Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

நேர்காணல் - ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம்


நேர்கண்டவர் சமீலா யூசுப் அலி
புகைப்பட உதவி  அப்ரா நிவாஸ்
2011 ஜூலை 24 ஆந்திகதி மாவனல்லை வரலாற்றில் ஏடுகளில் குறிக்கப்பட வேண்டிய ஒரு பொன்னாள்.அன்று தான் மாவனல்லை நகரத்தின் வரலாறு பற்றிய ஒரு பொக்கிஷம் ‘பொற்கலசம்’ என்ற நூலாக மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்படுகிறது.நூலின் ஆசிரியை சாஹிராத்தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்து இன்று அதே பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தலைவியாக இன்னும் ஓய்வு பெறாமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் அவர்கள்.வாழ்க்கையில் 70 வது படியில் இருக்கும் அவரது இந்த உற்சாகமான முயற்சி 20 களிலே சலித்துக் கொள்ளும் எமது பெண்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.
மழை சூழ் கொண்டிருக்கும் பின்காலைப்பொழுதொன்றில் ,பெண்கள் தேசத்திற்காக ஆசிரியை ஆயிஷா அவர்களை சாஹிரா வீதியில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.
கனிவான வரவேற்பு
எமது வேர்களை விசாரித்து சொந்தம் கொண்டாடும் உரிமை
வயதின் தள்ளாமை மறைக்கும் ஆர்வமும் உற்சாகமும்
இது தான் ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம்
·         இப்படியானதொரு நூலை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எழுந்ததன் பின்னணி என்ன?
நான் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் எங்களுடைய ஆங்கில ஆசிரியரான சஹாப்தீன் என்பவரைச் சந்தித்தேன்.அவர் எனக்கொரு போட்டோவைக் காட்டினார்.அது 1932 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட போட்டோ,அதில் உயிருடன் இருந்தவர் அவர் மட்டும் தான்.’இதை வைத்து கொண்டு போய் சமூகத்திற்கு ஏதாவது  செய்,புத்தகம் ஒன்று எழுத ஆரம்பி’என்று சொன்னார்.அது எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
·         பொற்கலசம் என்ற தலைப்பை என்ன காரணத்திற்காக தெரிவுசெய்தீர்கள்?
ஏற்கனவே ‘முதுசம்’ என்ற பெயரைத் தான் தெரிவு செய்திருந்தேன்.ஆனால் ஏற்கனவே அந்தப்பெயரை வேறு ஒரு சகோதரி தனது நூலுக்காக எடுத்திருந்ததை அறிந்தேன்.
‘கலசம்’ என்றால் குடம் என்று அர்த்தம்.பொற்கலசம் எனும் போது பொன்னான விடயங்களைத் தாங்கி நிற்கும் ஒரு நிறைகுடம் என்ற அர்த்தம் வருகிறது.அதனால் தான் பொற்கலசம் என்று பெயரிட்டேன்.

·         வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்ற பலர் ஓய்வெடுக்கும் காலத்தில் நீங்கள் இந்நூலுக்கான தகவல்களை திரட்டி உள்ளீர்கள்.உங்கள் உற்சாகத்தின் இரகசியம் என்ன?
என்னுடைய கணவர் இறந்து 10 வருஷங்கள்.தனிமை என்ற உணர்வை நான் அனுபவிக்காமல் என்னை எனது சகோதரிகளும் பிள்ளைகளும் நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள்.இப்படியான ஒரு காலத்தை வீணாகக்கழிக்காமல் சமூகத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
·         50 வருடங்களுக்கு முன்னிருந்த மாவனல்லை-இன்றிருக்கும் மாவனல்லை என்ன வித்தியாசங்களைக் காண்கிறீர்கள்?
பொற்கலசம் நூலிலே,50 வருடங்களுக்கு முன்னிருந்த மாவனல்லை சம்பந்தமான பல படங்களைத் தந்திருக்கிறேன்.
அன்றிருந்த பாதைகள்,பாலங்கள்,மக்கள் வாழ்ந்த முறை பற்றியெல்லாம் நான் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

·         இந்நூலுக்கான தகவல் திரட்டும் காலத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் எது?
நான் தகவல் திரட்டச் சென்ற இடமெல்லாம் தங்கு தடையில்லாமல் எல்லா மக்களும் ‘என்ன வேண்டும் டீச்சர்’ என்று ஆர்வத்தோடும் ஆசையோடும் கேட்டு அன்போடு உபசரித்து தகவல்களைத் தந்தார்கள்.மற்றும் இப்போதுள்ள எனது சிறுவயது மாணவர்கள் கூட’படம் வேண்டுமா டீச்சர்’எனக் கேட்டு பாலங்களையும்,வீதிகளையும்,தக்கியாக்களையும் படம் பிடித்து என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள்.இவைகள் எல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள் தான்.

