நேர்கண்டவர் சமீலா யூசுப் அலி
புகைப்பட உதவி அப்ரா நிவாஸ்
2011 ஜூலை 24 ஆந்திகதி மாவனல்லை வரலாற்றில் ஏடுகளில் குறிக்கப்பட வேண்டிய ஒரு பொன்னாள்.அன்று தான் மாவனல்லை நகரத்தின் வரலாறு பற்றிய ஒரு பொக்கிஷம் ‘பொற்கலசம்’ என்ற நூலாக மாவனல்லை சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்படுகிறது.நூலின் ஆசிரியை சாஹிராத்தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்து இன்று அதே பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தலைவியாக இன்னும் ஓய்வு பெறாமல் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் அவர்கள்.வாழ்க்கையில் 70 வது படியில் இருக்கும் அவரது இந்த உற்சாகமான முயற்சி 20 களிலே சலித்துக் கொள்ளும் எமது பெண்களுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.
மழை சூழ் கொண்டிருக்கும் பின்காலைப்பொழுதொன்றில் ,பெண்கள் தேசத்திற்காக ஆசிரியை ஆயிஷா அவர்களை சாஹிரா வீதியில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.
கனிவான வரவேற்பு
எமது வேர்களை விசாரித்து சொந்தம் கொண்டாடும் உரிமை
வயதின் தள்ளாமை மறைக்கும் ஆர்வமும் உற்சாகமும்
இது தான் ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம்
· இப்படியானதொரு நூலை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எழுந்ததன் பின்னணி என்ன?
நான் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் எங்களுடைய ஆங்கில ஆசிரியரான சஹாப்தீன் என்பவரைச் சந்தித்தேன்.அவர் எனக்கொரு போட்டோவைக் காட்டினார்.அது 1932 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட போட்டோ,அதில் உயிருடன் இருந்தவர் அவர் மட்டும் தான்.’இதை வைத்து கொண்டு போய் சமூகத்திற்கு ஏதாவது செய்,புத்தகம் ஒன்று எழுத ஆரம்பி’என்று சொன்னார்.அது எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
· பொற்கலசம் என்ற தலைப்பை என்ன காரணத்திற்காக தெரிவுசெய்தீர்கள்?
ஏற்கனவே ‘முதுசம்’ என்ற பெயரைத் தான் தெரிவு செய்திருந்தேன்.ஆனால் ஏற்கனவே அந்தப்பெயரை வேறு ஒரு சகோதரி தனது நூலுக்காக எடுத்திருந்ததை அறிந்தேன்.
‘கலசம்’ என்றால் குடம் என்று அர்த்தம்.பொற்கலசம் எனும் போது பொன்னான விடயங்களைத் தாங்கி நிற்கும் ஒரு நிறைகுடம் என்ற அர்த்தம் வருகிறது.அதனால் தான் பொற்கலசம் என்று பெயரிட்டேன்.
· வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்ற பலர் ஓய்வெடுக்கும் காலத்தில் நீங்கள் இந்நூலுக்கான தகவல்களை திரட்டி உள்ளீர்கள்.உங்கள் உற்சாகத்தின் இரகசியம் என்ன?
என்னுடைய கணவர் இறந்து 10 வருஷங்கள்.தனிமை என்ற உணர்வை நான் அனுபவிக்காமல் என்னை எனது சகோதரிகளும் பிள்ளைகளும் நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள்.இப்படியான ஒரு காலத்தை வீணாகக்கழிக்காமல் சமூகத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
· 50 வருடங்களுக்கு முன்னிருந்த மாவனல்லை-இன்றிருக்கும் மாவனல்லை என்ன வித்தியாசங்களைக் காண்கிறீர்கள்?
பொற்கலசம் நூலிலே,50 வருடங்களுக்கு முன்னிருந்த மாவனல்லை சம்பந்தமான பல படங்களைத் தந்திருக்கிறேன்.
அன்றிருந்த பாதைகள்,பாலங்கள்,மக்கள் வாழ்ந்த முறை பற்றியெல்லாம் நான் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
· இந்நூலுக்கான தகவல் திரட்டும் காலத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம் எது?
