சமீலா யூசுப் அலி
சம்பவம் 01
கொழும்பு கண்டி பஸ் புறக்கோட்டை தரிப்பிடத்திலிருந்து உறுமலுடன் புறப்படுகிறது.
பஸ்ஸில் சிற்றுண்டி விற்பவர்களின் குரல்கள் கலவையாக ஒலிக்கின்றன.
திமு திமு வென்று ஒரு இஸ்லாமியச் சகோதரர்கள் கூட்டம் பஸ்ஸின் காலியான ஆசனங்களில் வந்தமர்கிறது.
வாட்டசாட்டமான தொப்பி தாடி இளைஞர்கள் .
ஏதோ தஃவா வேலைக்காக சென்று விட்டு வருவதை உணர்த்துவதான உரையாடல்கள்.
ஒரு சகோதரர் உரத்த குரலில் குர் ஆனை ஓதுவதும் செவிகளுக்கு வந்து போனது.
சில நிமிடங்கள் கழித்து ஏறிய ஒரு வயதான தாய் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்களை நோட்டமிடுகிறார். பஸ்ஸின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடும் வயது.இஸ்லாமிய ஊழியர்கள் யாரும் அசைந்து கொடுக்கவில்லை.
‘அம்மே வாடிவெண்ட’என எழுந்து இடம் கொடுக்கிறார் ஒரு நடுத்தர வயது சிங்கள சகோதரர்.
சம்பவம் 02
ஹொஸ்பிடலில் பார்வையாளர் நேரம்.
ஒரு கட்டிலைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம்.ஏதோ உல்லாசப்பயணத்துக்கு வந்தது போல குழந்தை குட்டிகள் சகிதம் புறப்பட்டு வந்திருப்பது விளங்கியது.
தேவைக்கதிகமான பேச்சும் சிரிப்பும் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை.
நோயாளிகள் மட்டுமல்லாது பார்வையாளர்களும் ஒரு வித வெறுப்புணர்வோடு
தலையை திருப்பிப்பார்ப்பது விளங்கியது.
செக்யூரிடி அலுவலர் ,நேரம் முடிந்து விட்டது என்பது சாம,தண்ட,பேத முறைகளில் உணர்த்திய பின்னரும் கூட்டம் நகர்வதாக இல்லை.
“இந்த முஸ்லிம்களே இப்படித்தான்’ என ஒரு முணுமுணுப்பு ஓரமாய் எழுந்தது.
சம்பவம் 03
‘வாங்கோ மாமி,இரீங்கோ…
மிச்ச நாளா காணல்ல’
‘சொகமில்லாம ஈந்த மகள்’
‘டொக்டர்ட போகல்லியா மாமி’
‘ஓ…புள்ள சக்திவேல் கிட்டத்தான் போன.அவன் நல்லம்.ஆனா மருந்து கொஞ்சம் பவர்’
‘ஏ மாமி
மஹிந்த …அவனும் நல்லம்.’
பாத்திமா மாமியும் ரைஹானா தாத்தாவும் கதையைத் தொடர்கின்றனர்.
‘உம்மா…………
ஹதியாவொண்டு தாங்கும்மா……….
வாசலில் ஒரு குரல் ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்கிறது.
‘யாரென்னும்மா அது’ பாத்திமா மாமி.
‘ஆ மாமி இது வியாழக்கெழம வார முஸாபர் ஒண்டு.
கொஞ்சம் இரீங்கோ,அவருக்கு ஹதியா குடுத்துட்டு வாரென்’
அவன்= அந்திய மதத்தவர்
அவர்= முஸ்லிம்
சம்பவம் 04
மாஹிராவுக்கு திருமணம்.
மாப்பிள்ளை ஒரு டொக்டர்.வெளிநாட்டில் வேலை பார்க்கிறாராம்.
