அச்சு ஊடகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு –ஒரு பார்வை


உலகம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது.10 ஆண்டுகளுக்கு முன் எம்மால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத பல விடயங்களை
அறிவியல் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று சாத்தியமாக்கி விட்டது.சாதாரணமாய் நகர்ந்து கொண்டிருந்த எமது வாழ்க்கை முறையை, இந்த நூற்றாண்டின் இலத்திரனியல் புரட்சி அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.
இதழியல் மற்றும் பொதுஜன ஊடகத்துறையின் அபிவிருத்தி ஒரு பக்கம் திகைப்பூட்டக்கூடிய அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.மறுபுறம் ஊடகங்களினூடாக கட்டற்ற தகவல் பரிமாற்றமும் அதனூடான பயங்கரமானதொரு கலாச்சாரச் சீரழிவும் எமது விழிகளை விரியச்செய்துள்ளன.
பொதுஜன ஊடகத்துறை( Mass Media ) எனும் போது

ü  அச்சு ஊடகம் Print Media
ü  இலத்திரனியல் ஊடகம் Electronic Media
ü  புதிய ஊடகம் New Media/E Media

என வரிசைப்படுத்தலாம்.
அச்சு ஊடகத்தில் பத்திரிகை,சஞ்சிகை,துண்டுப்பிரசுரங்கள்,சிறப்பு மலர்கள் போன்றவை உள்ளடங்கும்.
வானொலி,தொலைக்காட்சி மற்றும் சினிமா ஆகியவை இலத்திரனியல் ஊடகங்களாகும்.
புதிய ஊடகம் அல்லது ஈ ஊடகம் எனும் போது அது இணையத்தளங்கள்,இணையப்பத்திரிகைகளிருந்து தொடங்கி பிரத்தியேக வலைப்பூக்கள்(Blogs) வரையிலான இணைய வீதியில் கிடைக்கும் அனைத்து கருத்து வெளிப்பாட்டு வடிவங்களையும் குறிக்கும்.

இதழியல் பற்றி “நீங்கள் கவனமாக இருக்கா விட்டால் பத்திரிகைகள் உங்களை அநியாயத்திற்குள்ளாக்கப்படுபவர்களை வெறுக்கவும்,அநியாயம் செய்பவர்களை விரும்பவும் வைத்து விடும்”என்று மால்கம் x ஒரு முறை கூறினார்.

ஊடகங்கள் மனித வாழ்வில் அதிக தாக்கம் செலுத்துகின்றன.வெகுஜன ஊடகங்களின் வழிமுறைகள் வித்தியாசமாக இருக்கலாம்.ஆனால் அனேகமாக அவற்றின் நோக்கங்கள் வரையறுக்கப்பட்டவை.

1.   தகவல் வழங்கல்   Information
2.   அறிவுறுத்தல் Instruction
3.   களிப்பூட்டல் Entertainment
4.   விளம்பரப்படுத்தல் Advertisement
5.   கருத்து உருவாக்கம் Shaping Opinion

அச்சு ஊடகங்களுக்கு பெண்கள் வழங்கக்கூடிய பங்களிப்பு எனும் போது அது தனிமனித ஆர்வத்தையும் ஆற்றலையும் பொறுத்து பல்வேறு நிறங்களை எடுக்கலாம்.
ú  வெளிவரும் அச்சு ஊடகங்களை வாசிப்பது
ú  அச்சு ஊடகங்களுக்காக எழுதுவது
ú  அச்சு ஊடகங்களில் வடிவமைப்பு,செம்மைப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்தல்.
ú  அச்சு ஊடகங்களின் விற்பனை நடவடிக்கைகளில் பங்கெடுப்பது.

