வேர்களை வாசிக்கும் விழுதுகள்

வேர்களை வாசிக்கும் விழுதுகள்-நூல் அறிமுகம்

சமீலா யூசுப் அலி

நூலின் பெயர்:வேர்களை வாசிக்கும் விழுதுகள்
ஆசிரியர்:ஹுமைரா மெளதூதி.
மொழிபெயர்ப்பு: அப்ஆன் அப்துல் ஹலீம்
வெளியீடு: அல்ஹஸனாத் வெளியீட்டகம்,கொழும்பு.
அச்சு:ஐ.பீ சீ பதிப்பகம் மாவனல்லை
அட்டை வடிவமைப்பு:கிண்ணியா அனீஸ்
விலை:170
பக்கங்கள்:148
முதற்பதிப்பு:ஜூலை 2009

உன் முன்னே
அடர்ந்திருக்கும் இருளை அகற்று!
கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனைப் போல் எழு!
நேற்றும் இன்றும்
கதையாக கழிந்து விட்டன!
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு!
அல்லாமா இக்பால்

ஒரு சம்பிரதாயமான நூல் அறிமுகம் செய்து விட்டுப்போவதற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாத நூல் இது.
இந்த நூலை நான் வாசிக்கவேயில்லை;வாழ்ந்தேன்.
அந்தக் கணங்களில் நான் அனுபவித்த சத்தியத்தகிப்பின் சில துளிகளை இங்கு பதிவு செய்கிறேன்.
பெறுமதியும்,கனதியும் இலக்கியச்சுவையும் வாய்ந்த நூற்களை காலம் அடிக்கடி பிரசவித்துவருவதை மறுப்பதற்கில்லை.எனினும் உள்ளிழுக்கும் சுவாசக்காற்றையே சில நிமிடங்கள் நிறுத்தி,நாம் வாழ்ந்த வாழ்க்கையின் கனதியை எண்ணத்தராசில் நிறுக்கச்செய்யும் புத்தகங்கள் மிக மிக அரிதாகவே வெளிவருகின்றன.
கடந்த சில வருடங்களில் நான் வாசித்துக்குவித்த நூற்களின் எந்தப்பட்டியலிலும் சேராத நூல் ‘வேர்களை வாசிக்கும் விழுதுகள்’.சத்தியமாய்ச் சொல்வதாயின் அது உள்ளத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை பட்டியலிலுள்ள வேறெந்த புத்தகமும் ஏற்படுத்தவில்லை.

மெளலானா அபுல் அஃலா மெளதூதி.
சத்தியத்தின் சுவையை உணர்ந்த கொள்கைவாதி.
எந்த விலங்குகளாலும் பூட்டி வைக்க முடியாத கட்டற்ற காற்று,
வரண்டிருந்த நெஞ்சக்காடுகளில் தூய இஸ்லாத்தின் விதை தூவியதற்காய் ,தூக்குக்கயிற்றைக் கண்டு வந்தவர்.
அவரது’குத்பாப் பேருரைகள்’பலரை இஸ்லாத்துக்குள் இழுத்து வந்தது.
மெளலானா சொன்னார்.எழுதினார்.
அதை செய்தும் காட்டினார்.
கற்பாறை நெஞ்சுகளில் நீர் கசிய வைக்கும் எழுத்துக்கள் அவருடையவை.
ஹுமைரா மெளதூதி-
மெளலானாவின் குடும்பநந்தவனத்தில் முகிழ்த்த முதல் மலர்.
ஓர் இலட்சியத்தந்தையையும் ஓர் இலட்சியத்தாயையும் மட்டுமல்லாது ஒரு முன்மாதிரிப்பாட்டியையும் பெற்றது
அல்லாஹ் ஹுமைராவுக்கு வழங்கிய பேறு.

கடந்தாண்டு ஓகஸ்ட் தொட்டு டிஸம்பர் வரை ‘அல்முஜ்தமஃ’இதழில் சகோதரி ஹுமைரா தன் குடும்பத்தின் இலட்சியமும் சந்தோசமும் கலந்த வாழ்வினை உயிர்ப்போடு பதிவு செய்துள்ளார்.
அந்தப்பதிவுகளின் வசனங்களை மட்டுமல்லாது அதன் பின்னால் துடிக்கின்ற ஹுமைராவின் உள்ளத்தையும்
மொழிபெயர்க்க சகோதரர் அப்ஆன் முயற்சி செய்துள்ளார்.
தெள்ளிய தமிழில்,இடையறாது ஒலித்தோடும் காட்டாறு போன்றதாய தடங்களற்ற நடையில் அப்ஆனின் பேனா பயணப்பட்டிருக்கிறது.
சகோதரர் அப்ஆன் அப்துல் ஹலீம் ஜாமிஆ நளீமியா வளாகவாசி.
ஜம்மியத்தலபாவின் பாசறையில் வளர்ந்தவர்.
காற்றுக்குப் பதிலாக இகாமதுத்தீனை சுவாசிக்கும் குடும்பத்தின் வார்ப்பு.
அல்ஹம்துலில்லாஹ்.
மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுகொடுக்க வேண்டியதில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகி இருக்கிறது.

‘வேர்களை வாசிக்கும் விழுதுகள்’எனக்குக் கிடைத்த போது சூரியன் தூங்கப்போய் விட்ட முன்னிரவு.
மீண்டும் சூரியன் துயில் கலைந்து எழுமுன் நூலின் வரிகளில் தீயை வாசிக்கும் மெழுகுதிரியாய் கரைந்து போனேன்.
அல்லாஹ்வின் அமானிதம் சுமக்க அச்சப்பட்ட மலைகள் போன்றே நூலில் கனதி தாங்காது உள்ளம் எரிமலை சுமந்தது.
நூலின் இறுதியில் பல நூற்றாண்டுகள் முதிர்ந்த பெருமூச்சு புறப்பட்டது.
’அல்ஹம்துலில்லாஹ்’வாய்விட்டுச்சொன்னேன்.
பெருமரம் சுமந்த ஜமா அத்தின் பாசறைக்குள் என் புலன் திறந்த கணங்களுக்காய் பெருமிதப்பட்டேன்.
சுட்டெரிக்கும் தீத்துணுக்கொன்றின் தகிப்பையும்
தோல் தாண்டி எலும்பு வருடும் பனிக்குளிர் இரவொன்றின் நெகிழ்வையும் மாறி மாறி அனுபவிக்கச்செய்த ஆக்கம் இது.
நூலின் இடுக்குகளில் கசியும் குருதித்துளிகள் ஒர் இலட்சியவாதியின் நெஞ்சில் உறுதியின் மழையை வர்ஷிக்கச்செய்கிறன..
மெளலானா மெளதூதி ஒரு ஜமா அத்துக்குள் சொந்தமானவர் அல்ல..
அவரை ஓரக்கண் கொண்டுபார்க்கும் கண்களுக்கு நேர்ப்பார்வை பார்க்கச் சொல்லிக்கொடுக்கிறது ‘வேர்களை வாசிக்கும் விழுதுகள்’
திருமணம் பலரது இலட்சிய வாழ்வில் தடைக்கல்லாகி விடுகிறது.
உலகமும் அது சார்ந்த ஆசைகளுமாய் காற்றில் எரிந்த கற்பூரமாய் சராசரி மனிதனாய் மரணித்து விடும் அவலம் நேர்ந்து விடுகிறது.
மெளலானாவின் மனைவி வெறும் மனையை ஆளும் தலைவியாக மட்டும் இல்லாது ஒரு இலட்சியக்குடும்பத்தின் அடித்தளமாய் அமைந்தார்.
இஸ்லாமிய இயக்க விருட்சத்தின் ஆணிவேராய் உழைத்தார்.
செல்வம் கொழிக்கும் மாளிகை வாழ்விலிருந்து தன் துணைவர் தேர்ந்தெடுத்த வலி மிகுந்த பாதையில் அவரது பயணம் தொடர்ந்தது.

‘அல்லாஹுத்த ஆலா எனக்களித்த இந்த வாழ்க்கையில் அவனது மார்க்கத்தை வாழ வைப்பதைத் தவிர எனக்கு வேறு இலக்குகள் ஏதும் கிடையாது.
அத்தகையதொரு பாதையைத்தான் நான் தெரிவு செய்திருக்கிறேன்.அதில் தொடர்ந்தும் பயணிப்பதா இல்லையா என்று மீள் பரிசீலனை செய்யவேண்டிய தேவையொன்று கிடையாது.’என்ற மெளலானாவின் வார்த்தைகளுக்குப் பதிலாக அவரது வருங்காலத்துணைவியின் தந்தை ஒரு மடல் எழுதுகிறார்,
‘நீங்கள் பெரும் கோட்டை கொத்தளங்களில் வாழ்ந்தாலும் சரி வீதியோர முகாம்களில் வாழ்ந்தாலும் சரி எங்களது மகள் எப்போதும் உங்களோடிருப்பாள்.நீங்கள் எங்கு சென்றாலும் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் அவள் உங்களோடு பகிர்ந்து கொள்வாள்”

ஆம்.தன் வாழ்வின் அந்திப்பொழுது வரை மெளலானாவின் அன்பு மனைவி அந்தச்சொற்களின் செயல்வடிவ உதாரணமாய்த் தான் இருந்தார்.

இப்படியாய் ஏராளமான சம்பவங்களும் அவை சார்ந்த உணர்வுகளுமாய் நூல் முழுக்க வித்தியாசமான ஒரு மணம் விரவிக்கிடக்கிறது.
நூலை வாசித்து முடித்த பின்னர் வரலாற்றை திருத்தி எழுதிய ஒரு அறிஞரின் ஆளுகையில், இதயத்தில் இறைவனைச் சுமந்த ஓர் இலட்சியவாதியின் குடும்பத்தில் ஓர் அங்கமாய் சில ஆண்டுகள் வசித்த உணர்வை ஆத்மார்த்தமாய் அனுபவிக்க முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.
முதல் வரியிலிருந்து இறுதி வரி வரை உள்ளத்தை இழுத்துப்பிடித்து வைக்குமாய அதே கவர்ச்சி..
அதே தாளம் தப்பாத நடை.
இந்தப்புத்தகத்தைக் கையிலெடுக்கும் எவரும் முழுவதும் வாசிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள் என்றொரு உத்தரவாதத்தை தைரியமாகக் கூறலாம்.
‘பிறப்பும் பின்னணியும்’ என்பதிலிருந்து தொடங்கி ‘அமானிதத்திலிருந்து தோளும் கவலைகளிருந்து உள்ளமும் விடுதலையடைகின்றன’என்பது வரை ,15 சிந்திக்க வைக்கும் தலைப்புக்கள்.
நூல் அணிந்துரையில் இலங்கை ஜமாஅததே இஸ்லாமியின் அமீரும் நூல் பெயர்ப்பாளரின் தந்தையுமான உஸ்தாத ரஷீத் ஹஜ்ஜுல்
அ க்பர் அவர்கள் “மெளலானா மெளதூதி அவர்களின் தஜ்தீத் பணி,இயக்க வாழ்வுக்கான போராட்டங்கள் முதல் தூக்குமேடை வரை வெளியுலகம் கண்ட வரலாறு ஒன்று வெளிப்படையாக இருக்க ,அந்த வெளிப்படைகளிலிருந்து தூரமாகி வேறுபட்டு நிற்காத அவரது அற்புதமான அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் அன்னாரின் மூத்த மகள் ஹுமைரா மெளதூதி’என்று உள்ளம் திறக்கிறார்.

மதிப்புரை வழங்கி இருப்பவர் ஜாமி ஆ நளீமியாவின் பிரதிப்பணிப்பாளார் அஷ்ஷெய்க் ஏ.ஸீ அகார் முஹம்மத் அவர்கள்.
’ஒரு கொள்கைவாதி.சமூக சீர்திருத்தவாதி,தாஇ,ஓர் உண்மம இறை அடியான் தன் வாழ்வை எவ்வாறு அமைத்துக்கொள்வார்.
அவரது தனிப்பட்ட வாழ்வு,குடும்ப வாழ்வு,சமூக உறவுகள் எவ்வாறு அமையும் என்பன பற்றியெல்லாம் அரிய விரும்பும் ஒருவர் இந்நூலை அவசியம் படிக்க வேண்டும்.
இந்நூலின் பல பக்கங்கள் என் கண்களை கசியவைத்தன;இன்னும் சில பக்கங்கள் எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தின,
மொத்தத்தில் இவ்வாக்கம் என்னை,எனது வாழ்வை ஒருமுறை மறு பரிசீலனைக்கு உட்படுத்த உதவியது என்ற உண்மையை என்னால் இங்கு கூறாமலிருக்க முடியாது”என்ற
வரிகளைப்பார்க்கும் போது ,இந்தப்புத்தகம் அந்த வரிகளுக்கு முற்றிலும் தகுதியானது என்பதை சந்தேகமின்றி உணரலாம்.

மொழிபெயர்ப்பாளர் தன் முன்னுரையில்
“ஒருவரது வரலாற்றை யாரோ சொல்வதை ,எழுதுவதை விட
விட சொந்த மகள் அதனைச்சொல்வது,மெளதூதி என்ற மிகப்பெரும் ஆளுமையுடன் எம் உள்ளத்தை அப்படியே பிணைக்கச்செய்து விடுகிறது.”என்று தொடர்கிறார்.