·         அரிய புகைப்படங்களை இந்நூல் தாங்கி நிற்கிறது.இவை எங்கிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன?
இந்தப்புகைப்படங்களெல்லாம் ஆறு வருடங்களாக நான் ஊரில் ஒவ்வொரு இடங்களுச் சென்று பொற்றுக்கொண்டவை.நான் 1942 ஆம் ஆண்டு பிறந்தவள் என்பதால் நான் பிறந்த பின்னான 10 வருட காலம் சம்பந்தமான தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும்.அவற்றை ஞாபகப்படுத்தி வைத்திருந்தேன்.எமது பாடசாலையின் கட்டடமான ஓலைக்கொட்டகை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அதன் போட்டோ தான் முதலில் கிடைத்தது.அதைக்கட்டுவதற்காக நான் கூட ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்தது நினைவிருக்கிறது.இதை டப்ளியூ டப்லியூ கன்னங்கரா அவர்கள் இதைத் திறந்து வைத்தார்கள்.இந்தக்கட்டடத்திக்கு முன்னர் இருந்த ஆரம்பப் பாடசாலைக்கட்டடத்தைக் கட்டியவர்கள் யார் என்று விசார்த்தேன்.அப்போது காலஞ்சென்ற நியாஸ் ஏ மஜீத் அவர்களின் தந்தையான மஜீத் அவர்களும் ஒபீஸர் அப்பா என்று சொல்லக்கூடிய அப்துல் ரஹ்மான் அவர்களும் என்று அறிந்து கொண்டேன். டொக்டர் ஹமீத் ஏ அஸீஸ் அவர்களது தந்தையான வைத்தியத்திலகம் அஸீஸ் அவர்களது பட்டமளிப்பு விழா போட்டோவிலிருந்து மஜீத் அவர்களின் போட்டோவைப்பெற்றுக் கொண்டேன். அது தான் முதலாவது போட்டோ.அதன் பிறகு பலரைச் சந்தித்து வேறு போட்டோக்களைப்பெற்றுக் கொண்டேன்.என்னிடமும் பழைய போட்டோக்கள் இருந்தன.இவ்வாறான போட்டோக்களை ஸ்டூடியாக்கு கொண்டு சென்று சீரமைத்து எடுத்துக் கொண்டேன்.
.
·         உங்களது குடும்பம் பற்றி?
தாயார் மாவனல்லையைச் சேர்ந்தவர்.தகப்பனார் உலப்பனையைச் சேர்ந்தவர்.எமது வீடு தான் மாவனல்லையில் முதலாவது கட்டப்பட்ட புது வீடு என்று சொல்வார்கள்.அந்த வீட்டில் ஐந்தாவது பரம்பரையில் வந்தவர் நான்.1969 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது.அவர் கடுகன்னாவ முஸ்லிம் மகா வித்தியாலத்தில்  அதிபராகஇருந்தார்.ஹஜ்ஜுக்குப் போய் வந்து ஒரு சுகவீனம் காரணமாக மரணித்தார்.எனக்கு நான்கு பிள்ளைகள்.மூத்த மகள் பஸீஹா பீ.எச்.டீ முடித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை விரிவுரையாளராக இருக்கிறார்.இரண்டாவது மகள் பரீஹா மாவனல்லைப்பிரதேச சபையில் கணக்கியல் துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.மற்றயவர் மகன் பஹ்மி சொந்தமாக மாவனல்லையில் ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.அடுத்த மகன் பஸ்மியும் அதற்கு உதவியாக இருக்கிறார்.

