இலட்சியப்பாதையில் ஒரு மைத்துளியின் பயணம்!


சமீலா யூசுப் அலி

அல்ஹஸனாத்- அது வெளிவந்த போது நமது இலங்கைச்சமூகத்தில் இஸ்லாம் வெறும் சடங்குகளுக்குள்ளும் சில்லறைச்சம்பிரதாயங்களுக்கும் சிக்கிக்கிடந்தது.
அல்குர்ஆனுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு வெறும் உதட்டு நுனிகளோடு மட்டுப்பட்டிருந்த காலம் அது.
தூங்கிக்கிடந்த சமூகத்தின் உள்ளக்கதவுகளை ஓங்கித் தட்டிய அல்ஹஸனாத் துடிப்பான இளைஞர்களின் இதயங்களில் வேரூன்றியது.
வாசிக்கும் பழக்கம் மட்டுப்பட்டிருந்த ஒரு யுகத்தில் பெண்களிடம் கூட அல்ஹஸனாத் இன் வரிகள் அழுத்தமாய் பதிந்தன.
இந்த மண்ணில் அழுத்தமாய் வேரூன்றி நிற்கும் ,ஜமா அதே இஸ்லாமி தூங்கும் விதையிலிருந்து துளிர்த்தெழுந்த வைகறையின் முதற் பொழுது அது.
குர்ஆனை உள்ளத்தில் சுமந்த ஒரு சமூக உருவாக்கத்தை நோக்கிய மகத்தான ஒரு இலட்சியப்பாதையை நோக்கி ஜமா அதே இஸ்லாமி அழைப்பு விடுத்தது.
காலங்காலமாய் ஊறிய பழக்கவழக்கங்களிருந்தும் சடங்கு சம்பிரதாயங்களிலிருந்தும் வெளியேறி சுவனம் நோக்கிய இப்பயணத்தில் இணைந்தவர்களை அப்போது விரல்விட்டு எண்ணி விடலாம்.
நாலு தசாப்தங்களில் ஒரு வரலாறு.
வாசிக்கத்தொடங்கிய வயதிலேயே நேசிக்கத்தொடங்கிய சஞ்சிகை அல்ஹஸனாத்.
ஒரு புத்தகமோ சஞ்சிகையோ எதுவானாலும் அது ஐம்புலன்களுக்கும் உரியது என்பது எனது அபிப்பிராயம்.புதிய சஞ்சிகையின் வாசம் நுகர நாசி ஆசைப்படும்.அதனால் அல்ஹஸனாத் வீட்டுக்குக் கொண்டுவரும் போது அதை முதலில் வாசிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கும்.
நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே வீட்டில் எப்போதும் அல்ஹஸனாத் இருக்கும். அல்ஹஸனாத்தை விளங்கியும் விளங்காமலும் எழுத்துக்கூட்டி வாசித்த ஆரம்பப்பாடசாலை நாட்களை எப்படி மறக்க முடியும்? அம்புலிமாமா,கோகுலம்,ரத்னபாலா,ரஷ்யச்சிறுவர் கதைகள் என்று ஆரம்பித்த வாசிப்பு ரசனை பின்னாட்களில் மேத்தா,வைரமுத்து,அப்துல் ரஹ்மான்,மொழிபெயர்ப்புகள் எனவும் அதன் பின்னர் யாத்ரா,அம்பை,எஸ் ராமகிருஷ்ணன்,இணைய இலக்கியங்கள் என விரிவடைந்து சென்ற போதும் அன்றிலிருந்து இன்று வரை அல்ஹஸனாத் வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் மாற்றமுறாமல் அப்படியே இருக்கிறது.முதற் பக்கம் தொட்டு கடைசிவரை விளம்பரங்கள் உட்பட அனைத்தையும் உள்ளுக்குள் எடுத்த பின் தான் உறக்கம் வரும்.