‘வேர்களை வாசிக்கும் விழுதுகள்’தலைப்பைபோலவே உள்ளடக்கமும் அழகும் ஆழமும் நிரம்பியிருக்கிறது.
அட்டைப்படத்துக்கும் நூலுக்கும் இடையில் விருட்சத்துக்கும் விழுதுகளுக்குமிடையிலான தொடர்பினை ஒத்த ஒற்றுமையை உணரலாம்.

ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் திரும்பத் திரும்ப மீட்டப்பட வேண்டிய இந்த நூல் இஸ்லாத்தை உள்ளத்திலும் அதன் மூலம் இந்த உலகத்திலும் நிலைநாட்ட உழைக்கும் தாஈக்களின் கைந்நூலாகக் கொள்ளப்படக்கூடிய சகல தகுதிகளையும் கொண்டு விளங்குகின்றது.

நூலின் ஓரிடத்தில் சகோதரி ஹுமைரா இவ்வாறு விவரிக்கிறார்.
“தந்தை மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அரசியல் தலைவரொருவர் அவரைப்பார்த்துக் கிண்டலாக இப்படிக்கேட்டார்.”ஆயதுல்லாஹ் கொமைனி ஈரானில் ஒரு புரட்சியைத்தோற்றுவித்தார்.
ஆனால் உம்மால் பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமியப்புரட்சியைத்தோற்றுவிக்க முடியவில்லையே”அவரது கிண்டலான இந்தக்கேள்விக்கு தந்தை அமைதியாகவும் அறிவுபூர்வமாகவும் இப்படிப் பதிலளித்தார்.
”நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வுக்காக செய்த பணிகளுக்குரிய கூலியைக் குறைவின்றித் தந்திருக்கிறான்.எனது பணியின் முடிவு எப்படியிருக்கும்;எந்த வடிவத்தில் வரும் என்பது எனக்குத்தெரியாது.
அல்லாஹ் தான் விரும்பியவர்களை விரும்பிய விதத்தில் விரும்பிய பணிகளுக்காகப் பயன்படுத்துவான்.எனது கடமை அந்தப்பணிகளை அல்லாஹ்வுக்காக செய்வது தான்.
அந்தப்பணியில் நான் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய கையிலில்லை.”

ஆம்.இருளின் பிடிக்குள் சிக்கியிருந்த சமூகத்தை மெளலானா அபுல் அஃலா மெளதூதி மாமனிதர் குர் ஆனிய சூரியன் கொண்டு மீட்டெடுத்தார்.
அவரது உடல் அழிந்தாலும்
அவரது உள்ளம் இன்னும் வாழ்கிறது
பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின்
கொள்கைப்பற்றிலும்
ஆன்ம வலிமையிலும்…..

‘வேர்களை வாசிக்கும் விழுதுகள்’நூலை மூட மனமின்றி மூடுகிறேன்.
ஆம்
இந்தப்புத்தகம் வாசிப்பிற்குரியதல்ல…
வாழ்தலுக்குரியது

நெஞ்சில் நிற்கின்ற சுவை..............1

கடந்த வாரம் ஒரு ஓய்வான ஞாயிற்றுக்கிழமை.
வீட்டில் யாரும் இல்லை.
வழமையான பரபரப்புக்களின்றி மெதுவாக சமைப்போம் என்ற எண்ணத்துடன் அம்பையின்'காட்டில் ஒரு மான்' நூலை ஏழாவது தடவையாக மேய்ந்து கொண்டிருந்தேன்.

வாசலடியில் சின்னதாய் சந்தடி.
பெரியம்மா அவரது மகள்களிருவர் சாச்சியின் மகள் என வரவேற்பறை நாற்காலிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகின.
கொஞ்சம் கதை,நிறைய சிரிப்பு இவற்றோடு சூடான தேநீர்.
மதியம் 12 மணியும் தாண்டி விட்டது.
பெரியம்மா போக வேண்டும் என்று எழுந்து விட்டார்.

"கொஞ்சம் நில்லுங்க..அவசரமா சமையல் செய்கிறேன்.ஆனா ஒன்று கருவாடும் போஞ்சியும் தான் பிரிஜ்ல இருக்கு...பரவாயில்லையா..."தயக்கத்துடன் தான் கேட்டேன்.

'ஓ அதுக்கென்ன.....நல்லம் தானே"
பின்னர் ஒருவர் தேங்காய் துருவ இன்னொருவர் வெங்காயம் நறுக்க் எங்கள் சின்னச் சமையலறை களைகட்டியது.

கருவாடு ஆக்குவதில் எனக்கு பெரிய அனுபவம் கிடையாது.கருவாட்டை சின்னதாக அரிந்து பொரிப்பேன்.அல்லது எண்ணெய்யில் கிழங்கும் தக்காளியும் சேர்த்து வதக்கி வைப்பேன்.

மாலைதீவிற்கு சென்ற குடும்ப நண்பரொருவர் வரும் போது கூடவே வாங்கி வந்த கருவாடு இருந்தது.பெரியம்மா கருவாட்டை முகர்ந்து பார்த்து விட்டு புதிதாய் இருப்பதாய் சொன்னார்.

காலையில் சமைத்த பருப்புக்கு இரண்டு உருளைக்கிழங்குகளை வெட்டிப் போட்டு ஆணத்தை கூட்டினேன்.ரைஸ் குக்கரில் சோறு 'சொத சொத'வென்று கொதித்துக்கொண்டிருந்தது.
போஞ்சிக்காயை முழுவதுமாக வேக விடாமல் லேசான பச்சை நிறமாக இருக்கும் போதே தேங்காய்பால் ஊற்றி இறக்கினோம்.
கருவாட்டை ஆக்கும் பொறுப்பை பெரியம்மாவிடமே ஒப்படைத்தேன்.
பெரியம்மாவின் சமையல் சுவையாக இருக்கும்.
கருவாட்டை கொதிக்கும் நீரில் கழுவி தோல் அகற்றி துண்டுகளாக்கினார்.
தக்காளி.வெங்காயம், பச்சைமிள்காய், கறிவேப்பிலை, கொஞ்சம் புளி, மஞ்சள் தூளும் மிளகாய்ப்பொடியும் கலந்து பாலில் வேக வைத்து கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றினார்.
'
"என்ன மணம்...."கருவாட்டுக்குழம்பின் வாசம் நாசி துளைத்து வயிற்றில் அடங்கியிருந்த பசியைக் கிளறிவிட்டது.

நிலத்தில் பெரியதொரு விரிப்பை விரித்து எல்லோரும் அமர்ந்தோம்.
தட்டில் சோற்றை இட்டு கருவாட்டுக்குழம்பை ஊற்றிப்பிசைந்து வாயில் இட்டுக்கொண்ட போது ....
........................................................
சொல்ல வார்த்தைகள் இல்லை.
அப்படி ஒரு சுவை.

சந்தோஷமான மனிதர்களின் 100 இரகசியங்கள் 2

சந்தோஷத்திற்கான தந்திரோபாயம் ஒன்றை மேற்கொள்ளுங்கள்.

பிறப்பிலேயே சிலர் மகிழ்ச்சியானவர்களாகவும் சிலர் மகிழ்ச்சியற்றவர்களாகவும் பிறந்து விடுவதாகத் தான் நாம் கருதிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இவ்விரு வகை மனிதர்களும் அவர்களுக்குரிய மனோநிலைகளைத் தாமே உருவாக்கி அதனை நீரூற்றி வளர்க்கின்றனர்.
சந்தோஷமான மனிதர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனர்.சந்தோஷமற்ற மனிதர்கள் தமக்குக் கவலை தரும் விடயங்களையே தொடர்ந்து செய்கின்றனர்.

ஆரோக்கியமான வியாபாரத்தின் முதல் அடையாளம் எது?ஆரோக்கியமான வியாபாரத்திட்டம்.
வியாபார ஆலோசனை நிறுவனங்களின் வாதம் இது.
ஒவ்வொரு வியாபாரமும் முதலில் அதன் நோக்கத்தை தீர்மானிக்க வேண்டும்;அதன் பிறகு அந்த நோக்கத்தை அடைவதற்கான ஒரு திட்டத்தை வரைய வேண்டும் என்று அவை கருதுகின்றன.
இதே நகர்வை மனிதர்களும் மேற்கொள்ளலாம்.உங்களுக்கு என்ன தேவை என்பதை உறுதியாக் அறிந்து கொள்ளுங்கள்.பின்னர் அதை அடைவதற்க்கான தந்திரோபாயத்தை பாவியுங்கள்.

ஆச்சரியபூர்வமாக சிறுவர்கள் இந்த விடயத்தில் எங்களை விட கெட்டிகாரர்கள்.குழந்தைகளுக்கு தெரியும் ஒரு ஐஸ்கிரீம் கிடைப்பதற்கு எந்தளவு அடம்பிடிக்க வேண்டும் என்பது.அதிகம் சப்தம் போடுவது எந்த நேரத்தில் பெற்றோரை அதிருப்தி அடையச் செய்யும் என்பதையும் அவர்கள் உணர்ந்தே உள்ளனர்.
குழந்தைகள், வாழ்க்கையில் சில் விதிகள் மற்றும் எதிர்வுக்கூறக்கோடிய நடத்தைக்கோலங்கள் இருப்பதை உணர்ந்திருக்கின்றனர்.அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள அவசியமான வழிமுறைகளையும் கையாள்கின்றனர்.

சந்தோஷமான வாழ்க்கை வாழ்வது என்பது ஒரு குழந்தை ஐஸ்கிரீம் கோர்னை பெற்றுக்கொள்வதற்காக செய்யும் முயற்சியை ஒத்தது.உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
அதைப்பெற்றுக்கொள்வதற்கான பொருத்தமான உபாயத்தைப் பயன்படுத்துங்கள்!
உங்களை எது சந்தோஷப்படுத்துகிறது எது கவலைப்படுத்துகிறது என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.அதனை வைத்து நீங்கள் விரும்பியதை அடைவதற்கு முயற்சியுங்கள்.

......................................................................................................................................................
மகிழ்ச்சியான மனிதர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிகளை அனுபவிப்பவர்கள் அல்ல;துக்கமான மனிதர்கள் தொடர்ச்சியாகத் தோல்விகளை அனுபவித்தவர்களும் அல்ல.ஆய்வுகளின் படி இந்த இருவகையான மனிதர்களும் கிட்டத்தட்ட ஒரே விதமான வாழ்க்கை அனுபவங்களையே கொண்டிருப்பது தெரிய வந்தது.சராசரி துக்கமான நபரொருவர் மற்றவர்களை விட இருமடங்கு அல்லது அதற்கும் அதிகமான நேரத்தை தன் வாழ்க்கையின் வெறுப்பான நிகழ்வுகளைச் சிந்திப்பதில் செலவிடுகிறான்.
அதே வேளை மகிழ்ச்சியான மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைய மலர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை தேடுவதிலும் அதில் மகிழ்ச்சியடவதிலும் தமது காலத்தைச்செலவிடுகின்றனர்.
......................................................................................................................................................................

இன்றைய மின்னல் - 5

எல்லாவற்றிலிருந்தும் ஏதாவதொன்றையும் ,ஏதாவதொன்றிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள்.

இன்றைய மின்னல் - 4

உங்களிடம் உள்ளது முழுமையும் எதிராளியிடம் சொல்லிவிடாதீர்கள்.
உங்களைப்பற்றி சொல்லாத இரகசியங்களை எப்போதும் வைத்திருங்கள்
ஹயா

சந்தோஷமான மனிதர்களின் 100 இரகசியங்கள் 1

இங்கு கூறப்படும் 100 இரகசியங்களும் ,சந்தோசம் மற்றும் திருப்தியான வாழ்வு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.ஒவ்வொரு தலைப்பு சம்பந்தமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வாளர்களின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
டேவிட் நைவன் PHd

உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் அர்த்தமும் உண்டு

இந்த உலகத்தின் இடைவெளியை நிரப்புவதற்காக அல்லது யாரோ ஒருவர் இயக்கும் திரைப்படத்தில் ஒரு பின்னணிப்பாத்திரத்தில் நடிப்பதற்காக இங்கு வரவில்லை.

நீங்கள் பிறக்கவில்லை என்றால் இப்போது இருக்கும் உலகம் அப்படியே இருந்திருக்குமா?
நீங்கள் இல்லாவிட்டால் நீங்கள் சென்ற ஒவ்வொரு இடமும் வித்தியாசமாக இருந்திருக்கும் நீங்கள் சந்தித்த ஒவ்வொரு நபரும் இப்போதிருப்பதை விட வித்தியாசமாக இருந்திருப்பார்கள்.

நாங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் தொடர்பு பட்டவர்கள்.எங்களைச் சூழ இருப்பவர்களின் தீர்மானங்களால் பாதிக்கப்படுகிறோம்,அவ்வளவு ஏன்? சூழ இருப்பது ஒன்றே போதும் எங்களது வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த..

