சமீலா யூசுப் அலி
“லா நினா” என்றால் சிறுமி என்று ஸ்பான்ய மொழியில் அர்த்தப்படும்.
பசுபிக்(கிழக்கு) சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை அசாதாரண அளவில் குறைத்து குளிரால் விறைக்கச் செய்யும் கடல் சார் காலநிலை தான் லா நினா.இந்தக்கடற் குளிர் சூழவுள்ள பிரதேசங்களின் அமைதியான காலநிலையில் சடுதியான மாற்றங்களை கொண்டுவந்து விடுகிறது.
சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியனைச் சுருட்டி வைத்து விட்டு உறைபனிக்குளிரையும்,ஊசி ஊசியாய் உடலிறங்கும் மழையையும் கொண்டு வரும் லா நினா , 2011 வருட ஆரம்பத்திலேயே நம் நாட்டுக்கதவையும் தட்டிவிட்டது.
கடந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டாகப்பதிவாகியிருந்தாலும் இவ்வாண்டு பல நாடுகளின் மழைவீழ்ச்சி முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்தது.
டிஸம்பர் இறுதிப்பகுதியிலிருந்து ஜனவரி நடுப்பகுதி வரை வானம் இடைவிடாது குமுறிய வண்ணமே இருந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.குடை முளைத்த வீதிகளும்,இடைக்கிடை மண் நெகிழ்வுகளும்,மரச்சரிவுகளுமாய் ஓரளவு சிரிப்பும்,சின்னக்கோபமுமாய் இருந்த மழை, எரிமலைக்குச் சவாலாய் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களின் படி இலங்கையின் 14 மாவட்டங்கள் வெள்ளத்தின் நேரடியான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை,,குருநாகல்,அனுராதபுரம் மற்றும் பொலநறுவை இவற்றில் குறிக்கக்கூடியவை.12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு ,500 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு அறிக்கையில் விசனம் தொனிக்கிறது.
மனித சக்திகள்- அவை விண் துளைக்கக்கூடியதாக இருந்தாலும் கூட இறைவனின் மகத்தான நாட்டத்தின் முன்னால் அவை ஒரு சுண்டு விரல் அசைக்கக்கூட ஆற்றலற்றவை. அல்லாஹ்வுத்தஆலா தன் வல்லமையை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறான்.சுனாமிக்குப்பிறகு நம் தேசம் முகம்காட்டிய மிகப்பாரிய அழிவு இந்த வெள்ளம்.
வெள்ளம் என்பது வெறும் சொல்.ஆனால் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இந்தச்சொல்லுக்கு அர்த்தம் வேறு.கிழக்கிலங்கையில் மக்களை உடுத்த துணிகளோடும் காய்ந்த வயிறுகளோடும் காயப்போட்ட அதே வெள்ளம், மத்திய மலைப்பிராந்தியத்தில் அடர் மழையோடும் ,உயிர் துளைக்கும் கடுங்குளிரோடும் தன்னை நிறுத்திக்கொண்டது.
வெள்ளத்தையும் கடுங்குளிரையும் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை; பேசாத ஊடகங்கள் இல்லை.ஆனால் மக்களின் மனப்பதிவுகளின் வெளிப்பாடுகள் இந்த அழிவின் பின்னணி பற்றி என்ன சொல்கின்றன என்பது மிகச்சுவாரசியமான ஒன்று.
நாட்டில் அநியாயம் வலுத்தால் அல்லது ஆட்சித்தலைவர் குடிமக்களை நசுக்கி ஆண்டால்,இயற்கை சீற்றமெடுக்கும் என்பது சிங்களச்சகோதரர்களின் பாரம்பரிய நம்பிக்கை.
பாவங்கள் அதிகரித்து விட்டன.குறிப்பாக கரையோரப்பகுதிகள் இறைவனின் ஏவல்களை மீறி நடக்கின்றன.எனவே இயற்கை அழிவுகள் உயிர்களைத் தண்டிக்கும் உபகரணங்கள் எனச்சிலர் கூறுகிறார்கள்.
சூழல் மாசடைவதைத்துரிதப்படுத்தி காற்றையும் கடலையும் கால்பதியும் மண்ணையும் கழிவுகளில் புதைத்த எமக்கு, அதன் கசப்பான கனிகளையும் சுவைக்கும் நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள் சூழலின் காதலர்கள்.
உலகம் 2012 இல அழியப்போகிறது,அதற்கு முன்னர் இயற்கை அழிவுகளால் மக்கள் பகுதி பகுதியாக அழியப்போகிறார்கள் –இது இன்னும் சிலரிடமிருந்து சிதறி விழுந்த கருத்து.
இந்த வருடம் அழிவுகளின் வருடம் என்று ஆரம்பத்திலேயே சோதிடர்கள் எதிர்வு கூறிவிட்டார்கள்,அவர்களின் கணக்கு எங்கே பிழைத்தது என்று சுட்டு விரல் நீட்டுகிறார்கள் ஓரிருவர்.
கிழக்கு மக்களின் மனங்களை சுனாமியால் கூட மாற்ற முடியவில்லை ,சீதனப்பேய் இன்னும் பயங்கரமாய் தலையை அவிழ்த்து ஆடுகிறது, ஐவேளைத்தொழுகைக்கு கூட ஆளில்லை,தேவை இந்தச் சோதனை என்று முஷ்டி முறுக்குகிறார்கள் இன்னும் கொஞ்சப்பேர்.
