சமீலா யூசுப் அலி
ரிப்கா பாரி
நேற்று அமெரிக்காவின் ஒரு மூலையில் குறிப்பிடத்தக்க எந்த விதமான முக்கியத்துவமும் இல்லாத நிலையில் வாழ்ந்திருந்த ஒரு இளம்பெண்.
ஒரே நாளில் சர்வதேச ஊடகங்களில் விசேட செய்தியாக அல்லது தலைப்புச்செய்தியாக பேசப்படும் அளவுக்கு என்ன சாதித்திருப்பார்?
ரிப்கா,
ஒரே நாளில் விற்றுத்தீர்க்கப்பட்ட புத்தகமொன்றினை எழுதினாரா?
இமயமலைச்சிகரத்தை குறைந்த நேரத்தில் ஏறி முடித்தாரா?
விஞ்ஞான உலகமே மூக்கில் விரல் வைக்கும் கண்டு பிடிப்பொன்றின் சொந்தக்காரியா?
இல்லை
உலகத்திலேயே அதிக வருமானம் பெறும் தொழில் வல்லமை வாய்ந்த பெண்ணா?
காண்போரையெல்லாம் அதிசயிக்கச் செய்யும் அற்புதம் ஏதாவது அவரது கைவரப்பெற்றிருக்கிறதா?
இல்லை.இல்லை
இவையெதுவுமே இல்லை.
ரிப்கா பாரி என்ற 17 வயதுப்பெண் இஸ்லாத்தை விட்டு விட்டு கிரிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டார்.மட்டுமல்லாது ஒஹையோவிலுள்ள தன் வீட்டை விட்டு வெளியேறி ப்ளோரிடாவில் உள்ள கிரிஸ்துவ மதபோதகர் ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.தன் தந்தை தன்னைக்கொலைசெய்து விடுவார் என அஞ்சுவதாகவும் இலங்கைக்கு அனுப்பினால் அங்கு தன்னை புனிதக்கொலை செய்து விடுவார்கள் என்றும் நடுங்கிய குரலில் ரிப்கா ஊடகவியலாளர்களிடம் கூறும் காணொளிப்படங்களை தொலைகாட்சி மற்றும் இணையப்பெருவெளியில் தாராளமாகக்காணலாம்.
ரிப்கா பாரி இலங்கையில் காலி நகரைச்சேர்ந்தவர்.தந்தை ஒரு இரத்தினக்கல் வர்த்தகர்.தாய் வீட்டில் திருமண ஆடைகள் தயாரிப்பவர்.15 வருடங்களாக அமெரிக்காவில் வேரூன்றி இருக்கும் இந்தக்குடும்பம் மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ரிப்கா பொய் கூறுகிறார்.
ரிப்கா மூளைச்சலவைக்குள்ளாகி உள்ளார்.
ரிப்கா சர்வதேச கிரிஸ்தவ மதப்பிரச்சார வலைப்பின்னல் ஒன்றுக்குள் மாட்டிக்கொண்டுள்ளார்.
ரிப்காவை அடிப்படைவாதிகள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்
ரிப்கா அடக்குமுறைக்குள்ளாகும் முஸ்லிம் பெண்கள் வெடித்து வெளிவருவதன் வெளிப்பாடு..
இவ்வாறானதும் இதற்கதிகமானதுமான கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட்டன.வெளியிட்டு வருகின்றன.
முஸ்லிம் சமூகமும் துள்ளி எழுந்திருக்கிறது.எமது சமூகத்தின் நீண்ட தூக்கம் கலைக்க இவ்வாறான அதிர்ச்சி சம்பவங்கள் இடைக்கிடை நடைபெற்றாக வேண்டும்.
சரி ரிப்கா பாரியை ஒரு புறத்தில் வைப்போம்.இந்த சம்பவம் பற்றி பேசும் போது மூன்று விடயங்களை நாம் சிந்திக்காமலிருக்க முடியாது.