இலங்கை முஸ்லிம் பெண்களின் அச்சு ஊடகங்களுக்கான பங்களிப்பு கடந்த தசாப்தங்களில் எவ்வாறிருந்தது என்பதை ஒரு கணம் திரும்பிப்பார்ப்போம்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம் பெண்களில் சுமார் 3% இனர் மாத்திரமே எழுத வாசிக்கத்தெரிந்திருந்தனர் என்கிறது ஒரு ஆய்வு.(நன்றி ‘இலங்கையில் முஸ்லிம் கல்வி’ நூல்)
ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களின் வாசிப்பார்வம் குறைந்திருந்ததோடு மிகக்குறுகிய வானமே அவர்களின் எல்லையாக மாறிவிட்டிருந்தது.சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் மேலைத்தேயக்கல்வி கிரிஸ்தவ போதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் அது முஸ்லிம்களின் கலாச்சார விழுமியங்களில் மாறாத வடுக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.எல்லாக் காலங்களிலும் குர் ஆன் மத்ரஸா முறை அமுலில் இருந்ததால் முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானோர் அரபு மொழியில் எழுதவும் வாசிக்கவுமான ஆற்றலைப்பெற்றிருந்தனர்.

தேசம் அடிமைத்தளையிலிருந்த விடுதலைப்பெற்ற பொழுதுகளில் இலவசக்கல்வியின் அறிமுகமும்,பெண்கல்வி பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தின் கண்களை திறக்கச்செய்தன.வாசிப்பார்வம் அதிகரித்தது.
எனினும் சுதந்திரமடைந்து ஆறு தசாப்தங்கள் கடந்தும் இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப்பங்களிப்பு திருப்திகரமான மட்டத்தில் இல்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
செயற்கைக் கோள் தொழிநுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு குக்கிராமத்தின் மூலையிலிருந்து கொண்டே பல்வேறு தேசங்களின் தொலைக்காட்சி அலைவரிசைகளை கால் நீட்டி இரசிக்கும் வரம் வாய்த்திருக்கிறது.அது வரமா சாபமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.சின்னத்திரை நாடகங்களிலும் சமையற்கலை நிகழ்ச்சிகளிலும் சிக்கிக்கொண்டுள்ள நம் பெண்கள்,அச்சு ஊடகங்களிருந்து இன்னும் அந்நியமாகி வரும் அவலம் நேர்ந்துள்ளது. அச்சு ஊடகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பைத் தீர்மானிக்கும் சில காரணிகளை இவ்வாறு அடையாளப்படுத்தலாம்.

ü  கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
ü  தகவல் மூலங்களை அணுகுவதற்கான சுதந்திரம்
ü  பொருளாதாரப்பின்னணி
ü  கல்வி மட்டம்
ü  அமைதியான வீட்டுச்சூழல்
ü  அமையும் ஓய்வு நேரத்தின் அளவு
ü  சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும் அழுத்தங்களும்
ü  சரியான பயிற்றுவிப்பும் வழிகாட்டலும்
ü  நவீன உலகம் மற்றும் வெகுஜன ஊடகங்களுடனான தொடர்பு
ü  தனிப்பட்ட ஆர்வம்
ü  தேடல்

கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்

ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை இலங்கை வாழ் எமக்கெல்லாம் இருக்கிறதா என்பது இன்னுமே வினாக்குறியாய்த் தான் விறைத்து நிற்கிறது. பால் வேறுபாடின்றி ஊடகவியலாளர்கள் வன்முறைக்காளாகும் முன்னணி தேசமாக நம் தேசம் உருமாறியிருக்கிறது.
ஒரு கருத்து - அது சரியா பிழையா என்பது இரண்டாவது விடயம், அதை வெளிப்படுத்தும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.கருத்து வெளிப்பாட்டை அனுமதிக்காத பட்சத்தில் அவை கூடாத இடங்களில் வெடித்து வெளிவரும் அபாயம் இருக்கிறது.ஒவ்வொரு அச்சு ஊடகத்திற்கும் ஒரு கொள்கை இருக்கும்,ஒரு நோக்கு இருக்கும்.பெண்களின் சமூக வாழ்வியல் பல்வேறு பரிணாமங்களை எடுத்து வரும் போது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்திற்கு நியாயமற்ற தடைகளை அச்சு ஊடகங்கள் விதிக்கக்கூடாது.அண்மையில் ஒரு ஆய்வுக்காக பெண்கள் ஏன் அதிகம் சமையலைப் பற்றியும் அலங்காரக்கலை பற்றியும் அதிகமாக எழுதுகிறார்கள் அல்லது வாசிக்கிறார்கள் என்று கலந்துரையாடிய நேரம் சுவையான விளக்கங்கள் சில வெளிச்சத்துக்கு வந்தன.
பெண்கள் அரசியல்,கல்வி,பொருளாதார மேம்பாடு அல்லது சமுதாயப்பிரச்சினைகள் பற்றி எழுதும் போது எமது சமூகம் அவர்களை’பெண்ணியல் வாதி’என முத்திரை குத்தி விடுகிறார்கள்.
பெண்ணியல்வாதி என அழைக்கப்படுவதை பல பெண்கள் விரும்புவதில்லை.இதனால் நமக்கெதுக்கு வீண் வம்பு என சாதாரணமான விடயங்களை மாத்திரம் பட்டும் படாமலும் எழுதி விட்டுச்சென்று விடுகின்றனர்.
இன்னும் சிலர் எழுதப்படும் விடயங்களை எழுத்தாளரின் வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தி பார்க்கின்ற அதிமேதாவித்தனத்தைச் செய்கின்றனர்,பெரும்பாலும் இந்த விபத்து பெண் எழுத்தாளர்களுக்கே நேர்கிறது.சில விடயங்களை எழுத நினைத்தாலும் இதை நம் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பார்களோ என்ற பயம் பலரது பேனாக்களைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் சஹாபாக்களுக்கு கற்பிப்பவராக இருந்தார்.கவிதையிலும் மருத்துவத்துறையிலும் செம்மையான தேர்ச்சி கண்டிருந்த ஆயிஷா( ரழி) அவர்கள் பெண் என்பதாலோ அல்லது வயது குறைந்தவர் என்பதாலோ அவரது அறிவும் முதிர்ச்சியும் புறக்கணிப்புக்காளாகவில்லை.
பெண் என்றவுடனேயே எழுத்தின் தரம் பற்றிய ஐயப்பாடுகள் எழுகின்றன.ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.இதற்கு முழுமையாக அச்சு ஊடகங்களை நோக்கி சுட்டு விரல் நீட்டி விட முடியாது.பெண்களின் வாசிப்பு ஒரு அட்டைப்பெட்டிக்குள் அடங்கிப்போய் விட்டதால்எழுத்துக்களின் வீரியமும் வீச்சும் கணிசமாகக் குறைந்துள்ளது என்ற உண்மையும் மறுபுறம் உறுத்துகிறது.

தகவல் மூலங்களை அணுகுவதற்கான சுதந்திரம்

தகவல் மூலங்களை அணுகுவதற்கான சுதந்திரம்(Access to all sources of information ) எனும் போது தகவல்களைப்பெறக்கூடிய் அனைத்து மூலங்களையும் ஊடகங்களையும் தடையின்றி பயன்படுத்தக்கூடிய சக்தியைக்குறிக்கும்.இணையம் இந்த நூற்றாண்டின் அலாவுதீன் பூதம்.‘தகவல் வெடிப்பு’(Information Explosion)  ஏற்படக் காரணமாய் அமைந்த நினைக்க முடியாதளவு தகவல்களை உள்ளடக்கிய சுரங்கம்.
இன்று எத்தனை பெண்களுக்கு இணைய வீதிகளில் உலவும் வாய்ப்பு கிடைக்கிறது? அதை விடுவோம்.அன்றாடப் பத்திரிகைகள்,மாதாந்த சஞ்சிகைகள், மற்றும் சமகாலப்பிரச்சினைகள் பற்றிய நூல்களின் கிடைப்பனவு அல்லது பொது நூலகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு பெண்களுக்கு போதுமானளவு கிடைக்கிறதா?

பொருளாதாரப்பின்னணியும் கல்விமட்டமும்

பொருளாதாரப்பின்னணியும் கல்விமட்டமும் ஓரளவு பெண்களின் ஊடகப் பங்களிப்பைத் தீர்மானிக்கின்ற காரணிகளாக அடையாளங்காணப்பட்டாலும் அவை குறிப்பிடத்தக்களவு செல்வாக்கான அம்சங்கள் அல்ல.