பீட்டர் பிலடெல்பியாவில் தொழில் புரியும் ஒரு வழக்குறைஞர்.
அவரது நாய் டகெட் திடீரென கடுமையாக சுகவீனமுறுகிறது.முதுகுத்தண்டில் ஏற்பட்ட ஒரு வகையான புற்று நோயால் கொஞ்சம் கொஞ்சமாக டகெட் இன் உடல் செயலிழந்து வருகிறது.எந்த மிருகவைத்தியராலும் அதனைக்குண்ப்படுத்த முடியவில்லை.எப்படியாவது டகெட் ஐக்குணப்படுத்த வேண்டும் என்ற தேடுதலில் சிக்கினார் ஒரு குழந்தை நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்.டொக்டர் பீட்டருக்கு உதவிசெய்வதாக வாக்களிக்கிறார்.பதிலாக தான் வேலை பார்க்கும் குழந்தை வைத்தியசாலைக்கு கணிசமான தொகை நன்கொடை தரவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார்.
ஜெரி நீலக்கண்களும் பொன்மஞ்சள் கேசமும் கொண்ட 5 வயதுச் சிறுவன்.அவன் பீட்டரையோ டகெட் ஐயோ எப்போதும் சந்தித்திருக்கவில்லை.ஜெரிக்கும் முதுகுத்தண்டில் புற்று ஏற்பட்டிருந்தது.பீட்டர் வழங்கிய நன்கொடை மூலம் ஜெரியின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.அவனது புற்றுக்கட்டி அகற்றப்பட்டது.
டகெட் இனுடைய சத்திரசிகிச்சையும் வெற்றியடைந்தது.

.................................................................................................................................................................................
வயதான அமெரிக்கர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருப்பதாகக் கருதுகிறானா இல்லையா என்பது மகிழ்ச்சியை அளவிடும் சிறந்த குறிகாட்டியாக இருப்பதாகத் தெரிய வந்தது.
ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட குறிக்கோள் இல்லாத 10 பேரில் 7 பேர் தம் வாழ்க்கை குழப்பமாக இருப்பதாகக் கருதினார்கள்.ஆனால் ஒரு குறிக்கோள் கொண்டிருந்த மனிதர்கள் 10 பேரில் 7 பேர் தம் வாழ்க்கை பற்றி திருப்தி அடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

..............................................................................................................................................

இன்றைய மின்னல் - 3

வாழ்க்கை ஒரு நிலைக்கண்ணாடி தான்,
நீங்கள் அங்கு காண விரும்புவதை
முதலில் உங்களுக்குள் காண வேண்டும்!

இன்றைய மின்னல் - 2

உங்கள் கனவுகளை நனவாக்கிடும் மிகச்சிறந்த வழி
விழித்தெழுவதாகும்.
Paul Valery

காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது யார்?

காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது பெண்கள் தான்.

இங்கு காதல்,குளம்,கல்லெறிதல் பற்றியெல்லாம் வித்தியாசமான கருத்துக்கள்,பார்வைக்கோணங்கள் முன்வைக்கப்பட்டன.

கல்லெறிந்தால் குளம் கலங்கும்....
அலைகள் உருவாகும். எறிந்த கல் அப்படியே ஆழத்துக்குப் போய் விடுவதுமுண்டு.அலைகளை உருவாக்கி ரசிப்பதுமுண்டு. கற்கள் அளவு ,வீச்சு ,நிறை இவற்றினால் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
குளத்தின் கொள்ளளவுக்கும் அதிர்வுக்கும் இடையில் கூட தொடர்பிருக்கிறது. சரி சுற்றி வளைத்து மூக்கு தொடாமல் விடயத்துக்கு வருகிறேன்.

`பெண் நாணமுடையவள் அவள் எப்படி காதல் குளத்தில் கல்லெறிவாள்` என்று உள்ளத்தில் கேள்வி, தூண்டில் முள்ளாய் தைக்கிறதா? பெண்ணின் நாணமே ஒரு கல் தான் என்பது என் கருத்து. இறைவன் பெண்ணைப் படைக்கும் போதே இத்தகைய இனிய கற்களை வைத்திருக்கிறான்.

காதல் என்றால் கல்யாணத்துக்கு முன் வரும் ஒன்று என்றே கருதி வருகிறோம்.திருமணத்துக்குப் பின்னும் அன்பும் இனிமையும் தொடருமானால் அது தான் காதல். தன் இனிய துணைவனின் காதல் குளத்தில் பெண் எறியும் கற்களைப் பாருங்கள். துடுக்குத்தனம்,மென்மையான பேச்சு,ஊடல், அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு இவையெல்லாம் என்ன?

இவற்றால் குளம் அதிராதா? பெண்ணின் கோபமும் அலட்சியமும் கூட ஆண் மனதில் அலையாக மாறி அலைக்களிப்பதை நாம் கண்டதில்லையா? ஒன்று...... பெண்கள் வேண்டுமென்றே கல்லெறிவதும் உண்டு. தங்களை அறியாமலே கல்லெறிவதும் நடக்கிறது. அவளே ஒரு கல்லாயும் சமயங்களில் இருப்பதுண்டு. பெண்ணின் பார்வை -அது தான் பாராங்கல். நிலவின் குளிர்ச்சியோடு வரும் அந்த பார்வை ஆண்மனதில் ஆயிரம் மின்னல் அதிர்வு தருகிறது. பார்வை தாழ்த்தி போனாலும் உடலின் அசைவுகளும் சங்கீதமான குரலும் காதல் குளத்தில் கல் வீசிச்செல்கின்றன.

பெண் தன் உடல் மறைத்து உடையணிந்தாலும், அந்நிய ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்வை தாழ்த்துமாறு சொல்லுகிறது இஸ்லாம்.இதன் பின்னணியில் பெண்,அவள் அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்தால் கூட அவளே ஒரு கல்லாய் இருக்கிறாளோ என்று எண்ணத்தோன்றுகிறது.எனவே கல்லெறிவது ஒன்றும் பெண்ணின் தவறு அல்ல அது அவளின் படைப்பின் நேர்த்தி.பெண் நினைத்தால் எறியும் கல்லின் வீச்சத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்...
அவ்வளவு தான்.

இங்கு நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். நான் படித்தது புகழ் பெற்ற முஸ்லிம் கலவன் பாடசாலை ஒன்றில்.
வகுப்புக்கள் ஆண்கள்,பெண்களுக்கு வேறு வேறாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் சலவை செய்து அழுத்திய வெள்ளுடைகளோடு தான் மேல்வகுப்பு மாணவிகள் வருவார்கள்.ஆனால் ஆண்களோடு பேசுவது மிகக் குறைவாக அல்லது இல்லை எனலாம்.

அப்படியென்றால் ஏன் உடையிலும் நடையிலும் அத்தனை கரிசனை? கொழும்பில் சர்வதேச பெண்கள் பாடசாலை ஒன்றில் ஒரு வருடம் தங்கிப் படித்த போது விடை கிடைத்தது.
அங்கு நான் அழுத்திய சீருடையோடு அழகாக செல்வேன். ஆனால் என் சக தோழிகள் எந்தக் கவனமும் இல்லாமல் ஏனோ தானோ என்று வருவார்கள்.இத்தனைக்கும் அங்கு படிக்கும் மாணவிகளில் பெரும்பான்மையினர் நாகரீகம் துள்ளி விளையாடும் மேல்தட்டு வர்க்கத்தினர்.
வகுப்பு முடிந்ததும் யாரும் பொது பஸ்களில் செல்வதில்லை.சொந்த வாகனம் வரும்.அங்கு ஒரு ஆண் ஆசிரியரோ,கடைநிலை ஊழியரோ கூட இல்லை.எனவே அலங்காரத்தைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதுமில்லை.
இதே தோழிகள் பாடசாலைக்கு வெளியே அலங்காரமில்லாமல் செல்வதில்லை.பெண்கள் கவர்ச்சியான உடை அணிவதன் நோக்கங்களில் ஆண்களின் கவன ஈர்ப்பும் முக்கிய இடம் பெறுகிறது.எனவே இங்கு எது கல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே விவாதம் முடிவுக்கு வந்து விடும்.

காதல் குளத்தில் எறியப்படும் கல்லை விட எறியப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வலைகளே கண்ணுக்குப் புலப்படும்.பெணகள் கல்லை எறிந்து விட்டு ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பார்கள்;ஆண்களின் உசுப்ப பட்ட மனக்குளத்தின் அதிர்வலைகளே எல்லோருடைய வெற்றுக் கண்களுக்கும் புலப்படும்.உடனே `காதல் குளத்தில் கல்லெறிபவர்கள் ஆண்களே ` என்று முடிவுக்கு வந்து விடுவோம்.

பறவைகளிலும் மிருகங்களிலும் ஆண்வர்க்கத்துக்குத் தான் அதிக கவர்ச்சியும்,காதல் குளம் வீசக் கற்களும் இறைவன் கொடுத்திருக்கிறான்.இதனை யாரும் மறுக்க முடியாது.ஆனால் மனித வர்க்கத்தில் இதற்கு நேரெதிராய் பெண்ணினத்துக்கே அசாதாரண ஈர்ப்புச்சக்தியும் உளம் கலக்கும் கற்களும் தரப்பட்டிருக்கின்றன.இது அறிவியல் உண்மை.

தலை நிமிர்ந்து யாரையும் பார்க்காத பெண்ணால் குளம் அதிர்ந்த ஆண் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் எதிரணித்தோழர்கள் தலைப்பைப் புரிவதில் தவறு விட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
வரலாறு நெடுகிலும் காதல் குளத்தில் கல்லெறிந்த பெண்களையும் அவர்களால் குளம் அதிர்ந்த ஆண்களையும் நிறையவே காணலாம்.

கற்கள் அதிர்வதில்லை.
கற்பட்ட குளமே அதிர்கிறது.
பெண் காதலை முதலில் சொல்வதில்லை,ஆனால் அவளது அங்க அசைவுகள் அனைத்தும் இதை சொல்லாமல் சொல்கின்றன.இனி காதல் குளம் கலங்குகின்றது. ஆண் காதலை சொற்களால் தெளிவாக வெளிப்படுத்துகிறான்.
குளத்தில் எறியப்பட்ட கல் அமைதி காக்கிறது.

இன்றைய மின்னல் -1

வெற்றிக்கான இரகசியம் யாருக்கும் தெரியாத ஏதோ ஒன்றை நீங்கள் தெரிந்திருப்பதாகும்.
Aristotle Onassis

இனி என்ன செய்ய?

“என்னால் ஒரு உபயோகமும் இல்லை”
“என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்”
“எனக்கு வயதாகி விட்டது”
“இனி என்ன செய்ய…”
“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.”

என்று சோர்ந்து போய் ஒரு மூலையில் குந்தி விடும் பெண்களை நாளாந்த வாழ்க்கையில் ஏராளம் காணலாம்.
ஓலைக்கூரை பிய்ந்து போன தன் வீட்டைப் பார்த்து’அட இனி நிலவையும் நட்சத்திரங்களையும் படுத்திருந்தே பார்க்கலாம்’என்று உற்சாகப்பட்டாராம் ஒரு கவிஞர்.
எதிர்மறை மனோபாவம் பற்றி பேசாத அறிஞர்கள் இல்லை.
‘எனக்கு ஏலாது’என்று உதட்டில் நெளியும் வார்த்தைகள் தொட்டு
முழு உலகமுமே எனக்கு எதிராக நிற்கிறது’என்று காழ்ப்புணர்ச்சி வரை இந்த எதிர்மறை மனோபாவத்தின் ஓரோர் கட்டங்கள் தான்.ஒரு செழித்து நிற்கும் ஒரு விருட்சத்தின் வேரை அரித்து மரத்தையே விழுத்தி விடக்கூடிய வல்லமை வாய்ந்தது இந்த எதிர் மனப்பாங்கு.
சரி…இந்த மனப்பாங்கை மாற்றி எப்படி வாழ்க்கையை பொஸிடிவ்வாக அல்லாது நேர் மனப்பாங்கோடு சந்தோஷமாக எதிர்கொள்வது என நீங்கள் கேட்பது புரிகிறது.இந்த விடயத்தைப்பற்றி பல்வேறுமோழிகளில் பல்வேறு நூல்களும் சஞ்சிகைகளும் பேசுகின்றன.சுருக்கமாகவும் இறுக்கமாகவும் சொல்வதானால் நேர் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வது எமது கைகளில் தான் இருக்கிறது.

