல்லைகளை கண்காணத்தூரம் வரை விஸ்தரித்த கர்ளாவி அவர்கள் தன் பேச்சுக்கும் எழுத்துக்கும் வாழும் உதாரணமாக இருப்பது மிக மிக சந்தோசம் தருகிறது.
எகிப்தில் எழுந்த இஸ்லாமிய எழுச்சிப்புயல் இனி உலகின் மூலை முடுக்கெங்கும் தன் காலடிச்சுவடுகள் பதிக்கத்தான் போகின்றது.இஸ்லாமிய இயக்க ஒழுங்குகளில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என இஸ்லாமிய ஆய்வாளர்களும் அறிஞர்களும் தம் கருத்துப் பகிர்கிறார்கள்.
இலங்கை மண்ணும் இஸ்லாமிய இயக்கமும் ஆரோக்கியமான பெண் ஆளுமைகளை வேண்டி நிற்கிறது.சில போலித்தனமான பிடிவாதங்கள்,வீணான வாதப்பிரதிவாதங்களுக்கு மேலால் நாம் எழுந்து நிற்க வேண்டிய தேவை வலுத்திருக்கிறது.
ஆண் தலைமையே வரவில்லை;இங்கு பெண் தலைமை பற்றிப் பேசுகிறார்கள் என் சிலர் குசுகுசுப்பது காதில் விழாமலில்லை.ஆண்கள் உருவாகித்தான் பெண்கள் உருவாக வேண்டும் என்றிருந்தால் முஸ்லிம் சமூகம் பாதி செயலிழந்த உடலாய் வாழவேண்டிய வேதனை வந்து விடும்.
இந்தப்பாதை அல்லாஹ்வின் பாதை.
பதியும் எம் பாதங்களின் வலிமைக்கும் பொறுமைக்கும் பால்வேறுபாடு இல்லை.
சுவனத்தை நோக்கி நீண்டு நெடித்தோடும் ஆறு, ஓரிடத்தில் தேங்கி நாற்றமெடுக்கும் தேவையில்லை.
அழகிய கூலி அர்ப்பணத்திற்கும் அழியாத நோக்கத்திற்கும் தான்.
செல்வோம்
உள்ளத்தில் அல்லாஹ்வை சுமந்து செல்வோம்.

Prof Ilham Kardhawi

அச்சு ஊடகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு –ஒரு பார்வை


உலகம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது.10 ஆண்டுகளுக்கு முன் எம்மால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத பல விடயங்களை
அறிவியல் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று சாத்தியமாக்கி விட்டது.சாதாரணமாய் நகர்ந்து கொண்டிருந்த எமது வாழ்க்கை முறையை, இந்த நூற்றாண்டின் இலத்திரனியல் புரட்சி அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.
இதழியல் மற்றும் பொதுஜன ஊடகத்துறையின் அபிவிருத்தி ஒரு பக்கம் திகைப்பூட்டக்கூடிய அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.மறுபுறம் ஊடகங்களினூடாக கட்டற்ற தகவல் பரிமாற்றமும் அதனூடான பயங்கரமானதொரு கலாச்சாரச் சீரழிவும் எமது விழிகளை விரியச்செய்துள்ளன.
பொதுஜன ஊடகத்துறை( Mass Media ) எனும் போது

ü  அச்சு ஊடகம் Print Media
ü  இலத்திரனியல் ஊடகம் Electronic Media
ü  புதிய ஊடகம் New Media/E Media

என வரிசைப்படுத்தலாம்.
அச்சு ஊடகத்தில் பத்திரிகை,சஞ்சிகை,துண்டுப்பிரசுரங்கள்,சிறப்பு மலர்கள் போன்றவை உள்ளடங்கும்.
வானொலி,தொலைக்காட்சி மற்றும் சினிமா ஆகியவை இலத்திரனியல் ஊடகங்களாகும்.
புதிய ஊடகம் அல்லது ஈ ஊடகம் எனும் போது அது இணையத்தளங்கள்,இணையப்பத்திரிகைகளிருந்து தொடங்கி பிரத்தியேக வலைப்பூக்கள்(Blogs) வரையிலான இணைய வீதியில் கிடைக்கும் அனைத்து கருத்து வெளிப்பாட்டு வடிவங்களையும் குறிக்கும்.