அமைதியான வீட்டுச்சூழல்

அமைதியான வீட்டுச்சூழல் எனும் போது பலருக்கும் சப்தம் அற்ற மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படும் வீடுகள் நினைவுக்கு வரும்.பிரச்சினைகள் எல்லோருடைய வாழ்விலும் வெவ்வேறு முகமூடிகளுடன் தோற்றமளிக்கும்.பாகிஸ்தான் இந்தியாவாய் மோதிக்கொள்ளும் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என பலர் அங்கலாய்ப்பது காதுகளுக்கு கேட்காமலில்லை.வீட்டுப்பிரச்சினைகள் முடியட்டும்,குழந்தைகள் கொஞ்சம் வளரட்டும் என்றெல்லாம் வாசிப்பதையும் எழுதுவதையும் ஒத்திப்போடுங்கள்.காதோரமாய் தலை நரைத்து பேரன் பேத்திகளும் பிறந்த பிறகும் இதே பல்லவி தொடரும்.அமைதியான சூழலை என்பது மனதுக்குள் முதலில் நட வேண்டும்.அதன் பின்னர் தான் வெளியில் அவை கிளை விரிக்கும்.பிரச்சினைகளும் மன அழுத்தமும் முதுகு முறிக்கும் நேரத்தில் தான் எழுத்து வடிகாலாகிறது;தரமாய் எழுத முடிகிறது என்று கூறும் பெண்கள் அதிஷ்டசாலிகள்,
ஓய்வு நேரம் தானாக அமைவதில்லை.அதை நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்.வீட்டிலும் வெளியிலும் எமது நேரத்தை இலக்குடன் திட்டமிட்டுக்கொள்வது பிரத்தியேகமாக ஒவ்வொரு பெண்ணினதும் செயற்றிரனிலும் குடும்பத்தின் ஒத்துழைப்பிலும் தங்கியுள்ளது.

சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும் அழுத்தங்களும்

சமூகத்தின் எதிர்பார்ப்புக்களும் அழுத்தங்களும் அச்சு ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பின் மீது தாக்கம் செலுத்தும் இன்னோர் அம்சமாகும்.உலகில் அதிகம் பிழையாகப் புரியப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்கிறார் ஓர் அறிஞர்.இஸ்லாத்தைப்பற்றி பிறமதத்தவர்கள் புரிவது எப்படிப்போனாலும் இஸ்லாத்தில் பெண்களின் நிலைப்பாடு பற்றி முஸ்லிம்கள் பலருக்கே இன்னும் தெளிவில்லை என்பது துல்லியமான உண்மை.திருமணம் என்ற சந்தையை நோக்கி வளர்க்கப்படும் செம்மறியாட்டு மந்தையா பெண்கள்? எழுதிக்கொண்டிருந்த அல்லது சமூகப்பணியாற்றிக் கொண்டிருந்த பல பெண்களின் முகவரிகள் திருமணத்தின் பின் காணாமல் போய்விடுகின்றன.சரியாக இருந்தால் திருமணத்தின் பின்னர் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகரித்திருக்க வேண்டும்.பெண்களால் சமுதாய எழுச்சி ஏற்பட வேண்டும் என்று மேடை அதிரப்பேசும் விரல் வலிக்க எழுதும் பலர் சொந்த வாழ்வில் தன் தாயை,துணைவியை,சகோதரியை அல்லது மகளை நாலுசுவர்களுக்குள் சொன்னதை செய்து கொண்டு அடங்கி ? இருப்பதையே விரும்புகின்றனர் என்பது தித்திக்காத போதும் சத்தியம்.
கொள்கையிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பொறுத்தவரை இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.
''ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்''
(அல்குர்ஆன் 016:097).

''ஒவ்வொரு மனிதனும் தான் செய்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டுள்ளான்'' (அல்குர்ஆன் 074:038).

.ஒரு பெண் வீட்டு வேலையை தரக்குறைவானதாகவோ அல்லது இழிவானதாகவோ கருத வேண்டும் என்று தப்பர்த்தம் கொள்தல் அல்ல அவளது திறமைக்கும்,தாகத்திற்கும் ஏற்றதான களம் அமைத்துக் கொடுத்தலும் அவளது சமுதாயப்பங்களிப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் சமூகத்தின் கடமையாகும்.யாருக்கோ வந்த விருந்து என்று வாளாவிருக்காது பெண்கள் தமது பெறுமதியையும் தனித்துவத்தையும் உணர்வதோடு தம் குடும்பத்தினருக்கும் அதனை உணர்த்த முயற்சிக்க வேண்டும்.