1.எப்போதுமே உங்கள் கவனம் உங்கள் இறுதி அடைவை நோக்கியதாக இருக்கட்டும்.இரத்தினக்கல் அகழும் போது கையில் பிசுபிசுக்கும் சேற்றைப் பற்றிக் கவலைப்பட யாருக்கு நேரம் இருக்கிறது.
2.எதையும் இப்போதே செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.ஒரு வேலையை முடிக்கும் போது வரும் மனநிறைவும் நேர்மனப்பாங்கை அதிகரிக்கும்.
3.எதிலும் குறை காணும் மனநிலையை விடுத்து வாழ்வில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஏராளமான நன்மைகளுக்கு நன்றியுடையவர்களாக இருங்கள்.
4.அறிவைத் தேடுங்கள்…ஒரு புதிய வகுப்பில் சேருங்கள்.உங்கள் வயதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.உற்சாகமும் தன்னம்ப்பிக்கையும் ஏற்படும்.
5.உங்களைப்பற்றி நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.உங்கள் ஆளுமை பற்றிய நேர் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.
6.எதிர்மனப்பாங்கோடு கதைக்கும் நபர்கள்,எதிர் மனப்பாங்கை ஏற்படுத்தும் விடயங்கள் இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
7.உங்களால் செய்யப்பட வேண்டிய வேலைகள்,விடயங்களை விரும்பிச் செய்வதற்க்குக் கற்றுக் கொள்ளுங்கள்.
8.உங்களுடைய நாளை ஆரோக்கியமான பொஸிடிவ்வான ஒரு செயல் அல்லது சிந்தனை கொண்டு ஆரம்பியுங்கள்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

திக்ர்

“பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள். “(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா 3797)

என் இனிய இஸ்லாமிய உள்ளமே,
உனக்கு என் மனம் நிறைந்த சாந்திப்பூக்கள்…
அஸ்ஸலாமு அலைக்கும்.
‘அல்லாஹ்வின் நினைவில் நனைந்திருக்கும் நாவுகள் பாக்கியம் பெற்றவை’என்று எங்கோ வாசித்ததாக உன் மடலில் எழுத்துக்கோர்த்திருந்தாய்.
திக்ர் என்றால் அகில உலகையும் படைத்தாளும் இரட்சகனை ஞாபகிப்பதாகும்.
அந்த இனிய திக்ர் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களை, எனக்கும் உனக்குமாய் இங்கு ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.
அல்குர் ஆனின் சில வார்த்தைகளை ஓசை நயத்துடன் ஓதுவதை மட்டும் திக்ர் என்பதாய் விளங்கி வைத்திருக்கும் ஒரு சமூக அமைப்பில்,திக்ரின் உண்மை வடிவமும் நோக்கமும் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.
உதடுகளில் சிறகடிக்கும் வார்த்தைகள் உள்ளங்களைத் தட்ட முடியாமலிருக்கும் சோகம் நேர்ந்திருக்கிறது.
அல்லாஹ்வின் பார்வையில் எடை கனக்கும் திக்ர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.
திக்ர் என்ற அறபுச்சொல்லின் அர்த்தம் நீ அறிவாயா?
திக்ர் என்பது அல்லாஹ்வின் சொல்லான அல்குர் ஆனையும் அதை அழகுடன் ஓதுவதையும் குறிக்கும்…
திக்ர் என்பது முழுவதுமாய் சிரம் தாழ்த்தும் தொழுகையைக் குறிக்கும்.
உளம் உருகி இருகரம் ஏந்தி அல்லாஹ்வைப் பிரார்திப்பதும் திக்ர் தான்.
இறை புகழ் பாடுவதால் ஈரமாயிருக்கும் நாவும் திக்ரில் தான் இருக்கிறது.
அறிவைத் தேடுவதும் அதனை தெளிவாகக் கற்பிப்பதும் கூட திக்ர் என இஸ்லாம் சொல்கிறது.
படைத்தாளும் இறைவன் ஏவல்களை ஏற்று நடப்பதும்,விலக்கியவை தவிர்த்தலும் திக்ரின் இன்னொரு வடிவம் தான்.
உள்ள்த்தால் அல்லாஹ்வை எண்ணிப்பார்ப்பதும் திக்ர் தான்.
திக்ரின் உள்ளடக்கத்தை இப்படிச் சொல்கிறார் ஓர் இஸ்லாமிய அறிஞர்.
கண்களின் திக்ர் அல்லாஹ்வை நினைத்து அழுவதிலிருக்கிறது.
செவிகளின் திக்ர் அல்லாஹ்வின் புகழை செவிமடுப்பதிலிருக்கிறது.
நாவின் திக்ர் அல்லாஹ்வைப் புகழ்வதிலிருக்கிறது
கைகளின் திக்ர் அல்லாஹ்வாக்காய் கொடுப்பதிலிருக்கிறது.
உடலின் திக்ர் அல்லாஹ்வுக்கு நாணயமாய் நடப்பதிலிருக்கிறது.
உள்ளத்தின் திக்ர் அல்லாஹ்வின் மீது அச்சமும் நம்பிக்கையும் வைப்பதிலிருக்கிறது.
ஆன்மாவின் திக்ர் அல்லாஹ்வை முழுவதுமாய் ஏற்று அவனுக்காய் வாழ்வதிலிருக்கிறது.
மொத்ததில் ஒரு முஸ்லிமின் வாழ்க்கையே திக்ர் தான் என்ற பேருண்மையைப் புரிந்து கொள்….
உன்னை விட ஒருவன் அல்லது ஒருத்தி அழகில் ,செல்வத்தில்,குடும்பப்பாரம்பரியத்தில் அல்லது செல்வாக்கில் உயர்ந்து விட்டானா உள்ளத்தின் ஆழத்திலிருந்து துடித்து வரட்டும் ‘மாஷா அல்லாஹ்’
பொறாமையின் மஞ்சனித்த உன் விழிகள் அமைதி கொள்ளும்.
இனியில்லை என்று அழுக்கு உடையும் பசியடைத்த கண்ணுமாய் வருகிறானே அந்தக் குருட்டுப்பிச்சைக்காரன்,அவனைப் பார்….
உன் உள்ளம் அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தும்.
அந்த நீலம் பூசிய வானம் பார்…
கிரணக்கரம் நீட்டும் நிலவின் புன்னகை பார்….
அந்திக் குருவியின் சிறகைப்பார்…
புதிய குழந்தையின் சிலிர்ப்பு பார்…….
சொல்!
அல்ஹம்துலில்லாஹ்!
சொல்!
அல்லாஹு அக்பர்!
உரக்கச்சொல்!
அந்த மலை முகடுகள்
அந்த மேகப்பஞ்சு…..
காற்று துளைத்துச் செல்லும் விமானம்
எல்லாம் எதிரொலிக்கட்டும்……….
உண்மையான திக்ரின் வலிமை புரியாததால் தாம் இன்று வேறு விடயங்கள் எம் திக்ராகி விட்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
அல்லாஹ்வின் நினைவு பயிரிடப்பட வேண்டிய உள்ள நிலங்களில் இன்று களைகள் ஓங்கி தளைத்திருக்கின்றன.
களைகள் தான் பயிர்கள் என்றும் பயிர் தான் களை என்றும் சடவாத உலகம்
சத்தியம் செய்து என்னையும் உன்னையும் நம்பச்செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது.
அல்லாஹ்வைப்புகழ வேண்டிய நாவுகளில் ஆபாச வார்த்தைகள்,விரசமான கேலிகள்…
அடுத்தவன் உயர்வில்,சந்தோஷப்படாது தீப்பிடித்து எரியும் இதயங்கள்….
கொடுப்பது எப்படிப்போனாலும் சுரண்டி எடுப்பதிலேயே சந்தோசப்படுகின்ற கரங்கள்….
சுஜூதில் தலை வைத்து உலகம் முழுவதும் சுற்றி வரும் உள்ளம்.
இப்படி இப்படியாய்….
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு ,உதட்டில் முணுமுணுப்பாய் ஒட்டியிருக்கும் ‘அல்ஹம்துலில்லாஹ்’வுக்கும் ,உருட்டும் தஸ்பீமணியில் தேய்ந்து போயிருக்கும் ‘சுப்ஹானல்லாஹ்’வுக்கும் என்ன பெறுமதி இருந்து விடப்போகிறது?

ஒன்று புரிந்து கொள்…..
கிழிந்து போன உடைகளுடன் அரேபியப்பாலைவனங்களிலே ஆடு மேய்த்த்க் கொண்டிருந்த மனிதர்களை ஆட்சிப்பீடத்தில் அமரச் செய்தது இந்த திக்ர் தான்….

ஹமாஸின் இதயத்துடிப்பு அஹ்மத் யாஸீனுக்கு நரைத்த வயதிலும் நரைக்காத உள்ளத்தைத் தந்தது இதே திக்ர் தான்….

கல்வியமைச்சைத் தூக்கி எறிந்து விட்டு தூக்குக்கயிற்றுக்கு கழுத்தை நீட்டும் துணிவை செய்யுத் குதுபுக்கு எது கொடுத்தது?
திக்ர்………

திக்ரின் ஒரு வாளை விட வலிமையானது…
ஒரு பாறையின் நெஞ்சையும் ஈரப்படுத்தக் கூடியது…

என் இனிய நண்பா,
அர்ஷில் நிழல் பெறும் ஏழு பேரில் அல்லாஹ்வை நினைத்து தனிமையில் விழி சிந்திய இளைஞனை எண்ணிப்பார்…
நமக்கும் அந்தப்பாக்கியம் வேண்டாமா?
அல்லாஹ்வை எமது உள்ளங்களிலிருந்து அழித்து விடுவதற்காய் அத்தனை ஊடகங்களும் அணிசேர்ந்திருக்கின்றன.
தொடும் தூரத்தில் நீண்டிருக்கும் துப்பாக்கிக் குழலை அறியாது துள்ளி விளையாடும் குழந்தைகளாய் ….நானும் நீயும் சடவாதத்தின் முன் சிரம் தாழ்த்திக்கொண்டிருக்கும் துக்கத்தை வெட்கம் விட்டுச் சொல்கிறேன்.
பொறுத்தது போதும்…
இறந்து கிடந்த உள்ளங்களை அல்லாஹ்வின் நினைவு கொண்டு உயிர்ப்பிப்போம்.
மெல்லிய பனிதூவும் அதிகாலைகளில் அல்லாஹ்வை நினைத்து உயிர் ஏங்கி அழட்டும்…
அறிவைத் தேடுவதிலும் அதனைக்கற்பிப்பதிலும் எமது உள்ளங்கள் தாகிக்கட்டும்.
அல்லாஹ்வின் தீன் இந்தப்பூமியில்நிலை நாட்ட ப்பட முன் எமது இதயங்களில் விதையாகி வேர் விட்டு விருட்சமாய் வளர வேண்டும்.
இனியவனே,
வா
மீண்டுமொருமுறை ஓங்கிச்சொல்வோம்
அல்லாஹு அக்பர்

இனிப்பு சாப்பிடாத எறும்பு


'இனிப்பு சாப்பிடாத எறும்பு' கடந்தாண்டு ரூம் டு ரீட் நிறுவனத்தோடு இணைந்து வெளியிடப்பட்ட சிறுவர் கதை.வயது 5 முதல் 8 வரையிலான சிறுவர்களுக்காக எழுதப்ப்ட்டுள்ள இந்நூலின் முதல் 500 பிரதிகளை ரூம் டு ரீட் நிறுவனமே கொள்வனவு செய்தது.

சிறைக்கம்பிகளில் சிக்கிய ஓர் ஒற்றை நட்சத்திரம்

ஆக்கம் சமீலா யூசுப் அலி

மார்ச் 30,2003
அன்றைய காலையும் அமைதியாகத்தான் விடிந்தது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியிருந்த தன் தாய் வீட்டிலிருந்து ராவல்பிண்டிக்கு செல்ல டக்ஸியில் ஏறுகிறார் டொக்டர் ஆஃபியா.
அவருடன் 7 வயதான மகன் அஹ்மத் 5 வயது மகள் மர்யம்.வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.டொக்டர் ஆஃபியாவின் மடியில் 6 மாதங்களே நிரம்பிய குழந்தை சுலைமான் .
விமானநிலையம் நோக்கிச் சென்ற ஆஃபியா குழந்தைகளுடன் காணாமல் போகிறார். செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies) மடக்கப்பட்டு American Federal Bureau of Investigation (FBI) யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள்.

இதற்கு முன்னதாக ,மார்ச் முழுவதுமே அமெரிக்க ஊடகங்களில் டொக்டர் ஆஃபியா சித்தீகி சம்பந்தமான தகவல்கள் வெளியாகத்துவங்கின.அல்காயிதாவுடன் நெருக்கமானவர் என்ற முத்திரை குத்தி FB இனால் தேடப்படும் நபராக ஆஃபியாவின் புகைப்படங்கள் அமெரிக்க தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பப்பட்டன.

சொல்லி வைத்தாற் போல் ஓரிரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC ,தனது பாணியில் செய்திகளை வெளியிடத்தொடங்கியது.

டொக்டர் ஆஃபியா, உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் எங்கிருந்தாலும் உடனடியாக FBஈ க்கு அறியத்தருமாறும் திரும்பத் திரும்ப அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன.

டொக்டர் ஆஃபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸசூசெட்ஸ் நிறுவனத்தின் உயிரியல் பட்டதாரி.அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் ‘நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானத்தினை’ பாடமாக எடுத்து கலாநிதி பட்டம் பெற்றவர்.தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போது ‘பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்’என்ற ஆய்வுக்காக ‘கரோல் வில்ஸன் விருது’பெற்றவர்.