இதழியல் பற்றி “நீங்கள் கவனமாக இருக்கா விட்டால் பத்திரிகைகள் உங்களை அநியாயத்திற்குள்ளாக்கப்படுபவர்களை வெறுக்கவும்,அநியாயம் செய்பவர்களை விரும்பவும் வைத்து விடும்”என்று மால்கம் x ஒரு முறை கூறினார்.

ஊடகங்கள் மனித வாழ்வில் அதிக தாக்கம் செலுத்துகின்றன.வெகுஜன ஊடகங்களின் வழிமுறைகள் வித்தியாசமாக இருக்கலாம்.ஆனால் அனேகமாக அவற்றின் நோக்கங்கள் வரையறுக்கப்பட்டவை.

1.   தகவல் வழங்கல்   Information
2.   அறிவுறுத்தல் Instruction
3.   களிப்பூட்டல் Entertainment
4.   விளம்பரப்படுத்தல் Advertisement
5.   கருத்து உருவாக்கம் Shaping Opinion

அச்சு ஊடகங்களுக்கு பெண்கள் வழங்கக்கூடிய பங்களிப்பு எனும் போது அது தனிமனித ஆர்வத்தையும் ஆற்றலையும் பொறுத்து பல்வேறு நிறங்களை எடுக்கலாம்.
ú  வெளிவரும் அச்சு ஊடகங்களை வாசிப்பது
ú  அச்சு ஊடகங்களுக்காக எழுதுவது
ú  அச்சு ஊடகங்களில் வடிவமைப்பு,செம்மைப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்தல்.
ú  அச்சு ஊடகங்களின் விற்பனை நடவடிக்கைகளில் பங்கெடுப்பது.

இலங்கை முஸ்லிம் பெண்களின் அச்சு ஊடகங்களுக்கான பங்களிப்பு கடந்த தசாப்தங்களில் எவ்வாறிருந்தது என்பதை ஒரு கணம் திரும்பிப்பார்ப்போம்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம் பெண்களில் சுமார் 3% இனர் மாத்திரமே எழுத வாசிக்கத்தெரிந்திருந்தனர் என்கிறது ஒரு ஆய்வு.(நன்றி ‘இலங்கையில் முஸ்லிம் கல்வி’ நூல்)
ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களின் வாசிப்பார்வம் குறைந்திருந்ததோடு மிகக்குறுகிய வானமே அவர்களின் எல்லையாக மாறிவிட்டிருந்தது.சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் மேலைத்தேயக்கல்வி கிரிஸ்தவ போதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் அது முஸ்லிம்களின் கலாச்சார விழுமியங்களில் மாறாத வடுக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.எல்லாக் காலங்களிலும் குர் ஆன் மத்ரஸா முறை அமுலில் இருந்ததால் முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானோர் அரபு மொழியில் எழுதவும் வாசிக்கவுமான ஆற்றலைப்பெற்றிருந்தனர்.

தேசம் அடிமைத்தளையிலிருந்த விடுதலைப்பெற்ற பொழுதுகளில் இலவசக்கல்வியின் அறிமுகமும்,பெண்கல்வி பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தின் கண்களை திறக்கச்செய்தன.வாசிப்பார்வம் அதிகரித்தது.
எனினும் சுதந்திரமடைந்து ஆறு தசாப்தங்கள் கடந்தும் இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப்பங்களிப்பு திருப்திகரமான மட்டத்தில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
செயற்கைக் கோள் தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு குக்கிராமத்தின் மூலையிலிருந்து கொண்டே பல்வேறு தேசங்களின் தொலைக்காட்சி அலைவரிசைகளை கால் நீட்டி இரசிக்கும் வரம் வாய்த்திருக்கிறது.அது வரமா சாபமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.சின்னத்திரை நாடகங்களிலும் சமையற்கலை நிகழ்ச்சிகளிலும் சிக்கிக்கொண்டுள்ள நம் பெண்கள்,அச்சு ஊடகங்களிருந்து இன்னும் அந்நியமாகி வரும் அவலம் நேர்ந்துள்ளது. அச்சு ஊடகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பைத் தீர்மானிக்கும் சில காரணிகளை இவ்வாறு அடையாளப்படுத்தலாம்.