சரியான பயிற்றுவிப்பும் வழிநடாத்தலும்

சரியான பயிற்றுவிப்பும் வழிநடாத்தலும் அச்சு ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பை காத்திரப்படுத்தும்.
இன்று எமது அச்சு ஊடகங்களுக்கு பெண்களிடமிருந்து வரும் ஆக்கங்களைப்பார்த்தால் கண்ணுக்குள் ஊசி குத்தியதாய் வலிக்கும்.
தேய்ந்து போன தலைப்புக்கள் அல்லது எங்கோ தொடங்கி எங்கோ முடிகின்ற கட்டுரைகளுக்கு மத்தியில் சில நட்சத்திரங்களும் கண்சிமிட்டாமலில்லை.இலங்கையில் எங்கு முறையாக இதழியல் பற்றி கற்கலாம் அல்லது எழுத்தை செம்மைப்படுத்தி தரமாக்குவதற்கான பயிற்சி முகாம்கள் எங்கு நடைபெறுகின்றன என்பது பற்றியெல்லாம் எழுதுகின்ற பல பெண்கள் அலட்டிக்கொள்வதில்லை.இதனால் தான் மழையில் முளைத்த காளானாய் இஸ்லாமிய சாயம் பூசிய தரமற்ற புத்தகங்கள் இப்போதெல்லாம் நிறையவே வெளிவருகின்றன.

தனிப்பட்ட ஆர்வமும் தேடல் இன்மையும்

முஸ்லிம் பெண்களின் தேடல் கிணற்றில் நீர் சேந்துவதோடு நின்று விட்டிருக்கிறது;சமுத்திரத்தைக் கண்டதுமில்லை;அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் இல்லை.
தேடல் என்பது இரண்டு சிறுகதைகளை வாசித்து விட்டு மூன்றாவதாக ஒன்றை எழுதுவதல்ல.பல வித்தியாசமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை விமரிசனரீதியாக வாசிப்பதோடு அவர்கள் கையாண்டுள்ள உத்திகளை அறிந்து கொள்வது,உள்ளடக்கத்தினை இறுக்கமாக்குவதோடு அது தான் விரும்பிய கருத்தை வெளிப்படுத்துகிறதா என்பதை மீள உறுதி செய்து கொள்வது என தேடல் நீளும்.ஒவ்வொரு நல்ல ஆக்கத்தின் பின்னும் நிச்சயமாக கடும் உழைப்பும்,முடிவறாத தேடலும் ஒளிந்திருக்கும்.
சில குறிப்பிட்ட பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,அதிலும் குறிப்பாக அழகுக்குறிப்பும் சமையல் செய்முறைகளும் என்றளவாக தேடல் சுருங்கும் போது அதன் வெளிப்பாட்டை எழுத்து தெளிவாய் காட்டும்.

வேர்கள் நீரை நாடித் தாகிக்க வேண்டும்;
நீரேந்து பிரதேசங்கள் நோக்கி நெளிந்தோட வேண்டும்.
தேடலும் அவ்வாறு தான்.

சில தீர்வுகள் அல்லது தீர்மானங்கள்

அச்சு ஊடகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு இன்னும் பலமடங்காக அதிகரிப்பதோடு இதழியற்துறையில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்களின் பெண்களின் இடைவெளி நிரப்பப்பட வேண்டும்.



·         வாசிப்பை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள ஒர் மாதத்தினுள் குறைந்தது இரு சஞ்சிகைகளையாவது முதல் பக்கம் தொட்டு கடைசிப்பக்கம் வரை வாசிப்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.இது அல்ஹஸனாத்,மீள்பார்வை,எங்கள் தேசம்,உண்மை உதயம்,ஆனந்த விகடன்,குமுதம் என எதுவாகவும் இருக்கலாம்.

·         வாராந்தம் ஒரு ஞாயிறு செய்தித்தாளை முழுமையாக வாசிப்பது.தினகரன்,வீரகேசரி,மவ்பிம அல்லது சன்டே டைம்ஸ் ஆகிய எம்மொழிப்பத்திரிகையாயினும் சரி,பூரணமாக வாசிக்க தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

·         ஒரு வருட காலம் இவ்வாறு வாசித்துச் செல்லும் போது குறித்த சஞ்சிகை அல்லது பத்திரிகையில் உங்களுக்கு மிக விருப்பமான பகுதி  எது என்பதைக்கண்டறிந்து கொள்ளுங்கள். அது இலக்கியம்,விளையாட்டு,அரசியல்,ஆன்மீகம்,அழகுக்கலை,சுயவிருத்தி என எதுவாகவும் இருக்கலாம்.அந்தக் குறிப்பிட்ட பகுதியை உங்கள் விஷேட துறையாக மாற்றுங்கள்.