நான் தகவல் திரட்டச் சென்ற இடமெல்லாம் தங்கு தடையில்லாமல் எல்லா மக்களும் ‘என்ன வேண்டும் டீச்சர்’ என்று ஆர்வத்தோடும் ஆசையோடும் கேட்டு அன்போடு உபசரித்து தகவல்களைத் தந்தார்கள்.மற்றும் இப்போதுள்ள எனது சிறுவயது மாணவர்கள் கூட’படம் வேண்டுமா டீச்சர்’எனக் கேட்டு பாலங்களையும்,வீதிகளையும்,தக்கியாக்களையும் படம் பிடித்து என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள்.இவைகள் எல்லாம் மறக்க முடியாத சம்பவங்கள் தான்.
· அரிய புகைப்படங்களை இந்நூல் தாங்கி நிற்கிறது.இவை எங்கிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன?
இந்தப்புகைப்படங்களெல்லாம் ஆறு வருடங்களாக நான் ஊரில் ஒவ்வொரு இடங்களுச் சென்று பொற்றுக்கொண்டவை.நான் 1942 ஆம் ஆண்டு பிறந்தவள் என்பதால் நான் பிறந்த பின்னான 10 வருட காலம் சம்பந்தமான தகவல்கள் எனக்கு ஓரளவு தெரியும்.அவற்றை ஞாபகப்படுத்தி வைத்திருந்தேன்.எமது பாடசாலையின் கட்டடமான ஓலைக்கொட்டகை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அதன் போட்டோ தான் முதலில் கிடைத்தது.அதைக்கட்டுவதற்காக நான் கூட ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்தது நினைவிருக்கிறது.இதை டப்ளியூ டப்லியூ கன்னங்கரா அவர்கள் இதைத் திறந்து வைத்தார்கள்.இந்தக்கட்டடத்திக்கு முன்னர் இருந்த ஆரம்பப் பாடசாலைக்கட்டடத்தைக் கட்டியவர்கள் யார் என்று விசார்த்தேன்.அப்போது காலஞ்சென்ற நியாஸ் ஏ மஜீத் அவர்களின் தந்தையான மஜீத் அவர்களும் ஒபீஸர் அப்பா என்று சொல்லக்கூடிய அப்துல் ரஹ்மான் அவர்களும் என்று அறிந்து கொண்டேன். டொக்டர் ஹமீத் ஏ அஸீஸ் அவர்களது தந்தையான வைத்தியத்திலகம் அஸீஸ் அவர்களது பட்டமளிப்பு விழா போட்டோவிலிருந்து மஜீத் அவர்களின் போட்டோவைப்பெற்றுக் கொண்டேன். அது தான் முதலாவது போட்டோ.அதன் பிறகு பலரைச் சந்தித்து வேறு போட்டோக்களைப்பெற்றுக் கொண்டேன்.என்னிடமும் பழைய போட்டோக்கள் இருந்தன.இவ்வாறான போட்டோக்களை ஸ்டூடியாக்கு கொண்டு சென்று சீரமைத்து எடுத்துக் கொண்டேன்.
.
· உங்களது குடும்பம் பற்றி?
தாயார் மாவனல்லையைச் சேர்ந்தவர்.தகப்பனார் உலப்பனையைச் சேர்ந்தவர்.எமது வீடு தான் மாவனல்லையில் முதலாவது கட்டப்பட்ட புது வீடு என்று சொல்வார்கள்.அந்த வீட்டில் ஐந்தாவது பரம்பரையில் வந்தவர் நான்.1969 ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது.அவர் கடுகன்னாவ முஸ்லிம் மகா வித்தியாலத்தில் அதிபராகஇருந்தார்.ஹஜ்ஜுக்குப் போய் வந்து ஒரு சுகவீனம் காரணமாக மரணித்தார்.எனக்கு நான்கு பிள்ளைகள்.மூத்த மகள் பஸீஹா பீ.எச்.டீ முடித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை விரிவுரையாளராக இருக்கிறார்.இரண்டாவது மகள் பரீஹா மாவனல்லைப்பிரதேச சபையில் கணக்கியல் துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.மற்றயவர் மகன் பஹ்மி சொந்தமாக மாவனல்லையில் ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.அடுத்த மகன் பஸ்மியும் அதற்கு உதவியாக இருக்கிறார்.
· உங்களுக்கு இன்னும் நிறைவேறாத கனவுகள் ஏதேனும் உள்ளதா?
பொற்கலச வெளியீட்டின் போது படித்தவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.படித்தவர்கள்,இங்கு பாடசாலையில் படித்து முன்னுக்கு வந்தவர்கள் கட்டாயம் வந்திருக்க வேண்டும்.அது எனக்கு கொஞ்சம் கவலையாகத் தான் உள்ளது.