ü  கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
ü  தகவல் மூலங்களை அணுகுவதற்கான சுதந்திரம்
ü  பொருளாதாரப்பின்னணி
ü  கல்வி மட்டம்
ü  அமைதியான வீட்டுச்சூழல்
ü  அமையும் ஓய்வு நேரத்தின் அளவு
ü  சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும் அழுத்தங்களும்
ü  சரியான பயிற்றுவிப்பும் வழிகாட்டலும்
ü  நவீன உலகம் மற்றும் வெகுஜன ஊடகங்களுடனான தொடர்பு
ü  தனிப்பட்ட ஆர்வம்
ü  தேடல்

கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்

ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை இலங்கை வாழ் எமக்கெல்லாம் இருக்கிறதா என்பது இன்னுமே வினாக்குறியாய்த் தான் விறைத்து நிற்கிறது. பால் வேறுபாடின்றி ஊடகவியலாளர்கள் வன்முறைக்காளாகும் முன்னணி தேசமாக நம் தேசம் உருமாறியிருக்கிறது.
ஒரு கருத்து - அது சரியா பிழையா என்பது இரண்டாவது விடயம், அதை வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.கருத்து வெளிப்பாட்டை அனுமதிக்காத பட்சத்தில் அவை கூடாத இடங்களில் வெடித்து வெளிவரும் அபாயம் இருக்கிறது.ஒவ்வொரு அச்சு ஊடகத்திற்கும் ஒரு கொள்கை இருக்கும்,ஒரு நோக்கு இருக்கும்.பெண்களின் சமூக வாழ்வியல் பல்வேறு பரிணாமங்களை எடுத்து வரும் போது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்திற்கு நியாயமற்ற தடைகளை அச்சு ஊடகங்கள் விதிக்கக்கூடாது.அண்மையில் ஒரு ஆய்வுக்காக பெண்கள் ஏன் அதிகம் சமையலைப் பற்றியும் அலங்காரக்கலை பற்றியும் அதிகமாக எழுதுகிறார்கள் அல்லது வாசிக்கிறார்கள் என்று கலந்துரையாடிய நேரம் சுவையான விளக்கங்கள் சில வெளிச்சத்துக்கு வந்தன.
பெண்கள் அரசியல்,கல்வி,பொருளாதார மேம்பாடு அல்லது சமுதாயப்பிரச்சினைகள் பற்றி எழுதும் போது எமது சமூகம் அவர்களை’பெண்ணியல் வாதி’என முத்திரை குத்தி விடுகிறார்கள்.
பெண்ணியல்வாதி என அழைக்கப்படுவதை பல பெண்கள் விரும்புவதில்லை.இதனால் நமக்கெதுக்கு வீண் வம்பு என சாதாரணமான விடயங்களை மாத்திரம் பட்டும் படாமலும் எழுதி விட்டுச்சென்று விடுகின்றனர்.
இன்னும் சிலர் எழுதப்படும் விடயங்களை எழுத்தாளரின் வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தி பார்க்கின்ற அதிமேதாவித்தனத்தைச் செய்கின்றனர்,பெரும்பாலும் இந்த விபத்து பெண் எழுத்தாளர்களுக்கே நேர்கிறது.சில விடயங்களை எழுத நினைத்தாலும் இதை நம் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பார்களோ என்ற பயம் பலரது பேனாக்களைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் சஹாபாக்களுக்கு கற்பிப்பவராக இருந்தார்.கவிதையிலும் மருத்துவத்துறையிலும் செம்மையான தேர்ச்சி கண்டிருந்த ஆயிஷா( ரழி) அவர்கள் பெண் என்பதாலோ அல்லது வயது குறைந்தவர் என்பதாலோ அவரது அறிவும் முதிர்ச்சியும் புறக்கணிப்புக்காளாகவில்லை.
பெண் என்றவுடனேயே எழுத்தின் தரம் பற்றிய ஐயப்பாடுகள் எழுகின்றன.ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.இதற்கு முழுமையாக அச்சு ஊடகங்களை நோக்கி சுட்டு விரல் நீட்டி விட முடியாது.பெண்களின் வாசிப்பு ஒரு அட்டைப்பெட்டிக்குள் அடங்கிப்போய் விட்டதால்எழுத்துக்களின் வீரியமும் வீச்சும் கணிசமாகக் குறைந்துள்ளது என்ற உண்மையும் மறுபுறம் உறுத்துகிறது.