தெரியாத வயதில் இந்த அல்ஹஸனாத்தின் பின்னால் பாரியதொரு நிர்வாகக்குழுவும் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகமும் அமைந்திருப்பதாய் ஒரு பிரமை இருந்தது.பிற்காலத்தில் அல்ஹஸனாத்தின் இயங்கு சக்திகளாய் வியர்வையும் இரத்தமும் சிந்தி இரவுபகலாய் உழைத்த தனிமனிதத் தோப்புக்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு வாய்த்தது.அல்லாஹ் அவர்களனைவரினதும் இலட்சிய வேட்கையும் தன்னலமற்ற உழைப்பினையும் பொருந்திக்கொள்வானாக.
பழைய அல்ஹஸனாத்களைகளை குவியலாய் வைத்துக்கொண்டு கவிதைப்பக்கங்களை மட்டும் புரட்டிப்புரட்டி வாசித்த இரவுகள்.
அல்ஹஸனாத்தில் என் ஆக்கமும் வெளிவராதா என்று ஆசை ஆசையாய் யோசித்த காலங்கள் நினைவில் வந்து போகின்றன.
அல்ஹஸனாத்தில் என் முதல் ஆக்கம் அச்சில் என்று நண்பி சொல்ல கல்லூரிக்குள் எனக்கு சிறகு முளைத்த நாள்.ஆயிரம் ரோஜாக்கள் துளிர்த்த அந்தப்பொழுதின் கனம்,இன்னும் மனதுக்குள் ஈரமாய் பதிந்திருக்கிறது,அல்ஹம்துலில்லாஹ்.
ஒவ்வொரு ஆக்கம் வெளிவந்த பின்னரும் தனிப்பட்ட முறையில் என்னை அல்லது என் தந்தையை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய அன்றை நாள் அல்ஹஸனாத் ஆசிரியர் எஸ்.எம் மன்சூர் அவர்களின் ஊக்க வார்த்தைகள் என்றைக்குமே மறக்க முடியாதவை.
என் தாயும் தந்தையும் ஜமாஅத் பாசறையில் வளர்ந்தவர்கள்;ஜமா அத் என்றாலே புருவம் சுளிக்கும் ஒரு சமூகத்தின் கற்பாறை நெஞ்சில் மெல்லிய ஆனால் உறுதியான அலைகளாய் மோதிய ஜமா அத் குடும்பத்தின் ஆரம்ப கால வாரிசுகள்.
இன்று இலை விட்டு கிளை விட்டு விசாலமாய் எழுந்து நிற்கும் இந்த இஸ்லாமிய விருட்சம் விதைக்குள்ளிருந்து புறப்பட்ட போது நீர் விட்ட கரங்களில் அவர்களுக்கும் பங்குண்டு.
அல்ஹஸனாத் பற்றி என் தந்தையிடம் கேட்டேன்.ஒரிரு ஆக்கங்களை அல்ஹஸனாத்துக்காக எழுதியுள்ள என் தந்தை வாலிப வயதில் அல்ஹஸனாத்தை விற்கச்செல்லும் போது நிகழ்ந்த மறவாத நினைவுகள் பலவற்றைப்பகிர்ந்தார்.அவற்றில் சில …..
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
நினைவு 01
நாங்கள் அல்ஹஸனாத் விற்க ஒரு தனவந்தரின் கடைக்குச்சென்றிருந்தோம்
.நாங்கள் ஒரு சஞ்சிகை வெளியிடுகிறோம்.இஸ்லாத்தைப்பற்றி தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு இது உதவியாக அமையும்.வீட்டில் உள்ள பெண்கள் கூட வாசிக்கலாம். என்றெல்லாம் கூறி மிகக்கண்ணியமாக அல்ஹஸனாத் இதழொன்றினை அவரிடம் கொடுத்தோம்.அவர் அதனை ஒரேயடியாகத் தூக்கி என் முகத்தில் எறிந்தார்.
’இதெல்லாம் இங்கு கொண்டுவரப்படாது.நீங்கள் மக்களை வழிகெடுக்கிறீர்கள்.பொய் கூறுகிறீர்கள்,இதில் இஸ்லாத்துக்கெதிரான புதுக்கருத்துக்கள் இருக்கின்றன’ என்று ஆவேசப்பட்டார்.