1.ஊடகங்களின் நடுநிலையற்ற போக்கும் முஸ்லிம்களின் ஊடகத்துறையும்
2.தஃவாவில் நவீன உத்திகளின் தேவை
3.மேற்கில் வாழும் முஸ்லிம் இளைய சமுதாயத்தின் நிலை
மேற்கத்திய ஊடகங்களில் ஒரு சிலவற்றை விடுத்து அனேகமானவை பக்கச்சார்பானவையாகவே இருக்கின்றன.இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களே இவற்றில் அதிகமானவற்றின் அடிப்படையாக இருக்கின்றன.உலக ஒழுங்கைப் பொறுத்தவரையில் சக்தி அல்லது வல்லமையை அடைந்து கொள்வதே நாடுகளின் பிரதான நோக்கமாகி விட்டிருக்கிறது.அது ஆயுதம்,இயற்கை வளம்,அதிகாரம்,பணம்,தொழிநுட்பம் அல்லது கட்டுக்கோப்பான மனிதவளம் என எதுவாகவும் இருக்கலாம்.
இறைவனை முன்னிறுத்தி செயற்படும் சில நாடுகளும் இஸ்லாமிய இயக்கங்களும்,கொள்கைவாதிகளும்,ஆதிக்கசக்திகளுக்கும் அவற்றின் சுரண்டல்களுக்கும் அடிபணிய மறுப்பதன் காரணத்தால் அவை அல்லது அவர்கள் நாடுகளுக்கிடையிலான பலப்பரீட்சையில் பயங்கரவாதிகள் அல்லது அடிப்படைவாதிகளாக இனங்காட்டப்படுகின்றன;இனங்காட்டப்படுகின்றனர்.
மறுபுறத்தில் ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் சிந்தனைப்போக்கையே மாற்றியமைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது மீடியா.ஒரு மான்குட்டியை சிங்கம் என நிறுவவும் ,ஒரு தக்காளிப்பழத்தை ஆப்பிள் என்று நம்ப வைக்கவும் ஊடகங்களால் முடியும்.குறிப்பாக மேற்கின் மீடியாக்கள் இந்த விடயத்தில் நம்பமுடியாத அளவு ஆக்கத்திறன் கொண்டவை.
மீடியாத்துறையைப்பொறுத்தளாவில் முஸ்லிம்களின் பிரவேசம் அபூர்வமாகவே நிகழ்கிறது.அதிலும் ஆக்கத்திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட ஊடகவியலாளகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ரிப்கா பாரி- இந்த தனியான சம்பவமும்,அதற்கு ஊடகங்கள் கொடுத்த கயிறு திரிப்புக்களும் நமக்கு உணர்த்தி நிற்கும் விடயங்களில் நமக்கான ஊடகத்தின் தேவையும் ஏனைய ஊடகங்களில் எமது திறமையான பங்களிப்பின் அத்தியாவசியமும் ஆழமான சிந்தனைக்குரியவை.இங்கு பெண்ணின் குரலின் அவ்ரத்தா இல்லையா போன்ற அடிப்படையான விவாதிப்புக்களை விடுத்து,சமூகத்தின் இரு பாதிகளினதும் பங்குபற்றல் முக்கியமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக எமது தஃவாமுறைமையில் வர வேண்டிய ஆக்கபூர்வமான மாற்றங்கள் மற்றும் புதிய உத்திகள் பற்றியதான பரவலான கவனயீர்ப்பு அத்தியாவசியப்படுகிறது.
இன்றைய எமது சமூகத்தில் தஃவா சிலபோதுகளில் மிகக்கடூரமாகவும் கவர்ச்சியற்ற விதத்திலும் முன்வைக்கப்படுகிறது.
