காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது யார்?

காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது பெண்கள் தான்.

இங்கு காதல்,குளம்,கல்லெறிதல் பற்றியெல்லாம் வித்தியாசமான கருத்துக்கள்,பார்வைக்கோணங்கள் முன்வைக்கப்பட்டன.

கல்லெறிந்தால் குளம் கலங்கும்....
அலைகள் உருவாகும். எறிந்த கல் அப்படியே ஆழத்துக்குப் போய் விடுவதுமுண்டு.அலைகளை உருவாக்கி ரசிப்பதுமுண்டு. கற்கள் அளவு ,வீச்சு ,நிறை இவற்றினால் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
குளத்தின் கொள்ளளவுக்கும் அதிர்வுக்கும் இடையில் கூட தொடர்பிருக்கிறது. சரி சுற்றி வளைத்து மூக்கு தொடாமல் விடயத்துக்கு வருகிறேன்.

`பெண் நாணமுடையவள் அவள் எப்படி காதல் குளத்தில் கல்லெறிவாள்` என்று உள்ளத்தில் கேள்வி, தூண்டில் முள்ளாய் தைக்கிறதா? பெண்ணின் நாணமே ஒரு கல் தான் என்பது என் கருத்து. இறைவன் பெண்ணைப் படைக்கும் போதே இத்தகைய இனிய கற்களை வைத்திருக்கிறான்.

காதல் என்றால் கல்யாணத்துக்கு முன் வரும் ஒன்று என்றே கருதி வருகிறோம்.திருமணத்துக்குப் பின்னும் அன்பும் இனிமையும் தொடருமானால் அது தான் காதல். தன் இனிய துணைவனின் காதல் குளத்தில் பெண் எறியும் கற்களைப் பாருங்கள். துடுக்குத்தனம்,மென்மையான பேச்சு,ஊடல், அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு இவையெல்லாம் என்ன?

இவற்றால் குளம் அதிராதா? பெண்ணின் கோபமும் அலட்சியமும் கூட ஆண் மனதில் அலையாக மாறி அலைக்களிப்பதை நாம் கண்டதில்லையா? ஒன்று...... பெண்கள் வேண்டுமென்றே கல்லெறிவதும் உண்டு. தங்களை அறியாமலே கல்லெறிவதும் நடக்கிறது. அவளே ஒரு கல்லாயும் சமயங்களில் இருப்பதுண்டு. பெண்ணின் பார்வை -அது தான் பாராங்கல். நிலவின் குளிர்ச்சியோடு வரும் அந்த பார்வை ஆண்மனதில் ஆயிரம் மின்னல் அதிர்வு தருகிறது. பார்வை தாழ்த்தி போனாலும் உடலின் அசைவுகளும் சங்கீதமான குரலும் காதல் குளத்தில் கல் வீசிச்செல்கின்றன.

பெண் தன் உடல் மறைத்து உடையணிந்தாலும், அந்நிய ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்வை தாழ்த்துமாறு சொல்லுகிறது இஸ்லாம்.இதன் பின்னணியில் பெண்,அவள் அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்தால் கூட அவளே ஒரு கல்லாய் இருக்கிறாளோ என்று எண்ணத்தோன்றுகிறது.எனவே கல்லெறிவது ஒன்றும் பெண்ணின் தவறு அல்ல அது அவளின் படைப்பின் நேர்த்தி.பெண் நினைத்தால் எறியும் கல்லின் வீச்சத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்...
அவ்வளவு தான்.

இங்கு நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். நான் படித்தது புகழ் பெற்ற முஸ்லிம் கலவன் பாடசாலை ஒன்றில்.
வகுப்புக்கள் ஆண்கள்,பெண்களுக்கு வேறு வேறாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் சலவை செய்து அழுத்திய வெள்ளுடைகளோடு தான் மேல்வகுப்பு மாணவிகள் வருவார்கள்.ஆனால் ஆண்களோடு பேசுவது மிகக் குறைவாக அல்லது இல்லை எனலாம்.