· இந்நூலை எழுதும் போதும் ,தகவல் சேகரிக்கும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை?
தகவல் சேகரிக்கும் போது எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.திரட்டிக் கொண்டு வந்த நேரம் எனது சகோதரி ஆயிஷா ஹாஷிம் அவர்கள் நூலில் ஒரு பகுதியை எழுதித்தந்தார்,அது பேருதவியாக இருந்தது.
· வேறு ஏதேனும் நூல் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா?
இனித்தான் யோசிக்க வேண்டும்.எனக்கு வயது 70,இனியும் என்னால் எழுத முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் என்னால் முடிந்தளவு செய்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.
(மென்மையாகச் சிரிக்கிறார்)
· ஏன் வரலாறு எழுதப்படுவது அவசியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்
நாங்கள் இன்று ஊரில் பிறந்து வளர்ந்து புதிய வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வையே மறக்கும் சந்தர்ப்பம் வருகிறது.ஊருக்காக யார் யார் உழைத்தார்கள் என்னென்ன சேவைகள் செய்தார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.அவர்களுக்கு ஒரு துஆவை கேட்கவாவது அவர்கள் யார் என்பதை நாங்கள் அறிய வேண்டும்.அதனால் தான் வரலாறு எழுதப்படுவது முக்கியமாகிறது.
· உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எவ்வாரிருந்தது?
எனக்கு நான்கு சகோதரிகள்.அவர்களில் இருவர் வீட்டுக்குப்பக்கத்தில் இருக்கிறார்கள்.அவர்கள், நான் மணம் முடித்து வாழ்ந்த காலத்திலிருந்து எனது சமையல்,குழந்தை வளார்ப்பு அனைத்திலும் தாய் மகளுக்குச் செய்வது போன்று செய்திருக்கிறார்கள்.
(அவரது குரல் தழுதழுக்கிறது)
அதே போல் எனது பிள்ளைகளும் எனக்கு எல்லா விடயங்களிலும் ஒத்துழைப்பாக இருக்கிறார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
· மாவனல்லை நகரில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய விழிப்புணர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
பொதுவாக இயக்கங்கள் வந்ததால் எமது சமூகம் ஏதோ ஒரு அமைப்பில் மார்க்க விடயங்களில் ஈடுபடுவது சந்தோஷமாக இருக்கிறது.இஸ்லாமியக் கட்டுக்கோப்புக்குள் சமூகம் வரும் போது அல்லாஹ்வைப்பயந்து சேவை செய்யக்கூடிய நிலை வரலாம்.அதே நேரத்தில் தீவிரமான இயக்கங்கள் வந்து சமூகத்தைப் பிளவுகள் ஏற்படுத்தாமல் இருப்பது வரவேற்கத்தக்கது.
· உங்கள் வாழ்க்கையில் மிக சந்தோஷத்துடன் ஞாபகிக்கும் கணம் எது?
ஆசிரியப்பணி 41 வருட காலம் செய்திருக்கிறேன்.இப்போதும் வளர்ந்த மாணவர்கள் எங்கு கண்டாலும் டீச்சர் என்று கெளரவப்படுத்தி,நடந்து போல் வாங்க டீச்சர் என்று வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள்.
நான் சாஹிராவில் 25 வருடங்களாக ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியையாக இருந்திருக்கிறேன்.இன்றும் மாணவர்கள் கண்டால்;டீச்சர்’ என்று சொல்லி கொஞ்சம் மரியாதையாக ஒதுங்கிச்செல்லும் அளவிற்கு கட்டுப்பாட்டோடும் அன்போடும் நடந்திருக்கிறேன்.
· நீங்கள் எழுதுவதற்காக தேர்ந்தெடுத்துள்ள நேரங்கள் என்ன?
அஸர் தொழுகையின் பின்னரான நேரத்தில் தான் அதிகம் எழுதுவேன்.ஆனாலும் இரவில் ஒரு மணி என்றாலும் விழிப்பு வந்தால் எழுதுவேன்,சமயங்களில் சுபஹ் தொழுகை நேரம் வரும் வரை எழுதுவேன்.
· இன்றைய இளைய சமுதாயம் பற்றி உங்களுடைய பதிவு என்ன?