ஆஃபியாவின் தந்தை பிரிட்டனில் கல்வி பயின்ற ஒரு மருத்துவர்.அவரது மூத்த சகோதரர் ஓர் கட்டடக்கலை நிபுணர்.மூத்த சகோதரி ஒரு பெண்மருத்துவர்.ஆஃபியாவின் கணவர் அமெரிக்க மருத்துவமனையொன்றில் நினைவு மாற்றும் வைத்தியராக பணிபுரிந்தார்.1990 ஆண்டிலிருந்தே ஆஃபியா அமெரிக்காவின் பொஸ்டன் என்ற இடத்தில் அவரது பெற்றோரோடு வசித்து வந்தார்.2002 இல் அவர் பாகிஸ்தான் திரும்பினார்.பொருத்தமான தொழில் கிடைக்காத காரணத்தால் 2003இல் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று சில நிறுவனங்களை நோக்கி தொழில் தேடி விண்ணப்பித்த ஆஃபியா தனக்கான கடிதங்கள் கிடைக்கப்பெறுவதற்காக ஒரு தபால்பெட்டி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.இக்காலப்பகுதியிலேயே அவரை அல்காய்தாவுடன் தொடர்பு படுத்தி அதிதீவிரமாக தேடப்படும் நபர்களில் ஒருவராக அமெரிக்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்யத்துவங்கின.ஆஃபியா மீண்டும் தாயகம் திரும்பினார்.

திடீரென ஆஃபியா காணாமல் போனதை அடுத்து பாகிஸ்தானிய ஊடகங்கள் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்படைந்தன., 2003 ஏப்ரல் 1ந்திகதி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் பைசல் சாலிஹ் , டொக்டர் ஆஃபியா கைது செய்யப்பட்டிருப்பதை அவசர அவசரமாக மறுத்துள்ளார்.

அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2, 2003 இல் வேறொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதே கேள்விக்கு இதே அமைச்சர் அளித்த பதில் வேறு மாதிரியாக இருந்தது.டொக்டர் ஆஃபியாவுக்கு அல் காய்தா தொடர்பிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தார்.
கராச்சியின் பிரபல ஆங்கில இதழில் ஒரு சிறப்புச்செய்தி வெளியானது.
டொக்டர் ஆஃபியா பற்றிய அமைச்சரின் பேட்டி வெளியானதை அடுத்து ஆஃபியாவின் தாயார் தன் மகள் பற்றிய குற்றச்சாற்றை முழுமையாக மறுத்துள்ளார். ஒருவாரத்திற்குப் பின் உளவுத்துறையினர் டொக்டர் ஆஃபியாவின் வீடு தேடி வந்து “உங்கள் மகள் காணாமல் போனதைப் பற்றி நீங்கள் பெரிதுபடுத்துவதால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!" என்று க்டர் ஆஃபியாவின் தாயாரை மிரட்டி விட்டுச்சென்றனர் என்பதே அது.

ஆஃபியாவைப்பற்றி அவரது சக பல்கலைக்கழக மாணவர்கள் சொல்லும் போது
மிக மென்மையான உணர்வுகளும் இரக்க சுபாவமும் கொண்ட ஒரு பெண்மணியாக வர்ணிக்கிறார்கள்.ஒரு கூட்டத்தினிடையே ஆஃபியா தனித்து விளங்கக்கூடிய அளவுக்கு தோற்றமோ அல்லது தனித்துவமோ வாய்ந்தவர் அல்ல,.ஆனால் ஆழ்ந்த இஸ்லாமியப்பற்றும் தஃவா உணர்வும் கொண்டவர்.
தனது ஓய்வு நேரங்களில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிய விளக்க வகுப்பு எடுப்பார்.சிறைச்சாலைக்கைதிகளுக்கும் பாடசாலை பல்கலைக்கழகங்களுக்கும் குர் ஆன் பிரதிகளை தானெ எடுத்துச்சென்று விநியோகிப்பவராகவும் ஒரு சுதந்திரமான பெண்ணாகவும் அவரைக்கண்டதாக அவரது தோழிகள் வர்ணிக்கிறார்கள்.

ஒரு முறை ஆஃபியா தன் பிரதேசப்பள்ளிவாயிலில் பொஸ்னிய முஸ்லிம்களுக்காக உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தாராம்.
அசையாதிருந்த பார்வையாளர்களை நோக்கி’உங்களில் எத்தனை பேருக்கு ஒரு சோடிக்கு மேல் பாதணி இருக்கிறது’என்று கேட்க எல்லாக் கைகளும் உயர்ந்தனவாம்.’உங்கள் பாதணிகளை தருமம் செய்யுங்கள்.பொஸ்னிய முஸ்லிம்கள் கடுமையான் குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்’என் ஆஃபியா சொன்ன வார்த்தைகளின் உணர்வைத்தாங்க முடியாமல் பள்ளிவாயிலின் இமாமும் கூட பாதணியை க்கழட்டினாரம்.
சுப்ஹானல்லாஹ்!!!
டொக்டர் ஆஃபியா தனது குழுவின் இணையத்தளத்தில் எப்படி தஃவா செய்வது என்பது பற்றி எழுதுகிறார்.
“நினைத்துப்பாருங்கள்.எங்களது மிகச்சிறிய ஆனால் தூய்மையான இந்த தஃவா முயற்சி இந்த நாட்டின் மிகப்பெரிய தஃவா இயக்கமாக .சக்தியாக பரிணமிக்கும் ஒரு நாளைக் கற்பனை பண்ணுங்கள்.
இந்த இயக்கத்தின் மூலமாக இஸ்லாத்தினை நோக்கிவரும் ஒவ்வொருவருக்குமாக அல்லாஹ் எங்களுக்கு அளிக்கப்போகும் வெகுமதிகளை எண்ணிப்பாருங்கள்.
பெரிய அளவில் யோசியுங்கள்…திட்டமிடுங்கள்.அல்லாஹ் எங்களுக்கு அதற்கான சக்தியையும் உளத்தூய்மையையும் தந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த பூமி ,அமெரிக்க தேசம் அல்லாஹ்வின் ஆட்சிப்பிரதேசமாய் மாறிவிடும்….”
அல்லாஹு அக்பர்.
சகோதரி ஆஃபியாவின் தூரப்பார்வையும் தளராத உறுதியும் கண்டு பிரமிப்பு ஏற்படுகின்றது.

டொக்டர் ஆஃபியாவிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப் படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப்பக்கம் திரும்பியது.
மீடியாக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறைக் காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலா அளவிற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர் ஜூலை 6, 2008 இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான இவான் ரிட்லி. செய்தி சேகரிப்பு ஒன்றிற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் இச்செய்தியைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து வெளி உலகிற்குக் கொண்டு வந்து, உதவிக்கரங்கள் நீள வேண்டுமென்ற உறுதியான குரல் கொடுத்துள்ளார்.

"அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம்" என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி.

அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தான் விரைந்தார்.
இதே வேளை முஆசம் பெக்
என்ற முந்தைய குவாண்டனமோ சிறைவாசி
தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார்.தான்
இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு
பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண்
பல ஆண் காவலர்களால் கொடுமைப் படுத்தப் படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான்
ஜ ஸ்டிஸ்கட்சியின் தலைவராக உள்ள இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆஃபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.

2008 ஓகஸ்ட் 4ந்திகதி அமெரிக்க அரசு ஆஃபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.ஜூலை 17 ந்திகதி
பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடனும் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா18ந்திகதி ஆஃபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது.அத்தோடுஅமெரிக்க அரசு ஆஃபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று முழுப்பூசணியை சோற்றில் மறைத்தது.
ஓகஸ்ட் 4ந்திகதி ஆஃபியா அமெரிக்காவின் நிவ்யோர்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது.
சக்கரநாற்காலியொன்றில் ஆஃபியா கொண்டு வரப்பட்ட காட்சி அங்கிருந்தோரையெல்லாம் கண் மல்கச்செய்து விட்டது.சிறைச்சாலை சீருடை குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கி.அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையும் மறைத்துக்கொண்ட ஆஃபியாவின்
இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் ஸ்தம்பித்தனர்.

டொக்டர் ஆஃபியா சிறையிலிருந்த போது அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குறைஞர்கள் சொல்கிறார்கள்.
அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக்காயத்தில் இரத்தம் உரைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் சகிக்க முடியாமல் இருந்ததோடு பற்களும் உடைக்கப்பட்டுள்ளனவாம்.மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆஃபியா வின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹுத்தஆலா சகோதரி ஆஃபியாவைப் பொருந்திக் கொள்வானாக!

பெப்ரவரி 23 ,2009 நிவ்யோர்க் நீதிமன்றத்தில் ஆஃபியாவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.டொக்டர் ஆஃபியாவின் வழக்கில் அவர் இன்னும் நிரபராதியாக கொள்ளப்படவில்லை என்பதை 2009 மே வரையிலான இணையச்செய்திகளிலிருந்து அறிய முடிகிறது.அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட கடூழியச்சிறை அவரை அழைக்கும்.
அமெரிக்காவின் பார்வையில் எது குற்றமாகக் கொள்ளப்படும் என்பது நமக்குத் தெரிந்ததே.

அல்லாஹ் போதுமானவன்.
ஆஃபியா சித்தீகி என்ற அன்புச்சகோதரிக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அழகான வாழ்க்கையை கொடுக்கட்டும்.

டொக்டர் ஆஃபியாவுக்காக ஏந்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கரங்களோடு எம் கரங்களும் இணையட்டும்.ஆஃபியா சித்தீகி என்ற நம் சகோதரிக்காய்
உதவ விரும்புவோர் இந்தத் தளத்தை இணையத்தில் சொடுக்குங்கள்.
http://freedetainees.org/

ஓர் இலட்சியப்பெண்ணின் காலடித்தடங்கள்



சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2007ஆம் ஆண்டுக்கானக் கட்டுரைப் போட்டியில் சகோதரியருள் முதல் பரிசை வென்ற 'இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்' என்ற கட்டுரையை வடித்தளித்த சகோதரி சமீலா யூஸுஃப் அலீ (ஹயா ரூஹி) அவர்கள் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி பெண்கள் அணியின் ஊடகப் பிரிவுக்காக, மலேஷிய இஸ்லாமியக் கட்சி (PAS)யின் மேல்மட்ட மத்திய சபை உறுப்பினரும் மலேஷியப் பாராளுமன்ற உறுப்பினருமான Dr. மாரியா மஹ்மூத் அவர்களை நேர் கண்டு 22 மே 2008இல் பதிவு செய்திருக்கிறார். அந்த நேர்காணலிலிருந்து ...



இலங்கை ஜமா அதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சந்திப்பதற்காக தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு, தன் துணைவருடன் இலங்கை வந்திருந்த Dr மாரியா மஹ்மூத் அவர்களை மெல்லியதாகப் பனிதூவும் இளங்காலைப் பொழுதொன்றில் மாவனல்லையில் சந்தித்தோம்.

சகோதரி மாரியா அவர்கள் PAS எனப்படும் Islamic party of Malaysia வின் மத்திய சபை உறுப்பினர். மலேசியப்பாராளுமன்ற அங்கத்தவர். IMWU எனப்படும் சர்வதேச முஸ்லிம் பெண்கள் ஒன்றியத்தின் பிரதி பொதுச்செயலாளர். தொழிலால் ஒரு மருத்துவர். ஆறு பிள்ளைகளின் தாய்.

இவரது கணவர் ஒரு கண்,காது,மூக்கு அறுவைச்சிகிச்சை நிபுணர்.
மென்மையான புன்னகை.
கண்ணை உறுத்தாத வர்ணத்தில் ஹிஜாப் உடை.
ஆர்பாட்டமில்லாத அழகிய ஆங்கிலம்.
தெளிவும் தீர்க்கமும் மிக்க கருத்துகள்.
காண்போரை ஒரே வினாடிக்குள் ஈர்த்துக் கொள்ளும் ஆளுமை.
இது தான் டொக்டர் மாரியா மஹ்மூத்.

ஒரு மனிதனை வடிவமைப்பதில் குழந்தைப் பருவத்தின் பங்களிப்பு மகத்தானது. எவ்வாறான ஒரு குழந்தைப் பருவம் உங்களுக்குக் கிடைத்தது என்பதை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நான் ஒரு பிடிவாதமான குழந்தை (சிரிக்கிறார்). எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் பெற்றோர் பாஸ் கட்சியின் தீவிர அங்கத்தவர்கள். தந்தை ஓர் ஆசிரியர், எனது தாய் மிகக் கண்டிப்பானவர். நாங்கள் முழுமையான இஸ்லாமியச் சூழலில் வளர்க்கப்படோம். என் அன்னை அந்தக் காலத்திலேயே முழுவதும் மூடிய ஹிஜாப் அணிவார். அவர் என்னை ஹிஜாப் அணியுமாறு சொல்லும் போதெல்லாம் பிடிவாதமாய் மறுப்பேன். நான் தொழுவது வழக்கம். ஏனென்றால் என் தாய் கூறுவார் "அல்லாஹ்விடம் எதையாவது கேட்க வேண்டுமென்றால் தொழுது கேட்டால் தான் கிடைக்கும்" என்று. எனக்கு அதிகமான விடயங்கள் தேவைப்பட்டதனாலேயே நான் தொழுகையைத் தொடர்ந்தேன்.