·         உங்களுக்கு இன்னும் நிறைவேறாத கனவுகள் ஏதேனும் உள்ளதா?
பொற்கலச வெளியீட்டின் போது படித்தவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.படித்தவர்கள்,இங்கு பாடசாலையில் படித்து முன்னுக்கு வந்தவர்கள் கட்டாயம் வந்திருக்க வேண்டும்.அது எனக்கு கொஞ்சம் கவலையாகத் தான் உள்ளது.

·         இந்நூலை எழுதும் போதும் ,தகவல் சேகரிக்கும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை?
தகவல் சேகரிக்கும் போது எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.திரட்டிக் கொண்டு வந்த நேரம் எனது சகோதரி ஆயிஷா ஹாஷிம் அவர்கள் நூலில் ஒரு பகுதியை எழுதித்தந்தார்,அது பேருதவியாக இருந்தது.

·         வேறு ஏதேனும் நூல் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா?
இனித்தான் யோசிக்க வேண்டும்.எனக்கு வயது 70,இனியும் என்னால் எழுத முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் என்னால் முடிந்தளவு செய்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.
(மென்மையாகச் சிரிக்கிறார்)

·         ஏன் வரலாறு எழுதப்படுவது அவசியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்
நாங்கள் இன்று ஊரில் பிறந்து வளர்ந்து புதிய வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வையே மறக்கும் சந்தர்ப்பம் வருகிறது.ஊருக்காக யார் யார் உழைத்தார்கள் என்னென்ன சேவைகள் செய்தார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.அவர்களுக்கு ஒரு துஆவை கேட்கவாவது அவர்கள் யார் என்பதை நாங்கள் அறிய வேண்டும்.அதனால் தான் வரலாறு எழுதப்படுவது முக்கியமாகிறது.

·         உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எவ்வாரிருந்தது?
எனக்கு நான்கு சகோதரிகள்.அவர்களில் இருவர் வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கிறார்கள்.அவர்கள், நான் மணம் முடித்து வாழ்ந்த காலத்திலிருந்து எனது சமையல்,குழந்தை வளார்ப்பு அனைத்திலும் தாய் மகளுக்குச் செய்வது போன்று செய்திருக்கிறார்கள்.
(அவரது குரல் தழுதழுக்கிறது)
அதே போல் எனது பிள்ளைகளும் எனக்கு எல்லா விடயங்களிலும் ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
·         மாவனல்லை நகரில் ஏற்பட்டு வரும்  இஸ்லாமிய விழிப்புணர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
பொதுவாக இயக்கங்கள் வந்ததால் எமது சமூகம் ஏதோ ஒரு அமைப்பில் மார்க்க விடயங்களில் ஈடுபடுவது சந்தோஷமாக இருக்கிறது.இஸ்லாமியக் கட்டுக்கோப்புக்குள் சமூகம் வரும் போது அல்லாஹ்வைப்பயந்து சேவை செய்யக்கூடிய நிலை வரலாம்.அதே நேரத்தில் தீவிரமான இயக்கங்கள்  வந்து சமூகத்தைப் பிளவுகள் ஏற்படுத்தாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.
·         உங்கள் வாழ்க்கையில் மிக சந்தோஷத்துடன் ஞாபகிக்கும் கணம் எது?
ஆசிரியப்பணி 41 வருட காலம் செய்திருக்கிறேன்.இப்போதும் வளர்ந்த மாணவர்கள் எங்கு கண்டாலும் டீச்சர் என்று கெளரவப்படுத்தி,நடந்து போல் வாங்க டீச்சர் என்று வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள்.
நான் சாஹிராவில் 25 வருடங்களாக ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியையாக இருந்திருக்கிறேன்.இன்றும் மாணவர்கள் கண்டால்;டீச்சர்’ என்று சொல்லி கொஞ்சம் மரியாதையாக ஒதுங்கிச்செல்லும் அளவிற்கு கட்டுப்பாட்டோடும் அன்போடும் நடந்திருக்கிறேன்.

·         நீங்கள் எழுதுவதற்காக தேர்ந்தெடுத்துள்ள நேரங்கள் என்ன?
அஸர் தொழுகையின் பின்னரான நேரத்தில் தான் அதிகம் எழுதுவேன்.ஆனாலும் இரவில் ஒரு மணி என்றாலும் விழிப்பு வந்தால் எழுதுவேன்,சமயங்களில் சுபஹ் தொழுகை நேரம் வரும் வரை எழுதுவேன்.