‘மாஹிரா வீட்டில் நேற்று மருதோண்டிக் கலியாணம்டீ’
ஷா…ஏண்டீ நீ வரல்ல..பாத்தீக்கோணுமே அவள் உடுத்தீந்த சாரி மட்டும் அம்பதுனாயிரமாம்டீ…
ரிஷாதா கண் இரண்டையும் அகல விரித்து ஹமீதாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘எனக்கும் வர ஈந்திச்சிடீ…அநியாயம்.மருதோண்டிக்கலியாணத்துக்கே இப்டீண்டா வெடிங் எப்டியோ தெரியாவே…
ஹமீதாவிடமிருந்து ஏக்கப்பெருமூச்சு ஒன்று வெளிப்படுகிறது.
‘மியாமில தான் வெடிங்காம்…
போறத்துக்கு இப்பவே அபாயாக்கு நல்ல ஷோல் ஒண்டு வாங்கோணும்’
இது ரிஷாதா.
‘அதில்லடீ கிப்ட் என்னடி குடுக்குற….மாஹிராட ஸ்டேடஸுக்கு மாதிரி கோல்ட்ல என்ன சரி வாங்கோணும்.’ ஹமீதாவின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.
‘இல்லாட்டி…
ஜாதியா ஈக்கும்.ரெண்டு பேரும் வேற வேறயா வாங்குவொம்…இல்லாட்டி சரில்லடீ’ இது ரிஷாதா.
‘அது சரி அடுத்த கெழம பர்வீண்ட கலியாணம் அதுக்கு என்னடி குடுக்கிற?’
ஹமீதா முடிக்க முன்னரே…
‘ஐய்யோடி ..அது ஊட்டுல நிகாஹ் தானே.ரெண்டு பேரும் சேர்ந்து என்னமாவது சின்னதா பிரஸன் ட் பண்ணா சரிதானே’ரிஷாதா சுலபாக விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள்.
சம்பவம் 05
நெய்ச்சோறு,கோழிக்குருமா, மாட்டிறைச்சிப்பொறியல்,மாசிசம்பல் ,வெஜிடபள் சாலட் என படு அமர்க்களமாய் மேசை அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
நாலு ஊருக்கு மணக்கும் அளவுக்கு பார்த்து பார்த்து சமைக்கப்பட்ட விருந்து.
டுபாயிலிருந்து விடுமுறைக்காக வந்திருக்கும் மகனையும் மருமகளையும் விழுந்து விழுந்து உபசரித்துக்கொண்டிருக்கிறாள் நஸீஹா.
‘உம்மா….
உம்ம்மாஆஆ…
‘மகள் அந்த வட்லாப்பக் கப்ப நானாக்கு எடுத்து குடுங்கோ
முன்னுக்கு யாரோ பேசிற சத்தம் கேட்ட…நான் பார்த்திட்டு வாரென்’
வெளிநாட்டு சாரி சரசரக்க சுலைஹா ஹோலுக்கு வருகிறாள்.
‘திண்டு ரெண்டு நாளும்மா…எனக்கில்லட்டீம் பரவல்லும்மா…இந்தப் புள்ள ரெண்டுக்குமாவது கொஞ்சம் சாப்பாடு தாங்க சீதேவி’
நடுத்தர வயது பெண் தலையில் முக்காட்டை இழுத்து விட்டுக்கொள்கிறாள்.கூடவே ஒட்டி உலர்ந்த தேகத்துடன் நண்டும் சிண்டுமாக இரண்டு பிஞ்சுகள்.
‘இதுகளால பெரிய கரச்சல்…சரியா சாப்பாட்டு நேரத்துக்கு வார…’புறு புறுத்துக் கொண்டே போன சுலைஹா ப்ரிஜில் நேற்று மிஞ்சியிருந்த பழைய சோற்றை ஒரு சொப்பிங் பேக் உள்ளே கொட்டினாள்.
……………………………………………………………………………………………..
ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.
கண்ணீர் விட்டாலும் கவலைப்பட்டாலும் பண்பாட்டு விழுமியங்களைச் சுமந்து பிறந்த எமது முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை இது தான்.
விரும்பியோ வெறுத்தோ,அஃலாக் எனும் நற்பண்பாடுகளுக்கு சாட்சியாக விளங்க வேண்டிய நாம் இன்று அதன் எதிர்மறை உதாரணமாகிப் போன அவலம் நேர்ந்திருக்கிறது.