தகவல் மூலங்களை அணுகுவதற்கான சுதந்திரம்

தகவல் மூலங்களை அணுகுவதற்கான சுதந்திரம்(Access to all sources of information ) எனும் போது தகவல்களைப்பெறக்கூடிய் அனைத்து மூலங்களையும் ஊடகங்களையும் தடையின்றி பயன்படுத்தக்கூடிய சக்தியைக்குறிக்கும்.இணையம் இந்த நூற்றாண்டின் அலாவுதீன் பூதம்.‘தகவல் வெடிப்பு’(Information Explosion)  ஏற்படக் காரணமாய் அமைந்த நினைக்க முடியாதளவு தகவல்களை உள்ளடக்கிய சுரங்கம்.
இன்று எத்தனை பெண்களுக்கு இணைய வீதிகளில் உலவும் வாய்ப்பு கிடைக்கிறது? அதை விடுவோம்.அன்றாடப் பத்திரிகைகள்,மாதாந்த சஞ்சிகைகள், மற்றும் சமகாலப்பிரச்சினைகள் பற்றிய நூல்களின் கிடைப்பனவு அல்லது பொது நூலகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு பெண்களுக்கு போதுமானளவு கிடைக்கிறதா?

பொருளாதாரப்பின்னணியும் கல்விமட்டமும்

பொருளாதாரப்பின்னணியும் கல்விமட்டமும் ஓரளவு பெண்களின் ஊடகப் பங்களிப்பைத் தீர்மானிக்கின்ற காரணிகளாக அடையாளங்காணப்பட்டாலும் அவை குறிப்பிடத்தக்களவு செல்வாக்கான அம்சங்கள் அல்ல.

அமைதியான வீட்டுச்சூழல்

அமைதியான வீட்டுச்சூழல் எனும் போது பலருக்கும் சப்தம் அற்ற மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படும் வீடுகள் நினைவுக்கு வரும்.பிரச்சினைகள் எல்லோருடைய வாழ்விலும் வெவ்வேறு முகமூடிகளுடன் தோற்றமளிக்கும்.பாகிஸ்தான் இந்தியாவாய் மோதிக்கொள்ளும் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என பலர் அங்கலாய்ப்பது காதுகளுக்கு கேட்காமலில்லை.வீட்டுப்பிரச்சினைகள் முடியட்டும்,குழந்தைகள் கொஞ்சம் வளரட்டும் என்றெல்லாம் வாசிப்பதையும் எழுதுவதையும் ஒத்திப்போடுங்கள்.காதோரமாய் தலை நரைத்து பேரன் பேத்திகளும் பிறந்த பிறகும் இதே பல்லவி தொடரும்.அமைதியான சூழலை என்பது மனதுக்குள் முதலில் நட வேண்டும்.அதன் பின்னர் தான் வெளியில் அவை கிளை விரிக்கும்.பிரச்சினைகளும் மன அழுத்தமும் முதுகு முறிக்கும் நேரத்தில் தான் எழுத்து வடிகாலாகிறது;தரமாய் எழுத முடிகிறது என்று கூறும் பெண்கள் அதிஷ்டசாலிகள்,
ஓய்வு நேரம் தானாக அமைவதில்லை.அதை நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.வீட்டிலும் வெளியிலும் எமது நேரத்தை இலக்குடன் திட்டமிட்டுக்கொள்வது பிரத்தியேகமாக ஒவ்வொரு பெண்ணினதும் செயற்றிரனிலும் குடும்பத்தின் ஒத்துழைப்பிலும் தங்கியுள்ளது.

சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும் அழுத்தங்களும்

சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும் அழுத்தங்களும் அச்சு ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பின் மீது தாக்கம் செலுத்தும் இன்னோர் அம்சமாகும்.உலகில் அதிகம் பிழையாகப் புரியப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்கிறார் ஓர் அறிஞர்.இஸ்லாத்தைப்பற்றி பிறமதத்தவர்கள் புரிவது எப்படிப்போனாலும் இஸ்லாத்தில் பெண்களின் நிலைப்பாடு பற்றி முஸ்லிம்கள் பலருக்கே இன்னும் தெளிவில்லை என்பது துல்லியமான உண்மை.திருமணம் என்ற சந்தையை நோக்கி வளர்க்கப்படும் செம்மறியாட்டு மந்தையா பெண்கள்? எழுதிக்கொண்டிருந்த அல்லது சமூகப்பணியாற்றிக் கொண்டிருந்த பல பெண்களின் முகவரிகள் திருமணத்தின் பின் காணாமல் போய்விடுகின்றன.சரியாக இருந்தால் திருமணத்தின் பின்னர் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகரித்திருக்க வேண்டும்.பெண்களால் சமுதாய எழுச்சி ஏற்பட வேண்டும் என்று மேடை அதிரப்பேசும் விரல் வலிக்க எழுதும் பலர் சொந்த வாழ்வில் தன் தாயை,துணைவியை,சகோதரியை அல்லது மகளை நாலுசுவர்களுக்குள் சொன்னதை செய்து கொண்டு அடங்கி ? இருப்பதையே விரும்புகின்றனர் என்பது தித்திக்காத போதும் சத்தியம்.
கொள்கையிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.
''ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்''
(அல்குர்ஆன் 016:097).

''ஒவ்வொரு மனிதனும் தான் செய்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்'' (அல்குர்ஆன் 074:038).

.ஒரு பெண் வீட்டு வேலையை தரக்குறைவானதாகவோ அல்லது இழிவானதாகவோ கருத வேண்டும் என்று தப்பர்த்தம் கொள்தல் அல்ல அவளது திறமைக்கும்,தாகத்திற்கும் ஏற்றதான களம் அமைத்துக் கொடுத்தலும் அவளது சமுதாயப்பங்களிப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் சமூகத்தின் கடமையாகும்.யாருக்கோ வந்த விருந்து என்று வாளாவிருக்காது பெண்கள் தமது பெறுமதியையும் தனித்துவத்தையும் உணர்வதோடு தம் குடும்பத்தினருக்கும் அதனை உணர்த்த முயற்சிக்க வேண்டும்.