·         இன்றைய இளைய சமுதாயம் பற்றி உங்களுடைய பதிவு என்ன?
இன்றைய இளையவர்கள் முன்னிருந்தவர்களை விட மார்க்க விடயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள்.ஒழுக்கக் கட்டுப்பாடு நிறைந்தவர்களாக வாழ்கிறார்கள்.இனியும் சமூகம் முன்னேற வேண்டுமானால் மார்க்கக்கல்வியுடன் சேர்ந்த கல்வி தான் தேவை என்பதை பெற்றோர்களும் மாணவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.ஆனாலும் இன்று பலவிதமான வசதி வாய்ப்புகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதனால் மாணவர்கள் கெட்டுப்போவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.பெற்றோர் அதிலும் குறிப்பாக தாய்மார்கள், இவற்றைப்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.மாவனல்லையில் இஸ்லாமிய நிறுவனக்கள்,மார்க்க அறிஞர்கள்,இயக்கங்கள்,.பயான்கள்,மஜ்லிஸ் தாராளமாக இருக்கின்றன.இவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

·         இன்றைய பெண்களின் துறைரீதியான பங்களிப்பு பற்றி?
அல்ஹம்துலில்லாஹ்,இன்று பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.ஆசிரியர்களாக ,வைத்தியர்களாக,சட்டத்தரணிகளாக இருக்கிறார்கள்.மாவனல்லையைப் பொறுத்தளவில் ஆகக்கூடியளவு கல்விக்கு முக்கியம் கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.அவர்கள் தான் அதிகமாகப் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்,வேறு துறைகளில் பிரகாசிக்கிறார்கள்.ஆண் மாணவர்கள் படிப்பது குறைவு.ஓ.எல் பாஸ் பண்ணியவுடன் ஒரு கோர்ஸை செய்கிறார்கள்; பின் லண்டனுக்கு பறந்து விடுகிறார்கள்.

எழுத்துத்துறையில் பெண்கள் ஈடுபடுவது பற்றிய உங்கள் கண்ணோக்கு என்ன?
கட்டாயம் பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட வேண்டும்.பெண்சமூகத்திலுள்ள குறைப்பாடுகளைச் சுட்டிக் காட்ட,சமூகத்தை அறிவூட்ட,சமூகத்தின் தேவைகளை இனங்கான என சமூகத்தின் பலநிலைகளை எழுத்தின் மூலம் தான் அறிய முடியும்.இஸ்லாமிய அமைப்பில் இப்போது பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்,அது மிகவும் வரவேற்கத்தக்கதே.

வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

எனது பாடசாலையான சஹிரா தேசியக்கல்லூரியை எடுத்துக்கொண்டால் ஆண் ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளார்கள்.நாங்கள் இணைந்து பாடசாலைக்கு சிறந்த நிர்வாகிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.நாங்கள் பேதங்களை மறந்து எமது பாடசாலையை முன்னேற்ற முன்வரவேண்டும்.நான் கற்ற எனது பிள்ளைகள் கற்ற இந்தப்பாடசாலை நல்ல நிலைக்கு வர வேண்டும்.பழைய மாணவியர் ச்னக்கத்தின் சார்பில் எம்து பாடசாலைக்கு நிறைய உதவிகளை அல்லாஹ்வின் அருளால் செய்ய முடிந்தது.இனியும் அவ்வாறு செய்ய ஆவலாக உள்ளேன்.எழுத உதவி செய்த எனது அன்பிற்குரிய சகோதரி ஆயிஷாவும் எனது மாணவரான எம்.ஜே.எம் பிரிண்டர்ஸ் உரிமையாளாரான முஸம்மில் அவர்களும் நூலை வடிவமைத்துத் தந்த அஸ்மி அவர்களும் இதற்காக மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தார்கள்.அவர்களுக்கும் மற்றும் இந்நூலை ஆக்குவதிலும் வெளியிடுவதிலும் ஒத்துழைத்த அனைத்து பெயர் குறிப்பிடாத சொந்தங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
மாவனல்லை சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பாதையில் நின்று ஒரு பெறுமதி மிக்க ஒரு நூலை சமூகத்துக்குப்பரிசளித்த ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் அவர்களுக்கு உடல் திடத்தையும் மனோபலத்தையும் கொடுத்து அவரது ஆயுளையும் அல்லாஹ் நீட்டிக்க வேண்டும் என்ற துஆக்களோடு விடைபெற்றோம்.

