சமீலா யூசுப் அலி
Dr Siham Kardhawi |
“ இஸ்லாமிய இயக்கம் ஆரம்பித்து பல்லாண்டுகள் கடந்தாலும் சடவாதச்சிந்தனைகளைக்கும் மாக்ஸிசப்போக்குகளுக்கும் தனியொருவளாகவும் வினைத்திறனுடனும் முகங்கொடுக்கக்கூடிய பெண் தலைமைத்துவம் இன்னுமே வெளிவரவில்லை.பெண்கள் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆண்களின் இரக்கமற்ற முயற்சிகளின் விளைவே இது.ஏனெனில் பெண்கள் அவர்களை வெளிப்படுத்த ,அவர்களது விசேட தலைமைத்துவ ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்காட்ட அல்லது ஆண்களின் ஆதிக்கம் இல்லாது பெண்கள் தமது வேலைகளை தாமே முன்னெடுத்துச்செல்லும் வல்லமையை நிரூபிக்க ஆண்கள் ஒரு போதும் உண்மையான வாய்ப்புக்களை வழங்கவில்லை.பெண்களின் இஸ்லாமியப்பணி வெற்றிபெறுவதற்கும் இஸ்லாமிய இயக்கத்தில் நீடித்திருக்கவும் ,இஸ்லாமிய இயக்கம் பெண் தலைமைகளை பிரசவிப்பது கட்டாயமாகி விடுகிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.பெண் தலைவர்கள் அழைப்புப்பணி,சிந்தனை,அறிவியல்,இலக்கியம்,கல்வி போன்ற அனைத்துத்துறைகளிலும் தோன்ற வேண்டும்.ஆண்களைப்போலவே பெண்களும் இறைவனுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்ய முடியும்.உயிர்த்தியாகத்தாக்குதலில் பெண்கள் முன் செல்லலாம்.அது முடியாத ஒரு வேலையோ அல்லது கடினமான ஒரு பணியோ அல்ல.அபரிமிதான அறிவுடைய ஆண்களும் இருக்கிறார்கள் பெண்களும் இருக்கிறார்கள்.அறிவும் புத்தாக்கத்திறனும் ஆண்களுடைய தனியுரிமை அல்ல.
அல்குர்ஆனில் அல்லாஹ் ,தனது மக்களை அறிவுடனும் வீரத்துடனும் வழிநடாத்திய சேபாவின் அரசியைப் பற்றி வீ’ணுக்காக சொல்லவில்லை.”
பெண்களின் சமூகப்பங்களிப்பு பற்றி கலாநிதி யூசுப் அல் கர்ழாவியின் சிந்தனையிலிருந்து சிதறிய சில துளிகள் இவை.
பெண்களை கண்ணியத்தையும் மரியாதையையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வியல் மட்டுமல்லாது சமூகவியல்,அரசியல்,அறிவியல் துறைகளிகளும் தனித்துவமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது டொக்டர் யூசுப் அல் கர்ளாவியின் வஹியின் அடியில் எழுகின்ற சிந்தனை.
1926 இல் எகிப்தின் குக்கிராமொன்றில் குடியானவப் பெற்றோர்களின் மடியில் தவழ்ந்த ஒரு குழந்தை இன்று வல்லரசுகளின் அடிநெஞ்சுக்கு நெருப்பு வைக்கும் வைகறைச்சூரியனாக எழுந்து நிற்கிறது,புகழனைத்தும் இறைவனுக்கே.
எட்டுத்திசைக்கும் ஒளி கொடுக்கும் நிலவை வீட்டு விளக்குக்குள் அடைக்க முடியாது.பெண்களின் பங்களிப்பை மறுத்து விட்டோ அல்லது மறந்து விட்டோ எந்தவோரு புரட்சியும் இஸ்லாமிய எழுச்சியும் சாத்தியமில்லை.
பெண்களின் பங்களிப்பினையும் முன்னேற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பற்றி மேடைகளில் முழங்கும் பீரங்கிகள் தம் பெண்கள் என்று வரும் போது வெறும் புஸ்வானமாய் போய்விடும் அவலம் அன்றாடம் காண்கிறோம்.
ஆக்ரோஷமாய் எழுதும் பேனாக்கள் கூட தன் மகள்,தன் மனைவி அல்லது தன் சகோதரி என்று வரும் போது ‘எதற்கு மேற்படிப்பு…. வம்பை வளர்க்காமல் வீட்டுக்குள் முடங்கு’ என்ற வசனங்கள் உதிர்ப்பது தான் வழமை.