நான் அமைதியாக கீழே குனிந்து அந்த இதழை எடுத்து அவரது மேசை மேல் வைத்து விட்டு சொன்னேன்’ நீங்கள் இந்தச் சஞ்சிகையில் பிழைகள் இருக்கின்றன என்று சந்தேகப்படுவதில் எந்த விதமான தப்பும் இல்லை.ஆனால் மற்றவர்கள் கூறுவதை வைத்து அந்த முடிவுக்கு வந்து விடாதீர்கள்.இந்தச் சஞ்சிகைக்கு நாங்கள் காசு கொடுக்கிறோம். அடுத்த மாதம் வருகிறோம்.வாசித்துப்பார்த்து பிழைகள் இருந்தால் சொல்லுங்கள்,திருத்திக்கொள்கிறோம்.நாங்கள் சரியான வழியைத்தேடித்தான் செல்கிறோம்.என்று சொல்லி விட்டு வெளியே வந்தோம்.
அடுத்த மாதத்திலிருந்து அந்த தனவந்தர் அல்ஹஸனாத்தை வாங்கத் தொடங்கினார்,அல்ஹம்துலில்லாஹ்.
நினைவு 02
அப்போதெல்லாம் முழு மத்திய பிராந்தியத்துக்குமே அல்ஹஸனாத் விற்பதற்கு ஒரு சிலர் தான் இருந்தோம்.நமக்கும் பெரிதாக வருமானம் இல்லாத காலம்.சில இடங்களுக்கு கால்நடையாகவே சென்று சஞ்சிகை விற்று வருவோம்.அல்ஹஸனாத்  விற்கச்சென்ற இடங்களில் நல்லெண்ணம் நட்புறவு காரணமாக தேநீர் குடிப்போம்,சாப்பிடுவோம் என்றெல்லாம் வற்புறுத்துவார்கள்.ஒரு இடத்தில் அல்ஹஸனாத் விற்கச்சென்ற போது மரவள்ளிக்கிழங்கு அவித்து சம்பலோடு தந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கின்றது.
நினைவு 03
சில நேரங்களில் படித்த பணம் படைத்தவர்களை விட படிக்காத அல்லது வறுமைப்பட்டவர்களை அல்ஹஸனாத்தை வாங்குவதைக் கண்டிருக்கிறோம்.
எங்களைக் கண்ணியம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் படிக்கத்தெரியா விட்டாலும் ஒரு பிரதியை வாங்குவார்கள்.
அன்றாடச்சாப்பாட்டிற்கே வழியில்லாத குடும்பங்கள் கூட அல்ஹஸனாத் வாங்க ஆர்வங்காட்டுவதைக்கண்டிருக்கிறோம்.அப்போது அல்ஹஸனாத்தின் விலை 30 சதம் என நினைக்கிறேன்.அந்த நேரம் அது குறிப்பிடத்தக்க காசு.சில வீடுகளில் அல்ஹஸனாத்தை வீட்டிற்குள் எடுக்க அங்கும் இங்குமாக ஒரு சதம் இரண்டு சதம் என காசு தேடுவார்கள்.அவர்களது நிலமையைப் புரிந்து நாங்கள் சப்தமில்லாமல் அல்ஹஸனாத் ஒன்றை அங்கு வைத்து விட்டு வருவோம்.ஆனால் இல்வசமாக வாங்க மிகவும் சங்கோஜம் காட்டுவார்கள்.நாங்கள் செல்லும் போது இடைவழியில் குழந்தைளின் கையில் சேமித்த காசை கொடுத்து அனுப்புவார்கள்.அந்தச் சிறுவர்கள் ஓடி வந்து கையில் காசைத் திணித்து விட்டுப்போவார்கள்.
நினைவு 04
ஒரு இயக்கம் சார்ந்த முக்கியஸ்தரிடம் அல்ஹஸனாத் விற்கச்சென்றிருந்தோம்.
அவருக்கு அந்தக் குறிப்பிட்ட நகரத்தில் அவருக்கு நல்ல செல்வாக்கு.