இந்நூலைப்பெற விரும்புகிறவர்கள் கீழ்வரும் முகவரியைத்தொடர்பு கொள்ளவும்

68
சஹிரா வீதி
மாவனல்லை
25.07.2011

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்



சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2007ஆம் ஆண்டுக்கானக் கட்டுரைப் போட்டியில் சகோதரியருள் முதல் பரிசை வென்ற 'இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்' என்ற கட்டுரையை வடித்தளித்த சகோதரி சமீலா யூஸுஃப் அலீ (ஹயா ரூஹி) அவர்கள் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி பெண்கள் அணியின் ஊடகப் பிரிவுக்காக, மலேஷிய இஸ்லாமியக் கட்சி (PAS)யின் மேல்மட்ட மத்திய சபை உறுப்பினரும் மலேஷியப் பாராளுமன்ற உறுப்பினருமான Dr. மாரியா மஹ்மூத் அவர்களை நேர் கண்டு 22 மே 2008இல் பதிவு செய்திருக்கிறார். அந்த நேர்காணலிலிருந்து ...



இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சந்திப்பதற்காக தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு, தன் துணைவருடன் இலங்கை வந்திருந்த Dr மாரியா மஹ்மூத் அவர்களை மெல்லியதாகப் பனிதூவும் இளங்காலைப் பொழுதொன்றில் மாவனல்லையில் சந்தித்தோம்.

சகோதரி மாரியா அவர்கள் PAS எனப்படும் Islamic party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர். மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர். IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர். தொழிலால் ஒரு மருத்துவர். ஆறு பிள்ளைகளின் தாய்.

இவரது கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர்.
மென்மையான புன்னகை.
கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை.
ஆர்பாட்டமில்லாத அழகிய ஆங்கிலம்.
தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துகள்.
காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக் கொள்ளும் ஆளுமை.
இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத்.

ஒரு மனிதனை வடிவமைப்பதில் குழந்தைப் பருவத்தின் பங்களிப்பு மகத்தானது. எவ்வாறான ஒரு குழந்தைப் பருவம் உங்களுக்குக் கிடைத்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நான் ஒரு பிடிவாதமான குழந்தை (சிரிக்கிறார்). எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் பெற்றோர் பாஸ் கட்சியின் தீவிர அங்கத்தவர்கள். தந்தை ஓர் ஆசிரியர், எனது தாய் மிகக் கண்டிப்பானவர். நாங்கள் முழுமையான இஸ்லாமியச் சூழலில் வளர்க்கப்படோம். என் அன்னை அந்தக் காலத்திலேயே முழுவதும் மூடிய ஹிஜாப் அணிவார். அவர் என்னை ஹிஜாப் அணியுமாறு சொல்லும் போதெல்லாம் பிடிவாதமாய் மறுப்பேன். நான் தொழுவது வழக்கம். ஏனென்றால் என் தாய் கூறுவார் "அல்லாஹ்விடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் தொழுது கேட்டால் தான் கிடைக்கும்" என்று. எனக்கு அதிகமான விடயங்கள் தேவைப்பட்டதனாலேயே நான் தொழுகையைத் தொடர்ந்தேன்.

இஸ்லாத்தை நோக்கியத் திருப்பம் எவ்வாறு நிகழ்ந்தது?