அல்லாஹ்வின் அன்பை விட தண்டனைகளே கோடிட்டுக்காட்டப்படுகின்றன.இஸ்லாத்தைப்பொறுத்தவரை ஹராமான விடயங்கள் மிகச்சிறிய பகுதியாகும்.அவை இன்னவை தான் என தெளிவாக அல்குர் ஆனிலும் சுன்னாவிலும் வரையறுக்கப்பட்டுள்ளன..அவை தவிர்ந்த மற்ற அனைத்துமே ஹலால்;ஆகுமானவை.ஆனால் இன்றைய எமது தஃவா பாவங்களுக்கான தண்டனையையும் நரக வேதனையையும் சொல்லி மக்களது மனங்களை அச்சமூட்டும் அளவிற்கு இறைவனின் அதீதமான அன்பையோ அல்லது இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மையையோ சொல்லி ஆர்வமூட்டுவதில்லை.இஸ்லாம் இயற்கையாகவே மனிதன் இலகுவாகப்பின்பற்றக்கூடிய மார்க்கம்.இஸ்லாத்தில் உள்ளங்களைக்கவரக்கூடிய ஏராளமான விடயங்கள் உள்ளன.இதனை தாஈக்களான நாம் எவ்வாறு எந்தவிதமான வழிகளில் சமூகத்துக்குக் கொண்டு செல்கிறோம் என்பதே மில்லியன் டொலர் கேள்வி.
கிரிஸ்தவ மார்க்கத்தைப்பொறுத்தவரை அன்பையும் ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு மக்களை எப்படி கவர்ந்திழுப்பது என்பது பற்றியான ஏராளமான அறிவூட்டல்களும் பயிற்சிநெறிகளும் போதகர்களுக்கு வழங்கப்படுகின்றன.இனிமையான பேச்சும் நம்பிக்கையூட்டும் தெம்பும் அதிநவீன உத்திகளும் கிரிஸ்தவ பிரச்சாரகர்களின் சிறப்பம்சங்களாகும்.
நம்மத்தியில் இஸ்லாத்தின் தூதைக்கொண்டு செல்வதில் இன்னும் அழகான வழிகள்,ஆக்கபூர்வமான முறைகள் கையாளப்படுவதிலுள்ள சாத்தியங்கள் பற்றி திறந்தமனதுடன் ஆராய்ந்தறிவதற்கு இந்த சம்பவம் அடிகோலியிருக்கிறது.
இங்கு இன்னும் ஆழமாக உற்றுநோக்க வேண்டியிருக்கும் அடுத்த விடயம் ‘மேற்கில் வாழும் எமது இளைய சமுதாயத்தின் நிலை’ஆகும்.
உலகின் எந்தப்பிரதேசமும் இறைவனின் ஆட்சிப்பிரதேசமே.
முஸ்லிம் சமூகம் ஒரு தேசியத்துக்கோ அல்லது ஒரு எல்லைக்கோட்டுக்கோ சொந்தமானது அல்ல.பூமியின் எல்லா இடங்களுக்கும் பரந்து சென்று அல்லாஹ்வின் அற்புதங்களைக்கண்டு வருமாறு இஸ்லாம் எங்களுக்கு கூறுகிறது.
எனினும் இன்று எமது சமூகம் ‘வெளிநாட்டு வாழ்க்கை’என்ற மூளைச்சலவைக்குள்ளாகி இருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களைப்பற்றி ஓர் உயர்வான அபிப்பிராயம் நிலவுகிறது.இதன் தீவிரம் எந்தளவுக்குச்செல்கிறது என்றால் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர், மேற்குநாட்டு பிரஜாவுரிமை பெற்ற மாப்பிள்ளை என்றால் வேறெதனையுமே யோசிப்பத்தில்லை;திருமணம் முடித்துக் கொடுத்து விடுகின்றனர்.இதற்காக மேற்கத்திய நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் சடவாதிகள் என்று ஒட்டுமொத்தமாகக் கூறுவதற்கில்லை.மேற்கிலிருந்து தான் இஸ்லாமியச்சூரியன் மீண்டும் அதன் பூரணவடிவத்துடனும் பிரகாசத்துடனும் உதயமாகிறது என்ற உண்மை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை விதைக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் வாழும் எமது இளைய சமுதாயத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு அசாத்தியமான தேடல்கள் எதுவும் தேவையில்லை.