பெண்ணின் தனித்துவத்தை மதித்து அவளது சமூகப்பங்களிப்பின் எல்லைகளை கண்காணத்தூரம் வரை விஸ்தரித்த கர்ளாவி அவர்கள் தன் பேச்சுக்கும் எழுத்துக்கும் வாழும் உதாரணமாக இருப்பது மிக மிக சந்தோசம் தருகிறது.
‘ஊருக்குத்தான் உபதேசம் உனகல்லடி மகளே” என்று வெறும் வாய்ச்சொல்லோடு நிறுத்தி விடாமல் தன் மகள்களை சாதனையின் எல்லை வரை பறந்து செல்ல சிறகுகள் வழங்கியிருக்கிறார் கர்ளாவி அவர்கள்.பேராசிரியர் டொக்டர் இல்ஹாம் கர்ளாவியும் டொக்டர் ஷிஹாம் கர்ளாவியும் ஒரு வரலாறு படைத்த தந்தைக்குப் பிறக்கும் பேறு பெற்றவர்கள்.
டொக்டர் இல்ஹாம் கர்ளாவி சர்வதேசரீதியில் அறியப்படும் ஓர் அணுவியல் விஞ்ஞானி.தற்போது கத்தார் பல்கலைக்கழகத்தில் அணுப் பெளதீகவியல் பேராசிரியராக பணியாற்றும் அவர்,தனது கலாநிதிப்பட்டத்தை (Ph.D.) லண்டன் பல்கலைக்கழத்திலிருந்து 1991 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.அவரது டொக்டர் பட்டத்திற்கான ஆய்வு பொசிட்ரொன் பெளதீகவியல் (Positron Physics) ஆகவிருந்தது.
பின்னாளில் டொக்டர் இல்ஹாம் ,கத்தார் பல்கலைக்கழகத்தில் பொசிட்ரொன் உத்தியை பயன்படுத்தும் ஆய்வு கூடத்தை நிறுவுவதற்காக தன் உடல் வருத்தி உழைத்தார்.மத்தியகிழக்கிலேயே முதன்முறையாக ‘மெது பொசிட்ரொன் கதிர் சக்தி மாறியை” அமைக்கும் பெருமை அவர் காலடியில் விழுந்தது,அல்ஹம்துலில்லாஹ்.இன்று முறையாக நிறுவப்பட்ட பொசிட்ரொன் ஆய்வு கூடத்தை நடாத்தி வரும் டொக்டர் இல்ஹாம் 2005 ஆண்டில் ‘மெது பொசிட்ரொன் கதிர்கள் ‘சம்பந்தமான ஒரு சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்து தலைமை வகித்தார். கத்தார் பல்கலைக்கழகத்தின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வுக்கான விருதும் 2008 இல் அறிவியலுக்கு பங்களித்த அறபுப்பெண்களுக்கான அஹ்மத் பதீப் விருதும் அவர் வீடு தேடி விசாரித்த குறிப்பிடத்தக்க அங்கீகாரங்கள்.
தேசிய,பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் பலதரப்பட்ட ஆய்வு முயற்சிகளில் சம்பந்தப்பட்டிருக்கும் இல்ஹாம் கர்ளாவி அவர்கள் பல்வேறு சர்வதேச விஞ்ஞான அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பது உபரிச்செய்தி.
அணு மற்றும் அது சார்ந்ததுறைகளில் சர்வதேச அரங்கில் கத்தாரைப்பிரதிநிதித்துவப்படுத்திவரும் டொக்டர் இல்ஹாம் அவர்கள் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் ஓர் அழகிய உதாரணம்.
அபரிமிதமான ஆர்வமும் தன்னம்பிக்கையும் புத்தாக்க வேட்கையும் இல்ஹாம் அல் கர்ளாவியின் இரத்தத்தில் ஓடுபவை.பெளதீகவியல் துறையை கற்பிப்பதற்கான திறன்களை முன்னேற்றுவதற்காக தன்னை உருக்கிக்கொண்டு உழைக்கும் இல்ஹாம் “கத்தார் பெளதீகவியல் அமைப்பி”னை நிறுவி அதனூடாக ஏராளமான பயிற்சிப்பட்டறைகளையும் பாடநெறிகளையும் நடாத்திவருகிறார்.