எனக்கு 15-16 வயதிருக்கும்போது ஒரு கோடைகால முகாமிற்கு(summer camp ) செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதை ஏற்பாடு செய்த அமைப்பில் அன்வர் இப்ராஹீம் அவர்களும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். என் வாழ்வில் மகத்தான திருப்புமுனை அதுதான்(உணர்ச்சி வசப்படுகிறார்). உண்மையான இஸ்லாம் என்றால் என்ன? நான் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அங்குத்தான். தொழுகையில் ஓதும் தூய வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்ததும் அப்போதுதான். ஒவ்வொரு முறை நான் தொழும் போதும் நான் அழுகிறேன். (சில மணித்துளிகள் உடைந்து அழுகிறார்……….) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம் (இறைவா நேரான பாதையைக் காட்டுவாயாக) என்ற வாசகத்தை என் நாக்கு உச்சரிக்கும் போதெல்லாம் அழுகையை என்னால் அடக்க முடிவதில்லை. பெண்கள் பாடசாலையில்தான் படித்தேனென்றாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்றேன்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் இரண்டே பேர் தான் ஹிஜாப் …(திரும்பவும் விழியில் நீர் ததும்பத்தொடங்குகிறது) மற்ற மாணவிகள் எங்களைக் கேலி செய்தார்கள்…சிரித்தார்கள். நான் தைரியத்தை இழக்கவில்லை. அது மிகவும் கஷ்டமான காலம். ஆனால், நான் சந்தோசமாயிருந்தேன். பின்னர் சாதாரணதரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ். எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் பயிலச் செல்வதற்கான புலமைப் பரிசு அப்போதே என்னை வந்தடைந்தது.

பல்கலைக்கழக வாழ்வு உங்களை செதுக்கியதா அல்லது சிதைத்ததா?

கெய்ரோ பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரம். பல்கலைக்கழகத்தில் பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். இஸ்லாத்தை பின்பற்றத் தடைகள் இருக்கவில்லை. அப்போதுதான் என் கணவர் என்னைச் சந்தித்தார். என்னைக் குறித்த அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு அப்போது வெறும் 18 வயது தான். அவருக்கு 19 வயது. அவர் மற்ற ஆண்களை விடக் கொஞ்சம் நல்லவராக எனக்குத் தெரிந்தார். என் மனதில் காதல் என்ற ஒன்றே கிடையாது. நான் "சரி, ஆனால் எனது கல்வி முடியும் வரை உங்களைச் சந்திக்கவோ உங்களோடு பேசவோ முடியாது" என்று கூறினேன். "நாம் வீடு சென்று பெற்றோருடன் பேசுவோம்" என்று அவர் அபிப்பிராயப்பட்டார். என் தந்தை மிகவும் கண்டிப்பானவர். ஆனால் திறந்த மனதுடையவர். விடயம் கேள்விப்பட்டதும் என் பெற்றோர் நாங்கள் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார்கள். இஸ்லாம் மிக இலகுவானது. அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றினதும் பின்னணி என்பதை என் தந்தை எனக்குப் புரிய வைத்தார். பல்கலைக்கழக மூன்றாவது ஆண்டில் எனது மகள் பிறந்தாள். அடுத்த ஆண்டு இன்னுமொரு மகன். வாழ்க்கை மிகவும் ஓய்வின்றிக் கழிந்தது. பல்கலைக்கழகத்தில் கல்வியை விடுத்து எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட என்னால் முடியாமல் போனது. குழந்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டதால் மருத்துவராக அல்லாது மருத்துவக் கல்லூரியொன்றில் 8 மணி முதல் 4 மணி வரை விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.

உங்கள் அரசியல் நுழைவு திட்டமிடப்பட்டதொன்றா அல்லது தற்செயலானதா?

PAS இரண்டு தளங்களில் செயற்படுகிறது:
1 தஃவா
2அரசியல்
பாஸின் முஸ்லிமா பிரிவுக்கு (Muslimah wing) என்னாலான பங்களிப்பைச் செய்வதற்காகத்தான் கட்சிக்குள் நுழைந்தேன். தலைமைத்துவத்தில் நான் இருக்கவுமில்லை. அரசியல் பற்றி எதுவுமே அறிந்திருக்கவுமில்லை. அதைப் பற்றிய ஆர்வம் கூடக்கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிறைய நிர்வாகப் பயிற்சிகளைப் பெற்றிருந்ததும் நிறுவன ரீதியான திறன்களோடிருந்ததும் முஸ்லிமா பெண்களின் திறன் விருத்தி பயிற்றுவிப்பாளராக இருந்ததும் பின்னாளில் அரசியலுக்கு கட்சி மேல்மட்டம் என்னை உந்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம். எது எப்படியாயினும் தலைமைத்துவம் ஒரு பணியைக் கட்டளையிட்டால் எம்மால் அதைச் செய்ய முடியாது என்று மறுக்க முடியாது. இப்படித் தான் என் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

உங்கள் அரசியல் நகர்வை உங்கள் துணைவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