சரியான பயிற்றுவிப்பும் வழிநடாத்தலும்

சரியான பயிற்றுவிப்பும் வழிநடாத்தலும் அச்சு ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பை காத்திரப்படுத்தும்.
இன்று எமது அச்சு ஊடகங்களுக்கு பெண்களிடமிருந்து வரும் ஆக்கங்களைப்பார்த்தால் கண்ணுக்குள் ஊசி குத்தியதாய் வலிக்கும்.
தேய்ந்து போன தலைப்புக்கள் அல்லது எங்கோ தொடங்கி எங்கோ முடிகின்ற கட்டுரைகளுக்கு மத்தியில் சில நட்சத்திரங்களும் கண்சிமிட்டாமலில்லை.இலங்கையில் எங்கு முறையாக இதழியல் பற்றி கற்கலாம் அல்லது எழுத்தை செம்மைப்படுத்தி தரமாக்குவதற்கான பயிற்சி முகாம்கள் எங்கு நடைபெறுகின்றன என்பது பற்றியெல்லாம் எழுதுகின்ற பல பெண்கள் அலட்டிக்கொள்வதில்லை.இதனால் தான் மழையில் முளைத்த காளானாய் இஸ்லாமிய சாயம் பூசிய தரமற்ற புத்தகங்கள் இப்போதெல்லாம் நிறையவே வெளிவருகின்றன.

தனிப்பட்ட ஆர்வமும் தேடல் இன்மையும்

முஸ்லிம் பெண்களின் தேடல் கிணற்றில் நீர் சேந்துவதோடு நின்று விட்டிருக்கிறது;சமுத்திரத்தைக் கண்டதுமில்லை;அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் இல்லை.
தேடல் என்பது இரண்டு சிறுகதைகளை வாசித்து விட்டு மூன்றாவதாக ஒன்றை எழுதுவதல்ல.பல வித்தியாசமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை விமரிசனரீதியாக வாசிப்பதோடு அவர்கள் கையாண்டுள்ள உத்திகளை அறிந்து கொள்வது,உள்ளடக்கத்தினை இறுக்கமாக்குவதோடு அது தான் விரும்பிய கருத்தை வெளிப்படுத்துகிறதா என்பதை மீள உறுதி செய்து கொள்வது என தேடல் நீளும்.ஒவ்வொரு நல்ல ஆக்கத்தின் பின்னும் நிச்சயமாக கடும் உழைப்பும்,முடிவறாத தேடலும் ஒளிந்திருக்கும்.
சில குறிப்பிட்ட பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,அதிலும் குறிப்பாக அழகுக்குறிப்பும் சமையல் செய்முறைகளும் என்றளவாக தேடல் சுருங்கும் போது அதன் வெளிப்பாட்டை எழுத்து தெளிவாய் காட்டும்.

வேர்கள் நீரை நாடித் தாகிக்க வேண்டும்;
நீரேந்து பிரதேசங்கள் நோக்கி நெளிந்தோட வேண்டும்.
தேடலும் அவ்வாறு தான்.

சில தீர்வுகள் அல்லது தீர்மானங்கள்

அச்சு ஊடகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு இன்னும் பலமடங்காக அதிகரிப்பதோடு இதழியற்துறையில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்களின் பெண்களின் இடைவெளி நிரப்பப்பட வேண்டும்.



·         வாசிப்பை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள ஒர் மாதத்தினுள் குறைந்தது இரு சஞ்சிகைகளையாவது முதல் பக்கம் தொட்டு கடைசிப்பக்கம் வரை வாசிப்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.இது அல்ஹஸனாத்,மீள்பார்வை,எங்கள் தேசம்,உண்மை உதயம்,ஆனந்த விகடன்,குமுதம் என எதுவாகவும் இருக்கலாம்.

·         வாராந்தம் ஒரு ஞாயிறு செய்தித்தாளை முழுமையாக வாசிப்பது.தினகரன்,வீரகேசரி,மவ்பிம அல்லது சன்டே டைம்ஸ் ஆகிய எம்மொழிப்பத்திரிகையாயினும் சரி,பூரணமாக வாசிக்க தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

·         ஒரு வருட காலம் இவ்வாறு வாசித்துச் செல்லும் போது குறித்த சஞ்சிகை அல்லது பத்திரிகையில் உங்களுக்கு மிக விருப்பமான பகுதி  எது என்பதைக்கண்டறிந்து கொள்ளுங்கள். அது இலக்கியம்,விளையாட்டு,அரசியல்,ஆன்மீகம்,அழகுக்கலை,சுயவிருத்தி என எதுவாகவும் இருக்கலாம்.அந்தக் குறிப்பிட்ட பகுதியை உங்கள் விஷேட துறையாக மாற்றுங்கள்.