இஸ்லாத்தின் இனிய தூது முஸ்லிம்கள் மாத்திரம் முதுசமாகப்பெற்ற தனிச்சொத்தல்ல.
அது முழு மனித சமுதாயத்துக்குமான வழி காட்டும் ஒளிவிளக்கு.
இஸ்லாத்தின் நோக்கத்தை சில அறிஞர்கள் இரண்டாக வகுக்கின்றனர்.
01.மனித உள்ளத்துக்கு ஆறுதலும் அமைதியும் அளிப்பது.
02.வாழும் பூமியை சாந்தியும் சுபீட்சமுமானதாக மாற்றுவது
இஸ்லாமிய ஆட்சி பற்றியதான கனவுகள் முதல் முதல் விதையாய் ஊன்றப்பட வேண்டியிருப்பது பண்படுத்தப்பட்ட உள்ளங்களில் தான்.எனவே தான் தொழுகை முதற்கொண்டு ஹஜ் வரையிலான இபாதாக்களின் எதிர்பார்க்கை பண்பட்ட இதயங்களாக அமைந்திருக்கின்றது.
இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு பண்பாட்டின் அடித்தளத்தில் எழுந்ததொன்றாகும்.ஒரு காலத்தில் தியாகமும் ,விட்டுக் கொடுப்பும் நம்பிக்கை,நாணயமும் எமது அடிமரத்தின் வேர்களாக இருந்திருக்கின்றன.
இன்றோ முஸ்லிம் என்றாலே ஏமாற்றும் பொய் புரட்டும் ,ஆடம்பர வாழ்க்கை முறையும் நாகரீகமில்லாத நடத்தையும் என்றாகிப் போன சோகம் நெஞ்சு சுடுகிறது.
முஸ்லிம்கள் பல்லின சமூகங்களின் மத்தியில் வாழும் போது ஒரு சாரார் தனித்துவம் பேண அந்திய சமூகங்களிருந்து ஒதுங்கி ஓரமாய்ப் போய் புறக்கணிப்புக்காளாவதும் இன்னொரு சாரார் ஏனைய சமூகங்களோடு ஒன்றி வாழ்தலில் தம் தனித்துவ அடையாளங்களையே தொலைத்து விட்டுத் தவிப்பதுமான இரண்டு நிலைமைகளை எதிர்நோக்குவதைக் காணலாம்.
கொள்கையை விலை பேசாத திடவுறுதியும் இஸ்லாமிய நடைமுறைகளில் அசையாத நம்பிக்கையும் கொண்ட அதே நேரம் ஏனைய சமூகங்களோடு நல்லெண்ணத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளக்கூடிய தனிமனிதர்களே எமது பிரகாசமான நாளையின் சிற்பிகள்.
இஸ்லாம் அன்பை பற்றி அதிகம் பேசுகிறது.
படைத்தாளும் இறைவன்,வழிகாட்டிய இறைதூதர்,பெற்ற தாய் தந்தையர்,உயிரில் தாங்கி வளர்க்கும் வாரிசுகள்,இணைந்து வாழும் துணைவர்கள்,நெருங்கிய உறவுகள்,நேசம் பாராட்டும் நட்புக்கள் ,வாய்பேசா உயிரினங்கள்…
அனைத்தின் மீதும் நிபந்தனையற்ற அன்பு வைக்குமாறு இஸ்லாம் எங்களை ஆற்றுப்படுத்துகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியிலும் மனிதாபிமானத்தினையும் நற்பண்பாடுகளையும் போஷித்து வளர்க்கிறது.
நேரத்தை பேணல் என்பது முஸ்லிம்கள் தவற விட்டுச் சென்ற ஒரு புதையல்.
தன்னம்பிக்கையும் தன் காலில் நிற்கும் வலிமையும் எத்தனை சவால்களையும் எதிர்த்து நிற்கும் துணிவும் நிலைகுலையாமையும் எம் முதுகெலும்பாய் இருந்திருக்க வேண்டியவை.
ஆடம்பரமும் படாடோபமும் பெருமையும் இலங்கை முஸ்லிம்களின் நிலாக்கால இரவுகளாக இருந்த காலம் போய் இப்போது அன்றாட வாழ்க்கையாகி விட்டிருக்கிறது.