என் கடைசிக் குழந்தையும் பாடசாலை சென்ற பின்னரே அரசியலுக்குள் நான் காலடி வைத்தேன். தொழிலையும் ராஜிநாமா செய்து விட்டு முழு நேர இஸ்லாமியப் பணியில் என்னை இணைத்துக் கொண்டேன். என் கணவரின் உற்ற தோழி நான்தான். அவருக்கு என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர் முழுமையாக என்னில் தங்கியிருந்தார். அவர் வீட்டை முற்றாகச் சார்ந்த ஓர் ஆளுமை. கணவரின் அனைத்து வேலைகளையும் நானே என் கைப்படக் கவனிப்பேன். அவரது குடும்ப வியாபாரத்திலும் நான் முழுமையாகக் கைகொடுத்து வந்தேன். நான் ஜமாஆவில் இணைவதற்கும் அவரது ஆதரவு இருந்தது. எனினும் எல்லாவற்றிக்கும் நான் இல்லாத குறை அவரை மிகவும் பாதித்தது. சொகுசுகளை இழக்க வேண்டியும் சில விடயங்களிற்கு இயைந்து போக வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த இரு வருடங்களாக மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார், அல்ஹம்து லில்லாஹ்!

இலங்கைக்கு வந்திருப்பது இது தான் முதல் முறையா?

ஆம்

இலங்கையைப்பற்றி உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறது?

இலங்கையின் காலநிலை மலேசியாவுடையது போலவே இருக்கிறது. மழை அதிகமாகப் பொழிகிறது. பழங்களின் வகைகளைப் பார்க்கும்போது பிரமித்துப்போய் விடுகிறேன். வாழைப்பழத்தில் மட்டுமே எத்தனை வகை? மாவனல்லை மிக அழகான இடம்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இலங்கைப்பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்ன?

உண்மையில் எனக்கு அதிகமான இலங்கைப் பெண்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லை. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சார்ந்த சகோதரிகளையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது. வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டேன். அவர்கள் அதிர்ந்து பேசாத மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம். நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிகளைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்து லில்லாஹ்!

வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையானவர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டு வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை. இதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?

இந்தக்கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கினால் ஒருபெண்ணுக்கு மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையா நடந்து கொள்ள வேண்டிய தருணங்களும் வருகின்றன. முக்கியமாக அந்திய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. வயதானவர்களிடமும் குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும். ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம். எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள்ளேன். அவருடன் நான் இருக்கும் போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும் போது உறுதியாக இருந்து என் கருத்துகளை தைரியமாக வெளியிடுவேன்.

எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

ஆம், நிச்சயமாக. இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச் சார்ந்தது என்பது உண்மைதான். எனினும் இன்றைய உலகில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதை விட உண்மை. எல்லாப் பெண்களும் வெளியில் போய் வேலை செய்ய வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் அவளுக்கானப் பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும். தன்னுடைய சொந்தக் கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம். உங்களின் கணவர் உங்களை விட்டுப் பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாக் இருக்கலாம்; அல்லது அவரது மனம் மாறலாம். எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் எம்மால் கூறமுடியாது. அப்படிப் பட்ட இக்கட்டான கட்டங்களில் யாரையும் சார்ந்து நில்லாது குடும்பத்தைக் கொண்டு செல்லக் கூடியப் பொருளாதார பலமும் மனோ வலிமையும் பெண்ணுக்குத் தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம். நாம் அனைவரும் நமது உரிமைகள் யாவை என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை; உங்கள் துணைவரிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை. உரிமைகள் பொறுப்புகளோடு சார்ந்தவை என்பதையும் நாம் மறக்கக்கூடாது. பொருளாதாரச் சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன்.

காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். அதிகமான பெண்கள் மன அழுத்தம் (stress )பற்றி முறையிடுகிறார்கள். ஓர் அன்பான மனைவியாக, அணைக்கின்ற தாயாக, உடல் நலம் பேணும் மருத்துவராக, பாரளுமன்ற அங்கத்தவராக நீங்கள் பல பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நிர்வகிக்கும் ஒரு பெண்மணி. உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தயங்கக்கூடாது. மனதுக்குள் குமையும் எண்ணங்களை உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது. மனதுள் நினைப்பதை அப்படியே தெரிவித்து விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில் அதைத்தான் செய்கிறேன். திட்டமிட்டு ஒழுங்கு படுத்தல், முன்னுரிமைப் படுத்தல் இவை இரண்டின் அடிப்படையிலும் என் பணிகளை மேற்கொள்கிறேன், அல்ஹம்துலில்லாஹ!