இன்பமும் சோதனை;துன்பமும் சோதனை,இறைவன் மக்களின் பொறுமைத்தங்கத்தை தீயில் காட்டி புடம் போடுகிறான் என்கிறார்கள் சில பக்குவப்பட்டவர்கள்.
ஆதம்பாவா யுத்தத்தில் அந்தரப்பட்டான்;அதே ஆதம்பாவா சுனாமியில் சிக்குப்பட்டான,இந்த வெள்ளத்திலும் ஆதம்பாவாவின் வீட்டுச்சுவர் விழுந்திருக்கிறது- தொடர்ந்தும் ஒரே மக்கள் பிரிவினர் சோதிக்கப்படுகிறார்களே இதன் பின்னணி என்ன என்று ஒரு கேள்வியோடு வருகிறார்கள் இன்னும் சிலர்.
அழிவுக்குட்பட்டவர்களை அரவணைக்கும் கரங்களின் வல்லமையைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு இது என்கிறார் உடலாலும் பொருளாலும் அள்ளிக்கொடுத்தவர்கள்.
பரஸ்பரம் முரண்பாடுகள் வேரோடிப்போன இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து செயற்பட ஒரு புதுக்களம் கிடைத்திருக்கிறது –சில சிந்தனையாளர்கள் சொல்லி விட்டுப்போகிறார்கள்.
வயல்களை வெள்ளம் கொண்டு போனதால் அரசாங்கத்திற்கு மக்களின் மேல் வரிச்சுமை சுமத்த வந்த வாய்ப்பு என்று விசனப்படுகிறார்கள் சராசரி மக்கள்.
அரச உதவிகளுக்கு முன்னரே இஸ்லாமியத்தொண்டு நிறுவனங்கள் மக்கள் விழிநீர் துடைக்க நான்,நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அழிவு நடந்த இடங்களுக்கு பதறியடித்துச் சென்றது ஆரோக்கியமானது என சந்தோசிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
வேறுபாடுகள் களைந்து ஒரணியில் இணைந்து செயற்படும் முஸ்லிம் சமூகமுன்மாதிரியின் தேவை ,வெள்ளத்தின் பின் வலுத்திருக்கிறது என புத்தி ஜீவிகள் கருத்துச் சொல்கிறார்கள்.
ஒரே வெள்ளம் தான்;ஆனால் மனித உள்ளத்தில் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் வித்தியாசமானவை;அந்த அதிர்வின் வீச்சும் வேகமும் வித்தியாசமானவை.
சிலவாரங்களுக்கு முன் நாடு கடுங்குளிராலும் கட்டுடைத்த வெள்ளத்தாலும் நம் தேசம் அவதிக்குள்ளான பொழுதுகளில், குளிருக்கு இதமான கம்பளிச்சட்டைகளுடன் சூடான தேநீர் அருந்திய எமக்கு இந்த வெள்ளமும் அதன் பின்னால் உள்ள செய்திகளும் காலித்தேநீர் கோப்பை போல அர்த்தம் இழந்து போகலாம்.
ஆனால்,இயற்கை அழிவுகள் அதன் பின்னணி மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்தான நம் சிந்தனை இன்னும் விசாலப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
ஒரு சாரார் மற்றொரு சாராரை சுட்டுவிரல் நீட்டி குற்றம் சாட்டுவது எமது நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அகதிப்பிரதேசம்.
வெள்ளம்,கடுங்குளிர்,மின்னல்,நிலநெகிழ்வு,அடைமழை ,அடங்காத காற்று இவைகள் ஓயப்போவதில்லை;காலத்துக்குக்காலம் நம் தேசக்கதவுகளை அவைத் தட்டத்தான் போகின்றன.நாமும் மாறி மாறி இடர்படவும்,இடுக்கண் களையவும் மீண்டெழுவும் போகிறோம்.
இந்த வெள்ளம் நமக்குக் கொண்டு வந்த சேதி என்ன?
ஊடகங்களின் செய்திகளுக்கு அப்பாலிருந்து சிந்திக்க வேண்டிய தேவை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது;குறிப்பாக ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் செய்ய வேண்டிய மூன்று பணிகளைப்பற்றி ஆராய்ந்தறிவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.
இபாதத்- அல்லாஹ்வுக்காக மனிதன் செய்ய வேண்டிய பணி
இமாரத்-உலகை வளப்படுத்தும் பணி(அறிவாராய்ச்சி போன்ற இன்னும் பலவிடயங்கள்)
இகாமதுத்தீன் – அல்லாஹ்வுத்தஆலாவின் தீனுக்கு ஆட்சி அதிகாரத்தைப்பெற்றுக் கொடுக்கும் பணி.
வெள்ளத்தோடு அடிபட்டுச்செல்லும் சருகுகல்ல;நாம் முன்மாதிரி மிக்க முஸ்லிம் சமூகம் என நிரூபிக்கும் நாள் நாம் காலடியில் வந்திருக்கிறது.
திறக்கப்படாமலேயே இற்றுப்போன நம் சிந்தனைக்கதவுகளை ஒரு முறை திறந்து விடுவோம்;புதிய காற்று புலன்களை விசாரிக்கட்டும்.
0 comments:
Post a Comment