·         நீங்கள் தெரிவு செய்த விஷேட துறை சம்பந்தமான மேலதிக வாசிப்பையும்  தேடலையும் மேற்கொள்ளுங்கள்.நூலகங்கள்,இணையம் மட்டுமல்லாது குறித்த துறைசார் நிபுணர்களையும் நீங்கள் பயன்படுத்தி அடையாளங் கண்ட துறையில் அபிவிருத்தி அடைய வேண்டும்.

·         பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊடக நிலையங்களில் இடம்பெறும்  இதழியல் நிகழ்ச்சித் திட்டங்களில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வது நிறைந்த பயனளிக்கும் விடயமாகும்.இலங்கையைப் பொறுத்த வரை பல்வேறு கல்வி நிலையங்கள் ஊடகம் சார் பாடநெறிகளை நடாத்தி வருகின்றன.
அவற்றுள் சில

இலங்கை இதழியல் கல்லூரி http://www.slcj.lk/
ú  ஒரு வருட முழுநேர இதழியல் டிப்ளோமா பாடநெறி
ú  சேவை இடை பயிற்சிப்பட்டறைகள்- இவை சில நாட்கள் அல்லது ஒரு வாரகாலப் பயிற்சிகள் ஆகும்.இவை ஏதாவது ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இலவசமாகும்.

            கொழும்பு பல்கலைக்கழகம்
ú  ஒரு வருட கால பகுதி நேர சர்வதேச தரம் வாய்ந்த இதழியல் டிப்ளோமா பாடநெறி

           களனிப்பல்கலைக்கழகம்
ú  இதழியல் பட்டப்படிப்பு 4 வருட முழுநேரப்பாடநெறி அல்லது
ú  இதழியல் வெளிவாரி பட்டப்படிப்பு (சிங்கள மொழி மூலம் 
ú  மாத்திரம்)

           மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்-தூரக்கற்கை நிலையம்
§  வெகுஜனத் தொடர்பாடலும் இதழியலும் டிப்ளோமா பாடநெறி ஒரு வருடம்
§  வெகுஜனத் தொடர்பாடலும் இதழியலும் பட்டப்படிப்பு
-நான்கு வருடங்கள்.
§  வெகுஜனத் தொடர்பாடலும் இதழியலும்                                     பட்டமேற்படிப்பு – இரு வருடங்கள்

இதற்கு மேலதிகமான இன்னும் பல பாடநெறிகள் இருக்கின்றன.அவை பற்றி இணையத்தினூடாகவும்ஊடகத்துறை சார்ந்தோரூடாகவும் தேடி அறிந்து கொள்ள முடியும்.

·         ஊடகமொன்றுடன்,அதிலும் குறிப்பாக இஸ்லாமிய ஊடகம் ஒன்றுடன் தொடர்பு படுங்கள்.அதற்கான உங்கள் பங்களிப்பைத் தேவையின் அடிப்படையில் தொடர்ந்தேர்ச்சியாக வழங்குங்கள்.

·         உபரித்தகவல்

உங்களுடைய திறமையையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வமுண்டெனில்  இந்த கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்.
           இணைய மடலாடல் முகவரி mediawomen2020@googlemail.com
இணைய குழும முகவரி media-women@googlegroups.com

·         இன்னும் 5 வருடங்களாவது இந்தக்கட்டுரையை மாற்றி எழுத உதவி செய்யுங்கள்.

நீண்டு நெடித்துச்செல்லும் இந்த இலட்சியப்பாதையில் சத்தியத்தை வாக்கிலும் நோக்கிலும் சுமந்த பெண்கள் பார்வையாளர்கள் அல்ல,பங்காளர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபிக்க நீங்கள் தயாராகி விட்டீர்களா?

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்