முஸ்லிம் உலகின் ஆன்மீகத்தலைவராக அறியப்படும் கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் இன்னொரு புதல்வி டொக்டர் சிஹாம் அல் கர்ளாவி ; சாதனை வானில் ஒளிவிடும்
இன்னொரு நட்சத்திரம். தற்போது கத்தார் விஞ்ஞான மற்றும் கலைகளுக்கான கல்லூரியின் டீனாகப் பணிபுரியும் டொக்டர் சிஹாம் கர்ளாவி அதற்கு முன்னர் கத்தார் அகடமியின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கத்தார் விஞ்ஞான மற்றும் கலைக்களுக்கான கல்லூரியின் இரசாயனவியல் துறைத்தலைவராகவும் மட்டுமல்லாது மாணவர் விவகாரங்களுக்கான இணைத்தலைவராகவும் இயங்கியிருக்கும் ஒரு சாதனைப்பெண்.
கத்தார் பல்கலைக்கழகத்தில் 1981 ஆம் ஆண்டு இரசாயனவியலில் முதற்பட்டம் பெற்ற டொக்டர் சிஹாம் கெய்ரோவின் புகழ் வாய்ந்த “ஐய்ன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது M.Sc முதுமானிப்பட்டத்தைத்தொடர்ந்தார்.தனது கலாநிதிப்பட்டத்துக்காக 1987 இல் ஐக்கிய இராச்சியத்தின் பெர்க்செயர் பல்கலைக்கழகத்தோடு இணைந்தார்.டொக்டர் சிஹாம் அல் கர்ளாவி 1992 இலிருந்து 1994 வரை கத்தார் பல்கலைக்கழத்தின் இரசாயனவியல் இணைப்பேராசிரியராக தன் தனித்துவமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்,அல்ஹம்துலில்லாஹ்.
2003 இல் டாட் “DAAD” (Deutscher Akademischer Austausch Dienst) என்ற விருது சிஹாமின் கதவுகளைத் தட்டியது.17க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளைச் (இவை synthetic organic chemistry and photochemistry சம்பந்தமானவை) சொந்தம் கொண்டாடும் விரல்கள் டொக்டர் சிஹாமுக்குரியவை.
பெண்ணின் தனித்துவத்தை மதித்து அவளது சமூகப்பங்களிப்பின் எல்லைகளை கண்காணத்தூரம் வரை விஸ்தரித்த கர்ளாவி அவர்கள் தன் பேச்சுக்கும் எழுத்துக்கும் வாழும் உதாரணமாக இருப்பது மிக மிக சந்தோசம் தருகிறது.
எகிப்தில் எழுந்த இஸ்லாமிய எழுச்சிப்புயல் இனி உலகின் மூலை முடுக்கெங்கும் தன் காலடிச்சுவடுகள் பதிக்கத்தான் போகின்றது.இஸ்லாமிய இயக்க ஒழுங்குகளில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என இஸ்லாமிய ஆய்வாளர்களும் அறிஞர்களும் தம் கருத்துப் பகிர்கிறார்கள்.
இலங்கை மண்ணும் இஸ்லாமிய இயக்கமும் ஆரோக்கியமான பெண் ஆளுமைகளை வேண்டி நிற்கிறது.சில போலித்தனமான பிடிவாதங்கள்,வீணான வாதப்பிரதிவாதங்களுக்கு மேலால் நாம் எழுந்து நிற்க வேண்டிய தேவை வலுத்திருக்கிறது.
ஆண் தலைமையே வரவில்லை;இங்கு பெண் தலைமை பற்றிப் பேசுகிறார்கள் என் சிலர் குசுகுசுப்பது காதில் விழாமலில்லை.ஆண்கள் உருவாகித்தான் பெண்கள் உருவாக வேண்டும் என்றிருந்தால் முஸ்லிம் சமூகம் பாதி செயலிழந்த உடலாய் வாழவேண்டிய வேதனை வந்து விடும்.
இந்தப்பாதை அல்லாஹ்வின் பாதை.
பதியும் எம் பாதங்களின் வலிமைக்கும் பொறுமைக்கும் பால்வேறுபாடு இல்லை.
சுவனத்தை நோக்கி நீண்டு நெடித்தோடும் ஆறு, ஓரிடத்தில் தேங்கி நாற்றமெடுக்கும் தேவையில்லை.
அழகிய கூலி அர்ப்பணத்திற்கும் அழியாத நோக்கத்திற்கும் தான்.
செல்வோம்
உள்ளத்தில் அல்லாஹ்வை சுமந்து செல்வோம்.
Prof Ilham Kardhawi |
0 comments:
Post a Comment