இஸ்லாத்தை நோக்கியத் திருப்பம் எவ்வாறு நிகழ்ந்தது?

எனக்கு 15-16 வயதிருக்கும்போது ஒரு கோடைகால முகாமிற்கு(summer camp ) செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதை ஏற்பாடு செய்த அமைப்பில் அன்வர் இப்ராஹீம் அவர்களும் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். என் வாழ்வில் மகத்தான திருப்புமுனை அதுதான்(உணர்ச்சி வசப்படுகிறார்). உண்மையான இஸ்லாம் என்றால் என்ன? நான் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது அங்குத்தான். தொழுகையில் ஓதும் தூய வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்ததும் அப்போதுதான். ஒவ்வொரு முறை நான் தொழும் போதும் நான் அழுகிறேன். (சில மணித்துளிகள் உடைந்து அழுகிறார்……….) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம் (இறைவா நேரான பாதையைக் காட்டுவாயாக) என்ற வாசகத்தை என் நாக்கு உச்சரிக்கும் போதெல்லாம் அழுகையை என்னால் அடக்க முடிவதில்லை. பெண்கள் பாடசாலையில்தான் படித்தேனென்றாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட அச்சம் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்றேன்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் இரண்டே பேர் தான் ஹிஜாப் …(திரும்பவும் விழியில் நீர் ததும்பத்தொடங்குகிறது) மற்ற மாணவிகள் எங்களைக் கேலி செய்தார்கள்…சிரித்தார்கள். நான் தைரியத்தை இழக்கவில்லை. அது மிகவும் கஷ்டமான காலம். ஆனால், நான் சந்தோசமாயிருந்தேன். பின்னர் சாதாரணதரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ். எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் பயிலச் செல்வதற்கான புலமைப் பரிசு அப்போதே என்னை வந்தடைந்தது.

பல்கலைக்கழக வாழ்வு உங்களை செதுக்கியதா அல்லது சிதைத்ததா?

கெய்ரோ பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரம். பல்கலைக்கழகத்தில் பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். இஸ்லாத்தை பின்பற்றத் தடைகள் இருக்கவில்லை. அப்போதுதான் என் கணவர் என்னைச் சந்தித்தார். என்னைக் குறித்த அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு அப்போது வெறும் 18 வயது தான். அவருக்கு 19 வயது. அவர் மற்ற ஆண்களை விடக் கொஞ்சம் நல்லவராக எனக்குத் தெரிந்தார். என் மனதில் காதல் என்ற ஒன்றே கிடையாது. நான் "சரி, ஆனால் எனது கல்வி முடியும் வரை உங்களைச் சந்திக்கவோ உங்களோடு பேசவோ முடியாது" என்று கூறினேன். "நாம் வீடு சென்று பெற்றோருடன் பேசுவோம்" என்று அவர் அபிப்பிராயப்பட்டார். என் தந்தை மிகவும் கண்டிப்பானவர். ஆனால் திறந்த மனதுடையவர். விடயம் கேள்விப்பட்டதும் என் பெற்றோர் நாங்கள் உடனடியாகத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தார்கள். இஸ்லாம் மிக இலகுவானது. அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றினதும் பின்னணி என்பதை என் தந்தை எனக்குப் புரிய வைத்தார். பல்கலைக்கழக மூன்றாவது ஆண்டில் எனது மகள் பிறந்தாள். அடுத்த ஆண்டு இன்னுமொரு மகன். வாழ்க்கை மிகவும் ஓய்வின்றிக் கழிந்தது. பல்கலைக்கழகத்தில் கல்வியை விடுத்து எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட என்னால் முடியாமல் போனது. குழந்தைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டதால் மருத்துவராக அல்லாது மருத்துவக் கல்லூரியொன்றில் 8 மணி முதல் 4 மணி வரை விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.

உங்கள் அரசியல் நுழைவு திட்டமிடப்பட்டதொன்றா அல்லது தற்செயலானதா?

PAS இரண்டு தளங்களில் செயற்படுகிறது:
1 தஃவா
2அரசியல்
பாஸின் முஸ்லிமா பிரிவுக்கு (Muslimah wing) என்னாலான பங்களிப்பைச் செய்வதற்காகத்தான் கட்சிக்குள் நுழைந்தேன். தலைமைத்துவத்தில் நான் இருக்கவுமில்லை. அரசியல் பற்றி எதுவுமே அறிந்திருக்கவுமில்லை. அதைப் பற்றிய ஆர்வம் கூடக்கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிறைய நிர்வாகப் பயிற்சிகளைப் பெற்றிருந்ததும் நிறுவன ரீதியான திறன்களோடிருந்ததும் முஸ்லிமா பெண்களின் திறன் விருத்தி பயிற்றுவிப்பாளராக இருந்ததும் பின்னாளில் அரசியலுக்கு கட்சி மேல்மட்டம் என்னை உந்துவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம். எது எப்படியாயினும் தலைமைத்துவம் ஒரு பணியைக் கட்டளையிட்டால் எம்மால் அதைச் செய்ய முடியாது என்று மறுக்க முடியாது. இப்படித் தான் என் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

உங்கள் அரசியல் நகர்வை உங்கள் துணைவர் எப்படி எடுத்துக்கொண்டார்?

என் கடைசிக் குழந்தையும் பாடசாலை சென்ற பின்னரே அரசியலுக்குள் நான் காலடி வைத்தேன். தொழிலையும் ராஜிநாமா செய்து விட்டு முழு நேர இஸ்லாமியப் பணியில் என்னை இணைத்துக் கொண்டேன். என் கணவரின் உற்ற தோழி நான்தான். அவருக்கு என்னைத் தவிர வேறு நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அவர் முழுமையாக என்னில் தங்கியிருந்தார். அவர் வீட்டை முற்றாகச் சார்ந்த ஓர் ஆளுமை. கணவரின் அனைத்து வேலைகளையும் நானே என் கைப்படக் கவனிப்பேன். அவரது குடும்ப வியாபாரத்திலும் நான் முழுமையாகக் கைகொடுத்து வந்தேன். நான் ஜமாஆவில் இணைவதற்கும் அவரது ஆதரவு இருந்தது. எனினும் எல்லாவற்றிக்கும் நான் இல்லாத குறை அவரை மிகவும் பாதித்தது. சொகுசுகளை இழக்க வேண்டியும் சில விடயங்களிற்கு இயைந்து போக வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த இரு வருடங்களாக மிகவும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார், அல்ஹம்து லில்லாஹ்!

இலங்கைக்கு வந்திருப்பது இது தான் முதல் முறையா?

ஆம்

இலங்கையைப்பற்றி உங்களுடைய உள்ளம் என்ன சொல்கிறது?

இலங்கையின் காலநிலை மலேசியாவுடையது போலவே இருக்கிறது. மழை அதிகமாகப் பொழிகிறது. பழங்களின் வகைகளைப் பார்க்கும்போது பிரமித்துப்போய் விடுகிறேன். வாழைப்பழத்தில் மட்டுமே எத்தனை வகை? மாவனல்லை மிக அழகான இடம்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இலங்கைப்பெண்களைப் பற்றிய உங்களது கருத்து என்ன?

உண்மையில் எனக்கு அதிகமான இலங்கைப் பெண்களைச் சந்திக்கக் கிடைக்கவில்லை. இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பெண்கள் அணியைச் சார்ந்த சகோதரிகளையே நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது. வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டேன். அவர்கள் அதிர்ந்து பேசாத மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம். நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிகளைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்து லில்லாஹ்!

வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையானவர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டு வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை. இதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?

இந்தக்கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண்கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கினால் ஒருபெண்ணுக்கு மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையா நடந்து கொள்ள வேண்டிய தருணங்களும் வருகின்றன. முக்கியமாக அந்திய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. வயதானவர்களிடமும் குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும். ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம். எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள்ளேன். அவருடன் நான் இருக்கும் போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும் போது உறுதியாக இருந்து என் கருத்துகளை தைரியமாக வெளியிடுவேன்.

எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

ஆம், நிச்சயமாக. இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச் சார்ந்தது என்பது உண்மைதான். எனினும் இன்றைய உலகில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதை விட உண்மை. எல்லாப் பெண்களும் வெளியில் போய் வேலை செய்ய வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் அவளுக்கானப் பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும். தன்னுடைய சொந்தக் கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம். உங்களின் கணவர் உங்களை விட்டுப் பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாக் இருக்கலாம்; அல்லது அவரது மனம் மாறலாம். எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் எம்மால் கூறமுடியாது. அப்படிப் பட்ட இக்கட்டான கட்டங்களில் யாரையும் சார்ந்து நில்லாது குடும்பத்தைக் கொண்டு செல்லக் கூடியப் பொருளாதார பலமும் மனோ வலிமையும் பெண்ணுக்குத் தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம். நாம் அனைவரும் நமது உரிமைகள் யாவை என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை; உங்கள் துணைவரிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை. உரிமைகள் பொறுப்புகளோடு சார்ந்தவை என்பதையும் நாம் மறக்கக்கூடாது. பொருளாதாரச் சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன்.

காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். அதிகமான பெண்கள் மன அழுத்தம் (stress )பற்றி முறையிடுகிறார்கள். ஓர் அன்பான மனைவியாக, அணைக்கின்ற தாயாக, உடல் நலம் பேணும் மருத்துவராக, பாரளுமன்ற அங்கத்தவராக நீங்கள் பல பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நிர்வகிக்கும் ஒரு பெண்மணி. உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?

முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தயங்கக்கூடாது. மனதுக்குள் குமையும் எண்ணங்களை உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது. மனதுள் நினைப்பதை அப்படியே தெரிவித்து விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில் அதைத்தான் செய்கிறேன். திட்டமிட்டு ஒழுங்கு படுத்தல், முன்னுரிமைப் படுத்தல் இவை இரண்டின் அடிப்படையிலும் என் பணிகளை மேற்கொள்கிறேன், அல்ஹம்துலில்லாஹ!

இஸ்லாமிய ஆட்சியை நோக்கிய பயணத்தில் ( Mass media) தொடர்பூடகங்களின் பங்களிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

மிக முக்கியமானது. மீடியா ஒரு சக்தி. நாம் இதனை கவனமாகவும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனுடனும் கையாள வேண்டும். பொது உரை அல்லது ஒரு நேர்காணலை வழங்கும் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து நடக்க வேண்டும். மீடியாவின் நவீனப் போக்குகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ளவதும் நமக்கென தனி மீடியாக்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும்.

உங்களைப் போன்ற வெளிநாட்டுப் பெண் ஆளுமைகளை வரவேற்று சிலாகிக்கின்ற நமது அதே ஆண் சமூகம் தமது பெண்களின் ஆளுமையையும் வெளிப் பிரவேசத்தையும் வரவேற்க இன்னும் பூரணமாகத் தயாராகவில்லை. இது பற்றி….

இது மிகவும் நிதர்சனமான கருத்து. பாரம்பரிய பழைமைவாதச் சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது சமூகத்தில் 50% ஆனவர்கள் பெண்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவர்கள். ஆனால் ஆண்கள் தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு செயற்படுவதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆண்களைப் போலவே பெண்களிலும் தலைவர்கள் உண்டு. எனினும் ஆண்கள் எப்போதும் பெண்களை வழிநடாத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். பெண்களின் திறமையை ஏற்றுக்கொண்டாலும் அவர்களை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு ஆண்களிடம் காணப்படுகிறது.

இந்தப் போக்கு மாற்றமுற வேண்டுமாயின் எவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

ஆண்கள் - அதிலும் குறிப்பாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர், பெண்களைத் தங்களுக்கு சமமாக மதிக்க வேண்டும். பெண்களுடைய விடயங்களை ஓரக்கண்கொண்டு பார்க்காது நடுநிலையுடன் அணுக வேண்டும். சிலர் நாங்கள் பெண்களைப் பயிற்றுவிக்கிறோம் என்று இன்னும் கூறிக்கொண்டிருக்கிறார்கள் - பயிற்றுவிக்கக்கூடிய திறமையுள்ள பெண்கள் இருப்பதையே மறந்து. இலங்கையிலுள்ள எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் அதிஉயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் பெண்கள் இல்லை. இதனை நான் ஒரு பெரும் குறையாகக் காண்கிறேன். இது நிறுவனத்தின் சமநிலையைப் பாதிப்பதாகும். ஆண்கள் தவறு செய்தால் பெண்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்கக் கூடாது.. இது ரசூலுல்லாஹ்வின் வழிமுறை. சில பெண்கள் ஆண்களை விட அழகான கருத்துடையவர்களாக, திறமையான நிர்வாகிகளாக இருக்கக் கூடும். இஸ்லாமிய இயக்கம் இதை விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் ஈகோ பார்ப்பது இஸ்லாமல்ல.

உங்களுடைய இயக்கத்திலும் இந்த நிலை காணப்படுகிறதா?

