கடந்த வாரம் ஒரு ஓய்வான ஞாயிற்றுக்கிழமை.
வீட்டில் யாரும் இல்லை.
வழமையான பரபரப்புக்களின்றி மெதுவாக சமைப்போம் என்ற எண்ணத்துடன் அம்பையின்'காட்டில் ஒரு மான்' நூலை ஏழாவது தடவையாக மேய்ந்து கொண்டிருந்தேன்.
வாசலடியில் சின்னதாய் சந்தடி.
பெரியம்மா அவரது மகள்களிருவர் சாச்சியின் மகள் என வரவேற்பறை நாற்காலிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகின.
கொஞ்சம் கதை,நிறைய சிரிப்பு இவற்றோடு சூடான தேநீர்.
மதியம் 12 மணியும் தாண்டி விட்டது.
பெரியம்மா போக வேண்டும் என்று எழுந்து விட்டார்.
"கொஞ்சம் நில்லுங்க..அவசரமா சமையல் செய்கிறேன்.ஆனா ஒன்று கருவாடும் போஞ்சியும் தான் பிரிஜ்ல இருக்கு...பரவாயில்லையா..."தயக்கத்துடன் தான் கேட்டேன்.
'ஓ அதுக்கென்ன.....நல்லம் தானே"
பின்னர் ஒருவர் தேங்காய் துருவ இன்னொருவர் வெங்காயம் நறுக்க் எங்கள் சின்னச் சமையலறை களைகட்டியது.
கருவாடு ஆக்குவதில் எனக்கு பெரிய அனுபவம் கிடையாது.கருவாட்டை சின்னதாக அரிந்து பொரிப்பேன்.அல்லது எண்ணெய்யில் கிழங்கும் தக்காளியும் சேர்த்து வதக்கி வைப்பேன்.
மாலைதீவிற்கு சென்ற குடும்ப நண்பரொருவர் வரும் போது கூடவே வாங்கி வந்த கருவாடு இருந்தது.பெரியம்மா கருவாட்டை முகர்ந்து பார்த்து விட்டு புதிதாய் இருப்பதாய் சொன்னார்.
காலையில் சமைத்த பருப்புக்கு இரண்டு உருளைக்கிழங்குகளை வெட்டிப் போட்டு ஆணத்தை கூட்டினேன்.ரைஸ் குக்கரில் சோறு 'சொத சொத'வென்று கொதித்துக்கொண்டிருந்தது.
போஞ்சிக்காயை முழுவதுமாக வேக விடாமல் லேசான பச்சை நிறமாக இருக்கும் போதே தேங்காய்பால் ஊற்றி இறக்கினோம்.
கருவாட்டை ஆக்கும் பொறுப்பை பெரியம்மாவிடமே ஒப்படைத்தேன்.
பெரியம்மாவின் சமையல் சுவையாக இருக்கும்.
கருவாட்டை கொதிக்கும் நீரில் கழுவி தோல் அகற்றி துண்டுகளாக்கினார்.
தக்காளி.வெங்காயம், பச்சைமிள்காய், கறிவேப்பிலை, கொஞ்சம் புளி, மஞ்சள் தூளும் மிளகாய்ப்பொடியும் கலந்து பாலில் வேக வைத்து கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றினார்.
'
"என்ன மணம்...."கருவாட்டுக்குழம்பின் வாசம் நாசி துளைத்து வயிற்றில் அடங்கியிருந்த பசியைக் கிளறிவிட்டது.
நிலத்தில் பெரியதொரு விரிப்பை விரித்து எல்லோரும் அமர்ந்தோம்.
தட்டில் சோற்றை இட்டு கருவாட்டுக்குழம்பை ஊற்றிப்பிசைந்து வாயில் இட்டுக்கொண்ட போது ....
........................................................
சொல்ல வார்த்தைகள் இல்லை.
அப்படி ஒரு சுவை.
நெஞ்சில் நிற்கின்ற சுவை..............1
Posted by
Anonymous
Wednesday, August 12, 2009
Labels: சுவை
1 comments:
Vaasikkum pothe echil uruthu... :-)
Post a Comment