அப்படியென்றால் ஏன் உடையிலும் நடையிலும் அத்தனை கரிசனை? கொழும்பில் சர்வதேச பெண்கள் பாடசாலை ஒன்றில் ஒரு வருடம் தங்கிப் படித்த போது விடை கிடைத்தது.
அங்கு நான் அழுத்திய சீருடையோடு அழகாக செல்வேன். ஆனால் என் சக தோழிகள் எந்தக் கவனமும் இல்லாமல் ஏனோ தானோ என்று வருவார்கள்.இத்தனைக்கும் அங்கு படிக்கும் மாணவிகளில் பெரும்பான்மையினர் நாகரீகம் துள்ளி விளையாடும் மேல்தட்டு வர்க்கத்தினர்.
வகுப்பு முடிந்ததும் யாரும் பொது பஸ்களில் செல்வதில்லை.சொந்த வாகனம் வரும்.அங்கு ஒரு ஆண் ஆசிரியரோ,கடைநிலை ஊழியரோ கூட இல்லை.எனவே அலங்காரத்தைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதுமில்லை.
இதே தோழிகள் பாடசாலைக்கு வெளியே அலங்காரமில்லாமல் செல்வதில்லை.பெண்கள் கவர்ச்சியான உடை அணிவதன் நோக்கங்களில் ஆண்களின் கவன ஈர்ப்பும் முக்கிய இடம் பெறுகிறது.எனவே இங்கு எது கல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே விவாதம் முடிவுக்கு வந்து விடும்.

காதல் குளத்தில் எறியப்படும் கல்லை விட எறியப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வலைகளே கண்ணுக்குப் புலப்படும்.பெணகள் கல்லை எறிந்து விட்டு ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பார்கள்;ஆண்களின் உசுப்ப பட்ட மனக்குளத்தின் அதிர்வலைகளே எல்லோருடைய வெற்றுக் கண்களுக்கும் புலப்படும்.உடனே `காதல் குளத்தில் கல்லெறிபவர்கள் ஆண்களே ` என்று முடிவுக்கு வந்து விடுவோம்.

பறவைகளிலும் மிருகங்களிலும் ஆண்வர்க்கத்துக்குத் தான் அதிக கவர்ச்சியும்,காதல் குளம் வீசக் கற்களும் இறைவன் கொடுத்திருக்கிறான்.இதனை யாரும் மறுக்க முடியாது.ஆனால் மனித வர்க்கத்தில் இதற்கு நேரெதிராய் பெண்ணினத்துக்கே அசாதாரண ஈர்ப்புச்சக்தியும் உளம் கலக்கும் கற்களும் தரப்பட்டிருக்கின்றன.இது அறிவியல் உண்மை.

தலை நிமிர்ந்து யாரையும் பார்க்காத பெண்ணால் குளம் அதிர்ந்த ஆண் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் எதிரணித்தோழர்கள் தலைப்பைப் புரிவதில் தவறு விட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
வரலாறு நெடுகிலும் காதல் குளத்தில் கல்லெறிந்த பெண்களையும் அவர்களால் குளம் அதிர்ந்த ஆண்களையும் நிறையவே காணலாம்.

கற்கள் அதிர்வதில்லை.
கற்பட்ட குளமே அதிர்கிறது.
பெண் காதலை முதலில் சொல்வதில்லை,ஆனால் அவளது அங்க அசைவுகள் அனைத்தும் இதை சொல்லாமல் சொல்கின்றன.இனி காதல் குளம் கலங்குகின்றது. ஆண் காதலை சொற்களால் தெளிவாக வெளிப்படுத்துகிறான்.
குளத்தில் எறியப்பட்ட கல் அமைதி காக்கிறது.

0 comments:

Post a Comment

என் நிறம்...

பெயர்: சமீலா யூசுப் அலி

இடம்: இலங்கை

கல்வி: MA in Mass Communication and Journalism
(Madurai)
MA in Sociology(Reading) University of Peradeniya.

இலட்சியம்: அமைதியான உள்ளம் அதனூடாக
அமைதியானஉலகம்