நான் ஒரு வட்ட மேஜையில் கலந்துரையாடலுக்காக உட்காரும்போது என்னை, கருத்து வெளியிடக் கூடிய ஒருவராகத்தான் எண்ணிக் கொள்கிறேன்; ஒரு பெண்ணாகவல்ல. எமது அமைப்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் இதே நிலை காணப்பட்டது. எமது ஆண்கள் எதிர்கட்சி தலைவியுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசுவார்கள். எமது பெண்கள் ஒரமாக வைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. அல்ஹம்து லில்லாஹ், இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. எமது அதியுயர் மட்ட சூறாவில் பெண்களும் அங்கத்துவம் வகிக்கிறார்கள்.

இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புகளை எடுக்கக்கூடிய தகுதியையும் ஆளுமையையும் உங்களில் ஏற்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி எல்லை மீறிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணிக்கும் போது, அல்லாஹ் எமது குடும்பத்தைக் கவனித்துக்கொள்வான்.

சகோதரி மாரியா இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாபுடன் நடத்தும் இறைநெறிப் போராட்டத்துக்குச் சிறந்த ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் பிரிய மனமின்றி நமது நாளைய நகர்வை நோக்கிய சிந்தனைகளுடன் விடைபெற்றோம்.

-ஷமீலா யூஸுஃப் அலி.

அன்புடன் சுடர் என்னிடம் - 5

5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - உண்மையா ? மிக அழகான கேள்வி.என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..
நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.

நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன – இது உண்மை!அனுபவித்துச் சுவைத்த உண்மை .எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோஅதை நாம் அடைகிறோம்………

என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன ஒரு குடும்பத்தின் வாரிசு………….
அவருக்கு படிப்பில் அபாரத் திறமை……
காலில் செருப்பில்லாது,தேய்ந்த ஒரே சீருடையுடன் பள்ளிக்கு போனவர்.மீதி நேரத்தில் கடையில் எடுபிடி வேலையிலிருந்து தெருவில் கூவி விற்பது வரை ஓடாய்த் தேய்ந்தவர்……….
வாழ்க்கை பற்றி இரவின் தனிமையிலே யோசிப்பாராம் …….`
நானும் ஒரு நாள் வாழ்வில் உயர்வேன்.என் குடும்பம் கெளரவமாய் வாழும்`என்ற கனவு……
இன்று அவர்ஒரு அருமையான குடும்பம்,மிக கெளரவமான வாழ்க்கை,சமூக அங்கீகாரத்தோடு வாழ்கிறார்.இறைவனுக்கே புகழ் அனைத்தும்இப்படி நிறைய வாழும் உதாரணங்களைக் கண்டிருக்கிறேன்.கேட்டிருக்கின்றேன்.உளவியலில் மனதை மூன்றாகப் பிரிப்பார்கள்

1.வெளிமனம்
2.உள் மனம்
3.ஆழ் மனம்
இதில் நாம் வெளிமனதையும் உள்மனதையும் தான் அறிகிறோம்.மிகவும் சக்தி மிக்க ஆழ்மனதின் ஆற்றலை குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம்.ஆழ்மனது ஒன்றை அழுத்தமாக விரும்பி விட்டால் அதை அடைந்தே தீரும்.
அடிக்கடி மனக்கண்களால் கனவு காண்பது ஆழ்மனதின் அடியாழத்தில் தங்குகிறது……..எனவே நிழல்கள் நிஜமாகின்றன……
கனவு காண்பதில் நான் கஞ்சத்தனம் காட்டுவதில்லை எப்போதுமே!!!

சின்ன வயதில் என் அறையில் மாட்டியிருந்த படத்தில் இருந்த`keep on believing ……….Your Dreams can come true` என்ற வாசகத்தை எப்போதுமே என் இதயத்தில் பதித்து வைத்திருக்கின்றேன்……
கனவுகள் ஒரு நாள் நனவாகும்……………..
நிழல்கள் அனைத்தும் நிஜமாகும்………………
வானம் எனக்காய் இறங்கி வரும்………………
நிலவும் பனித்துளி பரிசு தரும்……………………..

அன்புடன் சுடர் என்னிடம் - 4

4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சிலஅனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..
கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..
வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும் இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.
எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.
அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……
உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.
இனியவர்களின் ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….
எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் போட்டுமிதிப்பது
கண்டால் கோபம் எல்லை மீறும்.
எங்களூரில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை இளைஞர்கள் கேலி செய்து சிரிப்பதைக் கண்டு இரத்தம் கொதித்திருக்கிறேன்.
படித்தவர்கள்(?) தங்களை விட தகுதிகள் குறைந்தவர்களை ,மட்டம் தட்டிப் பேசுவதை அல்லது அவமதிப்பதை கண்டால் என்னுள் சினம் பிறக்கும்.
கோபத்தில் இரண்டு வகையிருக்கிறது.

நீர்————————-மணல்
நீர் சூடாக நேரம் எடுக்கும்……………
ஆனால் சூடாகி விட்டால் இலேசில் ஆறாது.
மணல் அவசரமாய் சூடாகி விடும்………
அதே அவசரமாய் ஆறியும் விடும்………
`நான் நீரா ? மணலா ?தெரியவில்லை.`

ஆனால் ஒன்று
அநேகமாய் என் கோபம் கண்ணீரில் தான் கடைசியாய் வந்து தணியும்.

அன்புடன் சுடர் என்னிடம்-3

3. மகள், மனைவி, தாய், தோழி – என்ற வெவ்வேறு நிலைகளில் பெண்மையின் உன்னதம் எந்த நிலையில் உயர்வையும் மன நிம்மதியையும் அடைகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

உண்மையில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வினா…….. பெண்மையின் உன்னதம் உயர்வும் நிம்மதியும் ,இந்த நிலைகளை அடைவதில் அல்ல இந்த நிலைகளில் ஒரு பெண்ணின் மனோபாவம் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
சுயநலமற்ற நேசம்……
உள்ளார்ந்த அன்பு……..
தலைகோதி நெஞ்சின் சிடுக்கெடுக்கும் விரல் நுனிகள்…. இதயம் உடைந்து விம்மும் வேளைகளில் ஆறுதல் பனித் துளிகள் ……
பிழை செய்தால் அன்பு கலந்த கண்டிப்பு…..
எப்போதும் எரிக்காத பார்வை…………
இவை ஒரு பெண்ணின் மனவெளியில் உலவும் வரை அவள் பெண்மையின் உன்னதம் வான் தொடும்.
நிம்மதியின் ஊற்று கரை உடைக்கும். `ஆண் பெண் சமத்துவம்`இன்று நிறமிழந்து பெண் தன் மணமிழந்து நிற்கிறாள்…
கூட்டுக்கும் கூண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டாலே போதும்……………………

பெண்ணின் மென்மை கலந்த மேன்மை உயிர் சிலிர்க்கும்!
பொத்தி வளர்க்கும் ஒரு மகளின் அலை புரளும் பாசம்……….
உயிர் வேரில் ஒவியமாய் சிலிர்க்கும் மனைவியின் மென்காதல்…………
மனம் வலிக்கும் பொழுதுகளில் தலைதடவி தாலாட்டும் தாயின் நேசம்…….
தொடாத தூரத்திலிருந்தாலும் சுவாசத்துடிப்பறிந்த தோழியின் நட்பு……… ஒவ்வொன்றுமே பெண்மையின் உன்னதம் தான்………………..
பெண்ணின் மனோபாவமும்,அன்பின் ஆளுகையும் தான் அதனைத் தீர்மானிக்கும்.

அன்புடன் சுடர் என்னிடம்-2

2. நமது வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று விதியை நீங்கள்நம்புகிறீர்களா இல்லை நமது உழைப்பும் முயற்சியும் மட்டுமே நம்எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று நினைக்கிறீர்களா ?




இறைவன் ஒருவன் இருப்பதை நான் எந்தளவுக்கு உயிரில் சுமந்திருக்கிறேனோ அந்தளவுக்கு விதியையும் நான் விசுவாசிக்கிறேன்.
விதி என்பது என்ன?
இறைவனின் நாட்டமும் மனிதனின் முயற்சியும் சந்திக்கும் தொடுபுள்ளி .
விதிக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்கள் இருந்தாலும் விதியைக் காரணம் காட்டி உழைப்பையும் உற்சாகத்தையும் இழப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இறைவனுடைய நாட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது உண்மை தான்:அந்த ஏட்டில் இருப்பது என்ன என்பது எமக்குத்தெரியாது……………
எனவே
உழைக்கும் போது நம் கை மட்டுமே நமக்குப் பலன் தரும் என்பது போல வியர்வை சிந்த வேண்டும்……….
மனதில் உழைப்பைப் பற்றி நினைக்கும் போது நம் வெற்றிக்கு இறைவன் நாட்டமேயன்றி வேறு காரணம் இல்லை என்ற பணிவும் சார்தலும் வேண்டும்.
உளம் தளராத உறுதியின் இரகசியம் இது என்பது என் கருத்து.
இன்னுமொன்று………
நேற்று நடந்ததை நம் அறிவு விளங்கி வைக்கும்.
நாளை நடப்பது எமது அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஆனால் இறைவன் நேற்றையும் நாளையையும் ஒரே போல் அறிகிறான்.
இது தான் விதியின் அடிப்படை.
நாளை நடப்பதை அறிந்து கொள்ள சோதிடர் தேடி அலைவதிலும்
தினசரிப் பத்திரிகையில் ராசிபலன் பார்ப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கைப் பூவுடன் நடப்போம்.

அன்புடன் சுடர் என்னிடம் 1

அன்பு சகோதரி ஹயா..
இதோ உங்களுக்கான ஐந்து கேள்விகள்.
1. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று இந்த சமூகம் என்றாவது உங்களை நினைக்கவைத்திருக்கிறதா ?

அருமையான பதில்களால் எங்கள் உளம் தொட்டு பின் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்துப் பறக்க வானம் தரும் உங்கள் கேள்விகள் என் கதவு தட்டுகின்றன. நன்றிகள் சகோதரர் ஷாஜஹானுக்கு!!!
இறைவனுக்கே புகழனைத்தும்.
பெண் குழந்தைகளை விரும்பி வளர்க்கும் ஒரு பெற்றோருக்கு நான் பிறந்தது என் பாக்கியம். சூழலில் வேறு பெண்குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டு கொண்டே நான் வளர்ந்தேன். எனக்கு சகோதரர்கள் இல்லை: சகோதரிகள் மாத்திரம் தான். எப்போதாவது ` நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்`என்ற ஆதங்கம் என் உள்ளம் குடைந்ததில்லை. ஒரு ஆணைப் போல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டதுமில்லை. இந்த விடயத்தில் என் பெற்றோரின் பரந்த மனோபாவத்திற்கு நான் நன்றிசொல்லியே ஆக வேண்டும்
ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்மையின் குளிர்ச்சிக்கு தனிதுவமான இடமும் உரிமையும் வழங்கிய உயர் மார்க்கத்தின் வாரிசான பெண் நான். இறைவனுக்கு மட்டுமே அடிபணிவதன் இன்பத்தின் பின்னால் அத்தனை தளைகளும் அடிமைத்தனங்களும் அறுந்து விழுகின்றன. பெண்ணாய்ப் பிறந்ததற்காய் உளம் சிலிர்த்த கணங்களே அதிகம்.
கொள்கையைச் சரியாகப் புரியாமல் குருட்டு வெளிச்சத்தில் குளிர்காயும் சமூகத்தின் ஒரு பகுதியால் நான் காயப்பட்ட உண்மையை நான் மறுக்கவில்லை. பெண் என்பதற்காய் என் பின்னால் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளின் சத்தம் என்காதுகளில் இன்னுமே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
பெண் என்பதால் என் எழுத்தும் வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கப் படும் துக்கத்தை அனுபவித்திருக்கிறேன்……….
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சில கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாத வேதனை உள்ளுக்குள் ஓயாமல் தவிக்கிறது.
தன் உள்ளத்தின் ஓசைகளைத் தெளிவாக முன்வைக்கும் பெண் ,அமைதியும் மென்மையும் கொண்ட குடும்ப விளக்காக இருக்க பொருத்தமற்றவள் என்ற மனோபாவம் கண்டு வெதும்பியிருக்கிறேன்.
பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை
இஸ்லாமிய வரலாற்றின் சாதனை மகளிரை, அறிவின் ஊற்று அன்னை ஆயிஷாவை, வீரத்தாய்உம்மு அமாராவை, எகிப்தியப் போராளி சைனப் கஸ்ஸாலியை பாராட்டும் சமூகம்,அதே பணியை முன்னெடுக்கும் தன் நிகழ்காலச் சகோதரியை வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் அதிர்வு எனக்குள் பதிவாகியிருக்கிறது.
அன்புடன் போட்டிக்கு அனுப்பிய என் இயல் கவிதை என் மன உணர்வுகளின்கண்ணாடி.
முதிர்ந்த இலைகள்

நிலா காயும்
முன்னிரவில்….
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!

என்
ஆன்மாவுக்குள் பீறிட்ட
சின்ன நீரூற்றின்
பிரவாகம்….
கரை உடைக்கிறது!!!