இணைய வீதியில் ஒரு பதினைந்து நிமிட உலா போதும்.
மேற்கத்திய சடவாத சிந்தனையின் ஆக்கிரமிப்புக்காளாகியிருக்கும் எமது இளைஞர்களின் வாழ்க்கைமுறைக்கும் வேற்று மத இளைஞர்களின் வாழ்க்கைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.
ரிப்கா பாரி பகிரங்கமாக கிரிஸ்த்தவ மார்க்கத்தைத் தழுவிகொண்டார்.
ஆனால் எத்தனை ரிப்கா பாரிக்கள் உள்ளத்தில் கிரிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வெளியில் முஸ்லிம் அடையாளங்களுடன் வலம் வருகிறார்கள் என்பது எமக்குத் தெரியாது.
எத்தனை பேருடைய உள்ளத்தில் மேற்குக்கலாச்சாரம் தெய்வமாய் வேரூன்றி இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை.
பக்குவமாய் பண்பாடாய் இருக்க வேண்டிய எமது இளம் பெண்களில் எத்தனை பேர் ஹிஜாபைத் தூக்கி எறிந்து விட்டு அரை குறை ஆடைகளுடன் திரிகின்றனர் என்பது எமது கவனத்துக்கு வருவதில்லை.
ரிப்கா பாரி வெள்ளியிலான சிலுவை ஒன்றை கழுத்து மாலையில் தொங்க விட்டிருந்தார்.
அதைப்பற்றி நாம் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்துகிறோம்.
முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் உள்ளத்தில் சுமந்திருக்கும் தொட்டுணர முடியாத சிலுவைகளைப்பற்றி எத்தனை சதவீதம் நாம் சிந்திக்கிறோம்?
இங்கு ஒட்டு மொத்தமாக இளைஞர்களை மட்டும் சுட்டுவிரல் நீட்டிக்குற்றம் சாட்டிவிட முடியாது.
இஸ்லாமியக்கலாச்சாரத்தையே மறக்கடிக்கச் செய்து கல்வி,தொழில்,திருமணம் என்று எதையாவது காரணமாக வைத்து
பிள்ளைகளை நவீன சடவாதத்துக்குத் தாரைவார்த்துள்ள பெற்றோர்கள் இறைவனின் நீதிமன்றத்தில் விசாரணைக்குரியவர்கள்.
மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாது எமது தேசத்திலும் கூட சடவாதசிந்தனையில் தோய்த்தெடுத்த முஸ்லிம் பெற்றோர் இல்லாமலில்லை.வேறெதுவும் தேவையில்லை தன் பிள்ளை டொக்டர் ஆக வேண்டும் அல்லது பொறியியலாளராக வேண்டும் என்பதற்காய் எந்த நாட்டுக்குக்காவது போய் எதை இழந்தாவது படி என்ற மனோநிலையில் உள்ள தாய்,தந்தைமாரும் எம்மிடையே இருக்கின்றனர்.
இவையெல்லாம் சிந்தனைக்குரியவையே.
ரிப்கா பாரி கிரிஸ்தவத்துக்கு மாறினார் என்பது கசப்பான உண்மை தான்;எனினும் இதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமே இல்லை.
இந்த சம்பவத்தில் இஸ்லாத்துக்கெதிரான திட்டமிடப்பட்ட சதியொன்றில் குறித்த கிரிஸ்தவ பிரச்சார அமைப்பு ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படிகிறது.
அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மனித இனத்தை வளப்படுத்தும் பணிக்காக உலகிற்கு அனுப்பப்பட்ட முஸ்லிம் சமூகம்,
இந்தச்சம்பவத்தை ஒட்டி உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுவதை விட
நீண்டகால நோக்கில் சிந்தித்து செயற்படுவதே அறிவுபூர்வமானது.