ஒரு நாள் திருமணத்துக்காகவும் இரண்டு பெருநாட்களுக்காகவும் இறைக்கப்படும் பணத்தில் ஒரு குட்டி விமானமே வாங்கி விடலாம்.
வீடுகளைக் கட்டுவதில் காட்டும் நேர்த்தியையும் அவதானத்தையும் நாம் குணநலன்களை, பண்பாடுகளை கட்டியெழுப்புவதில் காட்டுவதில்லை என்பதே கசப்பாயினும் உண்மை.
‘முஸ்லிம் சமூகத்தை நம்ப முடியாது.அவர்கள் வியாபாரத்தில் மோசடி செய்வார்கள்.ஏமாற்றுவார்கள்’ என்றெல்லாம் முஸ்லிம்களின் செயற்பாடுகள் மீது கருப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளது.நெருப்பில்லாமல் புகைவதில்லை என்பது நமக்குத் தெரிந்த விடயம்.
மேலதிகமாக ஆங்கிலம் சார் சூழல்களிலும் பல்கலைக்கழகங்கள் ,வேலைத்தளங்களிலும் ‘நான் ஒரு முஸ்லிம்’என்ற தனித்துவத்தைக் காட்டிக் கொள்ள வெட்கப்படுபவர்களும் ,அதை விட ஒரு படி மேலே போய் தொழுகையையும் ,தலை மறைக்கும் ஹிஜாபையும் கூட துறந்தவர்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
சூழலைப் பாதுகாப்பது எப்படிப் போனாலும் அதனை மாசுபடுத்துவதில் முன்னிற்கிறது முஸ்லிம் சமுதாயம்.ஆற்றங்கரைகளின் ஓரத்தில் குவிந்திருக்கும் குப்பைகூளங்களுக்கும் ,சுற்றாடலைப் பாதிக்கும் தொழிற்சாலைக் கழிவுகளுக்குமாக நாளை மறுமையில் நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்?
மொத்தத்தில் இஸ்லாம் வலியுறுத்தும் தனிமனிதப்பண்பாடுகளை மட்டுமல்லாது ,
சமூகப்பண்பாடுகளையும் ஒழுக்க விழுமியங்களையும், சில அழுகல் கனிகளுக்கு ஆசைப்பட்டு குறைந்த விலைக்கு விற்று விட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது.
கண்ணுக்குப்புலப்படாதிருக்கும்
நெருப்பை
உன் புழுதியிலிருந்து
பெற்றுக்கொள்!
பிறரின் வெளிச்சம் நீ வைத்திருக்கத் தகுதியற்றது
அல்லாமா இக்பால்
2 comments:
சகோதரி ஷமீலா,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
இஸ்லாம் சகோதரத்துவத்தை பெரிதும் வலியுறுத்துகின்றது. தன் சகோதரர்களின் செயல் கண்டு மனம் வருந்தும் உங்கள் தூய உள்ளத்திற்கு, தகுந்த நற்கூலியை இறைவன் வழங்குவானாக....
நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நடைபெறும் அதே சூழலில், நாயகம் (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்படி மனிதநேயத்துடன், இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் எண்ணற்ற முஸ்லிம்கள் இருக்கத்தான் செய்கின்றனர். முஸ்லிம்களின் நன்னடத்தைகளை கண்டு இஸ்லாமை தழுவும் எண்ணற்ற மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
குரானையும், நபி வழியையும் புரிந்து கொண்டவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். ஆக, தூய இஸ்லாமை கொண்டு செல்வது உங்கள் மீதும் என் மீதும் கடமையாகின்றது. இன்ஷா அல்லாஹ். மேலும் வீரியமாக கொண்டு செல்வோம். நீங்கள் கூறிய அனைத்து விசயங்களையும் துடைத்தெறிவோம் இன்ஷா அல்லாஹ்..
"மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும்,...." - இஸ்லாமிய எதிர்ப்பு தளமான வினவு நமக்கு தந்த பாராட்டு பத்திரம்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஜஸாகுமுல்லாஹ் சகோதரர் ஆஷிக் அஹ்மத்
Post a Comment