தாகம்!தாகம்!

முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!

தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்…
என் கனவுகள்!!!

ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!

இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல் ஓடும்
வாழ்க்கை….ஒற்றையடிப்பாதையாய்…..

ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்த
பாதங்கள்!

ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!

ஆண் அல்ல
என்பதனால்
அறைந்து சாத்தப்பட்டகதவுகள்!!!

திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி……
துளித்துளியாய்…
தேவைகளில் பெய்!!

பிரார்த்தனை விழிகளின்
ஈரத்தில்…
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்….
ஒரு தாய்ச்சிறகின் கதகதப்பாய்….
என் தொழுகை!!!!

வானம் தொட்டு
விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!

அழுத்தும் சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

எத்தனை இருந்தும்……………….பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை.
புகழ் இறைவனுக்கே!!!

நாம் சிலந்தியா சிக்கியிருக்கும் பூச்சியா?

இணைய‌த்தின் வ‌ருகை ஏற்ப‌டுத்திய‌ புர‌ட்சிக‌ர‌மான மாற்ற‌த்தின் அதிர்வுக‌ளால் உல‌க‌ம் உள்ள‌ங்கைக்குள் வந்து விட்ட‌து. ஒரு க‌ன‌வாய் க‌ண்டு ம‌கிழ்ந்த‌ காட்சிக‌ள் இன்று ந‌ன‌வின் வெளியில் நின்றுலாவுகின்றன‌.
எனினும் மாற்ற‌ங்க‌ளின் தூண்ட‌ல்க‌ளுக்கு போதுமான‌ துல‌ங்க‌லைக் காட்டுவ‌தில் முஸ்லிம் ச‌மூக‌ம் முன்னிற்க‌வில்லை என்ற‌ க‌வ‌லை போதுமான‌ள‌வு இருக்கிற‌து. சில்லரைச் சர்ச்சைகள்,சிடுக்கெடுக்க முடியாத பிரச்சினை முடிச்சுக்கள்,சம்பிரதாயச்சேறுகள்,சின்னத்திரை நாடகங்கள் இவற்றுக்கு மேலால் சிந்திக்கவும் சுயமாய்ச் செயற்படவும் முடியாமல் இருக்கும் நம் பெரும்பான்மை பெண் சமூகம் இணையத்தின் வாசத்தை இன்னும் நுகரவில்லை.

இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஆணிவேர்கள் பழகிப் புளித்துப் போன பழைய முறைகளில் தான் இன்னும் தங்கிக் கிடப்பதான ஒரு பிரமையில் திருப்தியடைகிறோம்.இஸ்லாமியப் புரட்சியொன்று இனி ஏற்படுமானால் அது அறிவின் அடியாழத்தில் எழும் சிந்தனாரீதியான மறுமலர்ச்சியினால் மட்டுமே சாத்தியம்.

அறிவியலும் ஆராய்ச்சிகளும் ஆழ்கடல் தொட்டு விண்மீன்கள் கண் சிமிட்டும் வான் வெளி வரை வியாபித்திருக்கும் ஒரு யுகத்திலே வாழ்கிறோம்.தொழி நுட்பத்தின் சிக்கலானதும் தவிர்க்க முடியாததுமான வலைப் பின்னலில் விரும்பியோ வெறுத்தோ நாம் அனைவருமே சிலந்திகளாகி விட்டிருக்கிறோம்.

இன்றைய இளைய சமுதாயம் சென்ற நூற்றாண்டுகளில் பூமி சுமந்த தங்களது மூத்த தலைமுறைகளிலிருந்து மிகப் பாரிய இடைவெளியை உணர்கிறது.அறிவியல் தொழி நுட்ப ரீதியான முன்னடைவு மட்டுமல்லாது பண்பாட்டு கலாசார ரீதியான பின்னடைவும் இந்த இடைவெளிக்குப் பங்களிப்புச்செய்கின்றன. எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் துடிப்பூக்கம் மிகுந்து காணப்படும் இளைய தலைமுறை கையடக்கத்தொலைபேசி,கணனி,இணையம் ஆகிய காலத்தின் தொழி நுட்ப மாற்றங்களுக்கு விரைவில் இயைபடைகின்றது.
எனினும்,துரதிஷ்டவசமாக மிக அதிகமான இளைஞர்கள் சிகரட்டுக்கும் போதை மருந்துகளுக்கும் அல்ல, இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.’கனியிருப்ப காய் கவர்தற் போல் ’இன்ட நெட் எனும் இணைய வலைப்பின்னலின் கோடானு கோடி நன்மைகளை மறுதலித்து அதன் அத்துமீறும் தீமைகளை அணைத்து கொண்டிருக்கின்றனர்.
காளான் குடை போல் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் ‘இன்டெர் நெட் கஃபே’களில் மணிக்கணக்காய் கணனித்திரையை முறைத்துக் கொண்டிருக்கும் கண்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நமது நாளைகள் பற்றிய நம்பிக்கையை சிதறடிக்கும் பார்வைகள் அவை.
எமது தாய்மார்கள் தமது நம்பிக்கை நட்சத்திரங்கள் கணனியில் கல்வி கற்பதான கற்பனையில் இன்னும் பெருமை பேசிக்கொண்டிருக்கின்றனர். இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வ‌க்கிர‌மாக‌த் தீர்த்துக் கொள்வ‌த‌ற்கான‌ அனைத்து வ‌ச‌திக‌ளும் இணைய‌த்தில் உண்டு என்ப‌து க‌ண்டு ந‌ம்மில் சில‌ர் புருவ‌ம் உய‌ர்த்த‌லாம். நித‌ர்ச‌ன‌த்தில் வ‌ரைய‌றை மீறி க‌ட்டறுந்தோடும் இள‌மையின் வ‌சந்தம் வெறும் காட்டிலெறித்த‌ நிலவாய்ப் போகும் சோக‌ம் விழி தொடுகிறது.
இணைய‌ம் ஒரு திறந்த ஊட‌க‌ம்,தெளிந்த ம‌ன‌தையும் சித‌ற‌டிக்கும் ச‌க்தி கொண்ட‌து என்ப‌தை அறியாததால் அப்பாவி அன்னைய‌ர் ச‌மூக‌ம் ஏமாற்ற‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து.தன‌க்காக‌ வேண்டாம்,தான் சுமந்த உயிரின் மிச்ச‌ம் எங்கே சென்று கொண்டிருக்கிற‌து என்ப‌தை அறிய‌வாவ‌து இணைய‌ம் ப‌ற்றிய‌ புரித‌ல் பெண்க‌ளுக்குத் தேவை என்ப‌து ம‌றுக்க‌ முடியாத‌ உண்மை.

இணையத்தின் மறுபக்கத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு அறிவுச்சுரங்கம்.கேட்டதைக் கொடுக்கும் அலாவுதீன் பூதம்.அள்ள அள்ள நீர் சுரக்கும் ஊற்றுக்கண்.இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பது பலருக்கு இனிப்பான செய்தி.
நம் உள்ளம் கவர்ந்த உரைகளை,கருத்தாழம் மிக்க பாடல்களை,ஆச்சரியமூட்டும் அசையும் காட்சிகளை,மனம் கிளறும் ஒளிப்படங்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
தமிழ் பத்திரிகைகளின் சுடச்சுட செய்திகளின் மொருமொருப்பு…
வித்தியாசமான ஆர்வப்பகிர்வுகளுக்கான ஏராளமான குழுமங்கள்….
எழுத்துதிறனை பட்டை தீட்டி ஒளிரச்செய்யும் வாசிப்பார்வத்துக்கு நீரூற்றி வளர்க்கும் ஏராளமான படைப்பாளிகளின் கவிதை,கட்டுரை,சிறு கதை, நேர்காணல்கள் தாங்கி வரும் இணைய இதழ்கள்….
யாரிடமும் கேட்க முடியாத சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ,மார்க்க விளக்கங்களை எம்மை அறிமுகப் படுத்தாமலே கேட்டறிக்கூடிய வசதி வாய்ப்புகள்…
தொடராமல் போன மேற்படிப்பைத் தொடரவும் ,புதுப்புது பாட நெறிகளில் இணைந்து புத்துணர்வு கொள்ளவுமான சூழலை அறைக்குள்ளே ஏற்படுத்தித் தரும் இணையப் பல்கலைக்கழகங்கள்….
துறை ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் இணையப்பக்கங்கள்…
நோய்கள்,அவற்றுக்கான பல்வேறுவிதமான மருத்துவ வழிகாட்டல்கள்,உளவியல்,உளவளத்துணை சம்பந்தமான தெளிவூட்டல்கள் இணையத்தில் தாராளமாய் காணக்கிடைக்கின்றன
இலட்சக்கணக்கான சமையல்,அழகுக்குறிப்புக்கள்…
.உல‌கின் எந்தப்பாக‌த்திலிருந்தும் உற‌வு வ‌ள‌ர்க்கும் உப‌யோக‌மான‌ இணைய‌ ந‌ட்புக்க‌ள் என வ‌லை விரிகிற‌து……
எமது முஸ்லிம் சமூகம், அதிலும் குறிப்பாக பெண்கள் சமூகம் இணையம் குறித்த போதுமான விழிப்பைக்கூட வைத்திருக்கவில்லை என்பது கவலை தரும் செய்தி. அறிவு ஜீவிகளாக அடையாளம் காணப்படும் ஆசிரியைகள்,வைத்தியர்கள்,துறை சார் பெண்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.
இந்த நூற்றாண்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமென்றால் தொழி நுட்ப வளர்ச்சி பற்றிய புரிதலின்றி அது வெறும் ஒரு கனவு மாத்திரமே.வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைகளில் தவிக்கும் பெண்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம்.கற்கவும்,கற்பிக்கவும்,கற்றதை செயற் படுத்தவும் வீட்டிலிருந்தே தொழில் புரியவும் தேவையான ஒரு களத்தை நாம் ஏன் மறுதலித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் சிலந்தியா? சிக்கியிருக்கும் பூச்சியா?சிந்திப்போமா?
நன்றி அல்ஹஸனாத் செப் 2007

புதிதாக சிந்திக்கக் கூடாது!

நேற்றிரவு மின்சாரம் அறுந்து போனது….அடிக்கடி கிண்கிணுக்கும் அலைபேசியை அறையிலேயே வைத்து விட்டு வெளியே வருகிறேன்.லேசாக மழை தூரல்……சட்டென்று இறுகிப் போன முகத்தை ஒரு புன்னகை தொட்டுச்செல்கிறது.
இறைவனைப் புகழ்ந்துகொள்கிறேன்.
இறைவாமாற்றங்களை ஏற்க மறுக்கின்ற குறுகிய மனத்தை எனக்குத் தந்து விடாதே என் மனம் உள்ளுக்குள் இருகரமேந்துகிறது.
புதிதாக ஒன்றை செய்ய முடியாது. சிந்திக்கக் கூட முடியாது.அது சரிவராது…வழமையானபடியே செய்வோமே…இவ்வளவு காலம் இதைத் தானே செய்தோம் இப்படியானவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது பெரிய சவால்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்புக்கடிததைத் தயாரிக்க நேரிட்டது.
நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிகழ்ச்சி. சம்பிரதாயமான அலுவலகக்கடிததிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு அமைப்பில் கடிதத்தை வடிவமைத்தோம். கடிதம் அழகாக வந்திருக்கிறது என்ற கருத்தில் பலர் இருக்க அந்தப் பிரிவின் பொறுப்பாளர்கள் சிலர் இப்படி வந்திருக்க தேவையில்லை என்று அபிப்பிராயப்படார்கள். அவர்கள் அதற்கு சொன்ன காரணம் மிகவும் வருத்தத்தைத் தந்தது. எல்லாப் பிரிவுகளின் கடிதங்களும் ஒரே விதமாக இருக்க இந்தப் பிரிவுக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் வேண்டியிருக்கிறது? வாழ்ந்து கொண்டிருப்பது கணிப்பொறி யுகத்தில்.ஒரு பிரிவின் செயற்பாடுகளின் தரம் அதிகம் என்றால் அதற்கேட்ப மற்றப் பிரிவுகளின் நடவடிக்கைகளின் தரத்தையும் அதிகரிப்பது தானே ஆக்கபூர்வமானது.
இப்படியான மனோநிலைகள்.
ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது என்றாலும் அது ஒரு பெரிய சுற்று சுற்றி விட்டுத் தான் சம்பந்தப்பட்டவர் காதுகளுக்கு வரும். ஏனோ தெரியவில்லை. சிலருக்கு சொல்வதை முகத்துக்கு முன் சொல்லத் தைரியமில்லை.
மனசில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த தூரத்து நட்சத்திரம் பதில் சொல்லிவிட்டது.
மீண்டும் புதிய உற்சாகத்துடன் வீட்டினுள் நுழைந்தேன்.
தையெல்லாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா? ஒரு நிறுவனம் என்றால் பலதரப்பட்டவர்களிருப்பார்கள். இணங்கித் தான் ஆக வேண்டும். அதிலும் வயதில் மூத்தவர்களிடம் சற்று தாழ்ந்து போனால் தான் அவர்களுக்கும் திருப்தி.

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்