இன்றைய இளையவர்கள் முன்னிருந்தவர்களை விட மார்க்க விடயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள்.ஒழுக்கக் கட்டுப்பாடு நிறைந்தவர்களாக வாழ்கிறார்கள்.இனியும் சமூகம் முன்னேற வேண்டுமானால் மார்க்கக்கல்வியுடன் சேர்ந்த கல்வி தான் தேவை என்பதை பெற்றோர்களும் மாணவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.ஆனாலும் இன்று பலவிதமான வசதி வாய்ப்புகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதனால் மாணவர்கள் கெட்டுப்போவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.பெற்றோர் அதிலும் குறிப்பாக தாய்மார்கள், இவற்றைப்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.மாவனல்லையில் இஸ்லாமிய நிறுவனக்கள்,மார்க்க அறிஞர்கள்,இயக்கங்கள்,.பயான்கள்,மஜ்லிஸ் தாராளமாக இருக்கின்றன.இவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
· இன்றைய பெண்களின் துறைரீதியான பங்களிப்பு பற்றி?
அல்ஹம்துலில்லாஹ்,இன்று பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.ஆசிரியர்களாக ,வைத்தியர்களாக,சட்டத்தரணிகளாக இருக்கிறார்கள்.மாவனல்லையைப் பொறுத்தளவில் ஆகக்கூடியளவு கல்விக்கு முக்கியம் கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.அவர்கள் தான் அதிகமாகப் பல்கலைக்கழகம் செல்கிறார்கள்,வேறு துறைகளில் பிரகாசிக்கிறார்கள்.ஆண் மாணவர்கள் படிப்பது குறைவு.ஓ.எல் பாஸ் பண்ணியவுடன் ஒரு கோர்ஸை செய்கிறார்கள்; பின் லண்டனுக்கு பறந்து விடுகிறார்கள்.
எழுத்துத்துறையில் பெண்கள் ஈடுபடுவது பற்றிய உங்கள் கண்ணோக்கு என்ன?
கட்டாயம் பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட வேண்டும்.பெண்சமூகத்திலுள்ள குறைப்பாடுகளைச் சுட்டிக் காட்ட,சமூகத்தை அறிவூட்ட,சமூகத்தின் தேவைகளை இனங்கான என சமூகத்தின் பலநிலைகளை எழுத்தின் மூலம் தான் அறிய முடியும்.இஸ்லாமிய அமைப்பில் இப்போது பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்,அது மிகவும் வரவேற்கத்தக்கதே.
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
எனது பாடசாலையான சஹிரா தேசியக்கல்லூரியை எடுத்துக்கொண்டால் ஆண் ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளார்கள்.நாங்கள் இணைந்து பாடசாலைக்கு சிறந்த நிர்வாகிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.நாங்கள் பேதங்களை மறந்து எமது பாடசாலையை முன்னேற்ற முன்வரவேண்டும்.நான் கற்ற எனது பிள்ளைகள் கற்ற இந்தப்பாடசாலை நல்ல நிலைக்கு வர வேண்டும்.பழைய மாணவியர் ச்னக்கத்தின் சார்பில் எம்து பாடசாலைக்கு நிறைய உதவிகளை அல்லாஹ்வின் அருளால் செய்ய முடிந்தது.இனியும் அவ்வாறு செய்ய ஆவலாக உள்ளேன்.எழுத உதவி செய்த எனது அன்பிற்குரிய சகோதரி ஆயிஷாவும் எனது மாணவரான எம்.ஜே.எம் பிரிண்டர்ஸ் உரிமையாளாரான முஸம்மில் அவர்களும் நூலை வடிவமைத்துத் தந்த அஸ்மி அவர்களும் இதற்காக மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தார்கள்.அவர்களுக்கும் மற்றும் இந்நூலை ஆக்குவதிலும் வெளியிடுவதிலும் ஒத்துழைத்த அனைத்து பெயர் குறிப்பிடாத சொந்தங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
மாவனல்லை சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பாதையில் நின்று ஒரு பெறுமதி மிக்க ஒரு நூலை சமூகத்துக்குப்பரிசளித்த ஆசிரியை ஆயிஷா இப்ராஹீம் அவர்களுக்கு உடல் திடத்தையும் மனோபலத்தையும் கொடுத்து அவரது ஆயுளையும் அல்லாஹ் நீட்டிக்க வேண்டும் என்ற துஆக்களோடு விடைபெற்றோம்.
இந்நூலைப்பெற விரும்புகிறவர்கள் கீழ்வரும் முகவரியைத்தொடர்பு கொள்ளவும்
68
சஹிரா வீதி
மாவனல்லை
25.07.2011
0 comments:
Post a Comment