அவர் ‘பெரியவர்கள் அறிஞர்கள் சொல்கிறார்கள்.நீங்கள் இந்தப்பத்திரிகையில் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளை எழுதுகிறீர்களாம்.இந்தியாவிலிருந்து பீர்முஹம்மது என்ற அறிஞர்’ திருக்குறளும் அல்குர் ஆனும் ஒன்று என்று இங்கு வந்து உரை நிகழ்த்தினார்.ஆனால் வெளியிலிருந்து வந்த ஒரு மனிதனை சங்கை செய்யாமல் நீங்கள் அவர் சொல்வதை பிழை என்று உங்கள் பத்திரிகையில் எழுதினீர்களாம்.பெரியவர்கள்,ஆலிம்கள் எங்களுக்கு சொல்லித்தருகிறார்கள்,அப்படி நீங்கள் செய்தது பிழையாம்.உங்களுக்கு ஆதரவு தருவது பிழையாம்.அதனால் எனக்கு உங்கள் பத்திரிகை வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் கூறி அனுப்பினார்.பின்னால் அவர் நம்மில் ஒருவரைத் அவரது மகளுக்குத் திருமணம் பேசி அனுப்பியிருந்தார்.அவர் கூறியதெல்லாம் வெறும் விதண்டா வாதம் என்று அப்போது தான் புரிந்தது.
நினைவு 05
ஒரு தேநீர் கடை.
,நான் ஒரு ஆசிரியன்,வாழ்க்கைச்செலவைப்பாருங்கள்,இது மாதிரி பேப்பருக்கெல்லாம் செலவழிக்க எங்களைப்போன்றவர்களிடம் ஏது காசு’ என்று பெஞ்சில் அமர்ந்திருந்தவர் கோபமாகக் கேட்டார்.
‘கோபப்படாதீர்கள் சகோதரரே,
நாங்கள் வீணாக மோதிக்கொள்ளத்தேவையில்லை.பத்திரிகை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.ஆனால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள் என்று வாக்குத்தந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன்’ அவர் தலையாட்டினார்.
இப்போது பாருங்கள்.
நானும் ஒரு ஆசிரியன் தான்.என்னை நம்பியும் ஒரு உம்மா வாப்பா சகோதர சகோதரியர் என ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது.இதே சம்பளத்தில் ஒரு பகுதியை ச்செலவழித்துத் தான் நாங்கள் இங்கெல்லாம் வருகிறோம்.உங்கள் கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டைப் பாருங்கள்.இதற்கு நீங்கள் ஒரு மாதத்திற்கு செலவழிப்பதில் ஒரு சின்னப்பகுதி தான் இந்த சஞ்சிகைக்குப்போகும்.இந்த சிகரெட் புகைப்பதால் நமக்கெல்லாம் எந்த இலாபமும் இல்லை,நோய்களை விலைக்கு வாங்குவதைத்தவிர.ஆனால் அல்ஹஸனாத் பிரதி ஒன்றை நீங்கள் மாதாந்தம் எடுத்தால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பமும் நல்ல விஷயங்களை அறிந்து கொள்வார்களே,நான் சொல்வது பிழையாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்”
அந்தச்சகோதர் அல்ஹஸனாத்தின் ஆறு மாதா சந்தாவுக்கு பணம் வழங்கினார்,அல்ஹம்துலில்லாஹ்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
ஆரம்ப நாட்களில் தான் கற்பித்த பாடசாலை மாணவிகளுக்கு இந்த இஸ்லாமிய இலட்சியக்குரலை அறிமுகம் செய்ததோடு நின்று விடாது, அல்ஹஸனாத்தில்“பீபி தாத்தா” என்ற பெயரில் ஒரு சமூக ஊடுருவலைத் தொடர்ந்து எழுதிய புதுமைப்பெண் என் தாய்.சைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் சமூகத்தில் அன்றைய பொழுதில் தலைவிரித்தாடிய பித்அத்கள் சமூக ஒழுங்கீனங்களை எளிய பேச்சு நடையில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். பின்னாட்களில் அதனை உம்மாவின் சகோதரர் தொடர்ந்திருக்கிறார்.ஆனால் ஒரு துக்ககரமான விடயம் இன்று வரை உம்மா அல்ஹஸனாத்தில் எழுதிய எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை.பழைய அல்ஹஸனாத் இதழ்களைப்பெற முடியுமா என்று அல்ஹஸனாத் நிர்வாகத்திடம் தான் கேட்டுப்பார்க்க வேண்டும்.
