அன்புடன் சுடர் என்னிடம் 1

அன்பு சகோதரி ஹயா..
இதோ உங்களுக்கான ஐந்து கேள்விகள்.
1. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று இந்த சமூகம் என்றாவது உங்களை நினைக்கவைத்திருக்கிறதா ?

அருமையான பதில்களால் எங்கள் உளம் தொட்டு பின் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்துப் பறக்க வானம் தரும் உங்கள் கேள்விகள் என் கதவு தட்டுகின்றன. நன்றிகள் சகோதரர் ஷாஜஹானுக்கு!!!
இறைவனுக்கே புகழனைத்தும்.
பெண் குழந்தைகளை விரும்பி வளர்க்கும் ஒரு பெற்றோருக்கு நான் பிறந்தது என் பாக்கியம். சூழலில் வேறு பெண்குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டு கொண்டே நான் வளர்ந்தேன். எனக்கு சகோதரர்கள் இல்லை: சகோதரிகள் மாத்திரம் தான். எப்போதாவது ` நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்`என்ற ஆதங்கம் என் உள்ளம் குடைந்ததில்லை. ஒரு ஆணைப் போல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டதுமில்லை. இந்த விடயத்தில் என் பெற்றோரின் பரந்த மனோபாவத்திற்கு நான் நன்றிசொல்லியே ஆக வேண்டும்
ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்மையின் குளிர்ச்சிக்கு தனிதுவமான இடமும் உரிமையும் வழங்கிய உயர் மார்க்கத்தின் வாரிசான பெண் நான். இறைவனுக்கு மட்டுமே அடிபணிவதன் இன்பத்தின் பின்னால் அத்தனை தளைகளும் அடிமைத்தனங்களும் அறுந்து விழுகின்றன. பெண்ணாய்ப் பிறந்ததற்காய் உளம் சிலிர்த்த கணங்களே அதிகம்.
கொள்கையைச் சரியாகப் புரியாமல் குருட்டு வெளிச்சத்தில் குளிர்காயும் சமூகத்தின் ஒரு பகுதியால் நான் காயப்பட்ட உண்மையை நான் மறுக்கவில்லை. பெண் என்பதற்காய் என் பின்னால் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளின் சத்தம் என்காதுகளில் இன்னுமே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
பெண் என்பதால் என் எழுத்தும் வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கப் படும் துக்கத்தை அனுபவித்திருக்கிறேன்……….
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சில கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாத வேதனை உள்ளுக்குள் ஓயாமல் தவிக்கிறது.
தன் உள்ளத்தின் ஓசைகளைத் தெளிவாக முன்வைக்கும் பெண் ,அமைதியும் மென்மையும் கொண்ட குடும்ப விளக்காக இருக்க பொருத்தமற்றவள் என்ற மனோபாவம் கண்டு வெதும்பியிருக்கிறேன்.
பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை
இஸ்லாமிய வரலாற்றின் சாதனை மகளிரை, அறிவின் ஊற்று அன்னை ஆயிஷாவை, வீரத்தாய்உம்மு அமாராவை, எகிப்தியப் போராளி சைனப் கஸ்ஸாலியை பாராட்டும் சமூகம்,அதே பணியை முன்னெடுக்கும் தன் நிகழ்காலச் சகோதரியை வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் அதிர்வு எனக்குள் பதிவாகியிருக்கிறது.
அன்புடன் போட்டிக்கு அனுப்பிய என் இயல் கவிதை என் மன உணர்வுகளின்கண்ணாடி.
முதிர்ந்த இலைகள்

நிலா காயும்
முன்னிரவில்….
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!

என்
ஆன்மாவுக்குள் பீறிட்ட
சின்ன நீரூற்றின்
பிரவாகம்….
கரை உடைக்கிறது!!!

தாகம்!தாகம்!

முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!

தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்…
என் கனவுகள்!!!

ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!

இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல் ஓடும்
வாழ்க்கை….ஒற்றையடிப்பாதையாய்…..

ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்த
பாதங்கள்!

ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!

ஆண் அல்ல
என்பதனால்
அறைந்து சாத்தப்பட்டகதவுகள்!!!

திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி……
துளித்துளியாய்…
தேவைகளில் பெய்!!

பிரார்த்தனை விழிகளின்
ஈரத்தில்…
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்….
ஒரு தாய்ச்சிறகின் கதகதப்பாய்….
என் தொழுகை!!!!

வானம் தொட்டு
விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!

அழுத்தும் சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

எத்தனை இருந்தும்……………….பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை.
புகழ் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்