இஸ்லாமிய ஆட்சியை நோக்கிய பயணத்தில் ( Mass media) தொடர்பூடகங்களின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

மிக முக்கியமானது. மீடியா ஒரு சக்தி. நாம் இதனை கவனமாகவும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனுடனும் கையாள வேண்டும். பொது உரை அல்லது ஒரு நேர்காணலை வழங்கும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து நடக்க வேண்டும். மீடியாவின் நவீனப் போக்குகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவதும் நமக்கென தனி மீடியாக்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.

உங்களைப் போன்ற வெளிநாட்டுப் பெண் ஆளுமைகளை வரவேற்று சிலாகிக்கின்ற நமது அதே ஆண் சமூகம் தமது பெண்களின் ஆளுமையையும் வெளிப் பிரவேசத்தையும் வரவேற்க இன்னும் பூரணமாகத் தயாராகவில்லை. இது பற்றி….

இது மிகவும் நிதர்சனமான கருத்து. பாரம்பரிய பழைமைவாதச் சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது சமூகத்தில் 50% ஆனவர்கள் பெண்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள். ஆனால் ஆண்கள் தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு செயற்படுவதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆண்களைப் போலவே பெண்களிலும் தலைவர்கள் உண்டு. எனினும் ஆண்கள் எப்போதும் பெண்களை வழிநடாத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். பெண்களின் திறமையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு ஆண்களிடம் காணப்படுகிறது.

இந்தப் போக்கு மாற்றமுற வேண்டுமாயின் எவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

ஆண்கள் - அதிலும் குறிப்பாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர், பெண்களைத் தங்களுக்கு சமமாக மதிக்க வேண்டும். பெண்களுடைய விடயங்களை ஓரக்கண்கொண்டு பார்க்காது நடுநிலையுடன் அணுக வேண்டும். சிலர் நாங்கள் பெண்களைப் பயிற்றுவிக்கிறோம் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள் - பயிற்றுவிக்கக்கூடிய திறமையுள்ள பெண்கள் இருப்பதையே மறந்து. இலங்கையிலுள்ள எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் அதிஉயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் பெண்கள் இல்லை. இதனை நான் ஒரு பெரும் குறையாகக் காண்கிறேன். இது நிறுவனத்தின் சமநிலையைப் பாதிப்பதாகும். ஆண்கள் தவறு செய்தால் பெண்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக் கூடாது.. இது ரசூலுல்லாஹ்வின் வழிமுறை. சில பெண்கள் ஆண்களை விட அழகான கருத்துடையவர்களாக, திறமையான நிர்வாகிகளாக இருக்கக் கூடும். இஸ்லாமிய இயக்கம் இதை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஈகோ பார்ப்பது இஸ்லாமல்ல.

உங்களுடைய இயக்கத்திலும் இந்த நிலை காணப்படுகிறதா?

நான் ஒரு வட்ட மேஜையில் கலந்துரையாடலுக்காக உட்காரும்போது என்னை, கருத்து வெளியிடக் கூடிய ஒருவராகத்தான் எண்ணிக் கொள்கிறேன்; ஒரு பெண்ணாகவல்ல. எமது அமைப்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலை காணப்பட்டது. எமது ஆண்கள் எதிர்கட்சி தலைவியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசுவார்கள். எமது பெண்கள் ஒரமாக வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அல்ஹம்து லில்லாஹ், இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. எமது அதியுயர் மட்ட சூறாவில் பெண்களும் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.

இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புகளை எடுக்கக்கூடிய தகுதியையும் ஆளுமையையும் உங்களில் ஏற்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி எல்லை மீறிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும் போது, அல்லாஹ் எமது குடும்பத்தைக் கவனித்துக்கொள்வான்.

சகோதரி மாரியா இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் இறைநெறிப் போராட்டத்துக்குச் சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன் விடைபெற்றோம்.

-ஷமீலா யூஸுஃப் அலி.

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்