இப்படி இப்படியாய் அல்ஹஸனாத் எங்கள் குடும்பத்தின் பிரிக்க முடியாத பாகம்.
நிச்சயமாக இலங்கையின் ஒவ்வொரு மூலையிலும் பல குடும்பங்களில் இன்னும் எழுதப்படாத இப்படியான கதைகள் ஆயிரம் இருக்கும்.
இலங்கையிலும் கடல்களுக்கு அப்பாலும் எங்கெங்கோ பிறந்த முகமும் முகவரியும் தெரியாத பலரை இணைத்த நேசப்பாலம் அல்ஹஸனாத்.
முகம்தெரியாத ஒரு நட்புவட்டத்தை ஆசிகளை அன்பை ஈமானியச்சொந்தங்களை ஈட்டித்தந்த அல்ஹஸனாத் பல வாசகர்களை எழுத்தாளர்களாக்கி இருக்கிறது. புகழ் பூத்த எழுத்தாளர்கள் பலரை வாசகர்களாக்கியிருக்கிறது.


இறைவனின் தூது இந்த பூமிப்பந்தில் முளைத்துச் செழிப்பதற்காய் நீண்ட நெடிய பாதையில் அல்ஹஸனாத் பயணிக்கிறது.
அல்ஹஸனாத்தின் வெளிப்புறமும் உள்ளடக்கமும் தரத்தில் ஏறுவரிசையில் இறங்காமலிருப்பதைக் கண்டு சந்தோஷமாயிருக்கிறது.
எனினும் அல்ஹஸனாத் நவீன உலகத்தின் வேகத்திற்கும் சமூகத்தின் தேவைக்கும் ஈடு கொடுக்கக் கூடிய அளவிற்கு இன்னும் வளர வேண்டியிருக்கிறது.
அல்ஹஸனாத்தின் கட்டுரைகளில் பேணப்படும் கண்ணியம் பாராட்டுக்குரியது.அல்குர் ஆன் ,ஹதீஸ் விளக்கங்களோடு நின்று விடாமல் இஸ்லாத்தை மக்களுக்கு இலகு படுத்தும் விதமான வித்தியாசமான உத்திகள் கையாளப்படுதல் காலத்தின் தேவையாகும்.
பசித்த ஏழைக்கு முதலில் ஒரு துண்டுப்பாண் அல்லது ஒரு பிடி சோறு தேவை.அதன் பின்னர் தான் அவன் செவிகள் ஒரு நல்லுபதேசத்தை எடுத்துக்கொள்ளும்.சமூகத்தின் அன்றாட பிரச்சினைகள் அவற்றுக்கான யதார்த்தமான தீர்வுகள் இவை அலசப்படும் களமாக அல்ஹஸனாத் மாறுவது ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்.
மனித வாழ்வில் 40 வயது என்பது ஒரு முக்கியமான திருப்புமுனை.
40 வயதில் தான் முஹம்மத்(ஸல்) அவர்கட்கு நபிப்பட்டம் கிடைத்தது.
40 வயதை இளமையின் முதுமை என்று கூறலாம்;அல்லது முதுமையின் இளமை என்றும் கூறலாம்.
எதுவாகினும் எங்கள் அல்ஹஸனாத்துக்கும் இப்போது 40 வயது.அறிவின் முதிர்ச்சியோடும் இன்னும் துடிப்போடும் நதியின் பயணம் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்
கரையில் நின்றல்ல…..
நதியில் நனைந்து சொல்கிறேன்,
வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்