·         நீங்கள் தெரிவு செய்த விஷேட துறை சம்பந்தமான மேலதிக வாசிப்பையும்  தேடலையும் மேற்கொள்ளுங்கள்.நூலகங்கள்,இணையம் மட்டுமல்லாது குறித்த துறைசார் நிபுணர்களையும் நீங்கள் பயன்படுத்தி அடையாளங் கண்ட துறையில் அபிவிருத்தி அடைய வேண்டும்.

·         பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊடக நிலையங்களில் இடம்பெறும்  இதழியல் நிகழ்ச்சித் திட்டங்களில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வது நிறைந்த பயனளிக்கும் விடயமாகும்.இலங்கையைப் பொறுத்த வரை பல்வேறு கல்வி நிலையங்கள் ஊடகம் சார் பாடநெறிகளை நடாத்தி வருகின்றன.
அவற்றுள் சில

இலங்கை இதழியல் கல்லூரி http://www.slcj.lk/
ú  ஒரு வருட முழுநேர இதழியல் டிப்ளோமா பாடநெறி
ú  சேவை இடை பயிற்சிப்பட்டறைகள்- இவை சில நாட்கள் அல்லது ஒரு வாரகாலப் பயிற்சிகள் ஆகும்.இவை ஏதாவது ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இலவசமாகும்.

            கொழும்பு பல்கலைக்கழகம்
ú  ஒரு வருட கால பகுதி நேர சர்வதேச தரம் வாய்ந்த இதழியல் டிப்ளோமா பாடநெறி

           களனிப்பல்கலைக்கழகம்
ú  இதழியல் பட்டப்படிப்பு 4 வருட முழுநேரப்பாடநெறி அல்லது
ú  இதழியல் வெளிவாரி பட்டப்படிப்பு (சிங்கள மொழி மூலம் 
ú  மாத்திரம்)

           மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்-தூரக்கற்கை நிலையம்
§  வெகுஜனத் தொடர்பாடலும் இதழியலும் டிப்ளோமா பாடநெறி ஒரு வருடம்
§  வெகுஜனத் தொடர்பாடலும் இதழியலும் பட்டப்படிப்பு
-நான்கு வருடங்கள்.
§  வெகுஜனத் தொடர்பாடலும் இதழியலும்                                     பட்டமேற்படிப்பு – இரு வருடங்கள்

இதற்கு மேலதிகமான இன்னும் பல பாடநெறிகள் இருக்கின்றன.அவை பற்றி இணையத்தினூடாகவும்ஊடகத்துறை சார்ந்தோரூடாகவும் தேடி அறிந்து கொள்ள முடியும்.

·         ஊடகமொன்றுடன்,அதிலும் குறிப்பாக இஸ்லாமிய ஊடகம் ஒன்றுடன் தொடர்பு படுங்கள்.அதற்கான உங்கள் பங்களிப்பைத் தேவையின் அடிப்படையில் தொடர்ந்தேர்ச்சியாக வழங்குங்கள்.

·         உபரித்தகவல்

உங்களுடைய திறமையையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வமுண்டெனில்  இந்த கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்.
           இணைய மடலாடல் முகவரி mediawomen2020@googlemail.com
இணைய குழும முகவரி media-women@googlegroups.com

·         இன்னும் 5 வருடங்களாவது இந்தக்கட்டுரையை மாற்றி எழுத உதவி செய்யுங்கள்.

நீண்டு நெடித்துச்செல்லும் இந்த இலட்சியப்பாதையில் சத்தியத்தை வாக்கிலும் நோக்கிலும் சுமந்த பெண்கள் பார்வையாளர்கள் அல்ல,பங்காளர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபிக்க நீங்கள் தயாராகி விட்டீர்களா?

0 comments:

Post a Comment

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்