.
‘பயங்கரவாதத்துக்கெதிரான போர்’ என்பது ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் நமக்கெல்லாம் பரீட்சயமான ஒரு விடயம்.எனினும் பயங்கரவாதத்துக்கான அமெரிக்காவின் போருக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் என்ன தொடர்பு என்ற வினா நம்மில் அநேகரிடம் முகிழ்க்கலாம்.இந்த விடயம் எமக்கு முற்றிலும் புதிய விடயமாக இருந்தாலும் இது சர்வதேச ரீதியில் நீண்டகாலமாக பேசப்பட்டுவருகின்ற ஒரு தலைப்பாகும்.
உண்மையில்“பயங்கரவாதத்துக்கெதிரான போர்” (war against Terrorism) என்பது என்ன? கருத்தியல் ரீதியாக சமூகவியலாளர்கள் இதனைப்பின் வருமாறு அடையாளப்படுத்துகின்றனர்.
“ 2001 செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுரத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்லாமியத் தீவிரவாதத்தை இந்தப் பூகோளத்திலிருந்து துடைத்தெறிதலும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக அரசியல், சிந்தனை, ஆயுதம் மற்றும் முடியுமான அனைத்து வழிகளினூடாக செயற்படுதல்”
பயங்கரவாதத்திற்கெதிரான போர் அல்லது பயங்கரவாதத்துக்கெதிரான பூகோள யுத்தம் (Global war against terrorism) எனச் செல்லமாக அழைக்கப்படும் இனிப்புத்தடவிய விஷம் தான் இந்தக்கூட்டுப்பயங்கரவாதம்.
இந்தப்போரில் அமெரிக்காவினதும் இங்கிலாந்தினதும் தலைமையில் அவற்றின் நேச நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தன,
அமெரிக்க ,இங்கிலாந்து பிரஜைகள் மற்றும்,அணிசேரும் தேசங்களில் வாழ் மக்களைப் பாதுகாப்பதும்; அவர்களது பொருளாதார நலன்களை பெற்றுக்கொடுப்பதும் தான் இந்தப்பாரிய போர் முன்னெடுப்பின் முக்கிய இலக்காக அடையாளப்படுத்தப்பட்டது.
ஆனால் வெளிச்சத்துக்கு வராத உண்மை என்னவெனில் அமெரிக்காவின் தலைமையில், மேற்குலகும் இன்னும் சில உலகநாடுகளும் இணைந்து தமது பொருளாதார நலன்களையும் பலத்தையும் மையப்படுத்தி உலகில் ஏக ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்காக மேற்கொண்ட ஒரு சுயநலமான சதித்திட்டம் தான் இந்த பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்.
அதில் முஸ்லிம் உலகும் முஸ்லிம்களும் ஒரு பொது எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டதை விடவும், இஸ்லாமும் இஸ்லாமிய தீவிரவாதமும் தான் பொது எதிரிகளாக அறிமுகப்படுத்தப்பட்டன.
உண்மையில் பயங்கரவாதத்துக்கெதிரான போர் மிகவும் விசித்திரமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதை ஆழமாக இதனை நோக்கும் ஒருவரால் கண்டுகொள்ள முடியும்.இந்தப்போரின் பின்னணியிலுள்ள சில அம்சங்கள் சிந்தனைக்குரியவை.
1.
மேற்குலகு தான் சார்ந்திருக்கின்ற மக்களைத் திருப்திப்படுத்த வேண்டும் அப்போது மட்டும்தான் மேற்குலகத்தலைமைகளால் தமது அரசியல் பொருளாதார எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும்.
2.
உலகின் மீதான ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்தல்.
இது சாதாரண காரணிகளால் நியாயப்படுத்தி சாதிக்கப்படக்கூடிய ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதான விஷயம் அல்ல.உலகத்தை தம் பிடிக்குள் கொண்டு வர ஒரு அதிசிறப்பு வாய்ந்த திட்டம் தேவை. கிறிஸ்தவர்களாலும் யூதர்களாலும் ஏன் நாஸ்திக சடவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியதாக இதனை மிக அழகாக வடிவமைக்க வேண்டும் அப்போது மட்டுமே உலகின் பரந்த ஆதரவு தமக்குகிடைக்கும் என்பது அமெரிக்கா சார் மேற்குலகின் உறுதியான நம்பிக்கை.எனவே இதற்கு சரியான இலக்கு இஸ்லாம். உலகில் மிக அதிகமாக தப்பாகப் புரியப்பட்டுள்ள மார்க்கம் இஸ்லாம் என சமூகவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன பூகோளத்தை மேற்கின் உள்ளங்கைக்குள் கொண்டு வர சரியான துருப்புச்சீட்டு குறித்த சமூகங்களால் காலாகாலமாக வெறுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வந்த இஸ்லாம் என்பது மேற்கின் கணிப்பீடு.
3.
தமது செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அமைப்புக்களை தந்திரோபயாமாக அழித்தொழித்தல்.
ஏற்கனவே உலகில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்களை பகைத்துக்கொள்வதற்கான அதி முக்கியமான தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.ஆனால் அவர்களைப்பகைத்துக்கொண்டு நேரடியாக யுத்தமொன்றினை அவர்கள் மீது தொடுத்தால், தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் முஸ்லிம்களுடைய நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்படும், அவ்வாறு அது மாற்றியமைக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படப்போவது வேறெதுவுமல்ல,மேற்குலகின் நிகழ்ச்சி நிரல் தான். எனவே தமது திட்டங்களுக்கு இசைவாக இயங்கும் ஒரு எதிரி தயார்பண்ணப்படவேண்டும் என்பதை மேற்குலகு நன்கு உணர்ந்திருந்தது,
அமெரிக்காவின் விசுவாசத்துக்குரிய “டிம் உஸ்மான்” (ஒஸாமா பின் லாதின்) என்பவரின் தலைமையில், அல்கைதா என்னும் முஸ்லிம் பெயர்கொண்ட அமெரிக்க முகவரகம் உருவாக்கப்பட்டது. இன்று வரை அந்த விசுவாசத்துக்குரிய எதிரி அமெரிக்கா வரைந்த கோட்டை மீறவில்லை.உஸாமா பின் லாதினை ஹீரோவாகக் கொண்டாடும் எமக்கு இதனை ஜீரணிக்க சற்றுக் கஷ்டமாய்த் தான் இருக்கும்.அல்கைதா அமைப்பில் இணைந்த உண்மையான முஜாஹிதுகள் பலர் அமெரிக்காவின் சதி பற்றி அறிந்து கொள்லாமலேயே களத்தில் போராடி வீரமரணமடைந்தனர்:இன்றும் போராடி வருகின்றனர்.இந்த உண்மையினை முழுமையாகத் தெரிந்தவர்கள் குவாண்டனாமோ போன்ற அமெரிக்க தடுப்புமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள்.
http://www.orlingrabbe.com/ என்னும் இணையத்தளத்தில் by J. Orlin Grabbe எழுதியுள்ள ஆக்கத்தில் இந்த விடயம் குறித்த மேலதிக விளக்கங்களைப்பெற முடியும்.
4.
மத்தியகிழக்கு மற்றும் ஏனைய வளமிக்க தேசங்களை மறைமுகமாக சூறையாடுதல்.
மத்தியகிழக்கிலும் ஏனைய முஸ்லிம் தேசங்களிலும் பரந்துவிரிந்து கிடக்கின்ற இயற்கை வளங்களை இலகுவாகப்பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குறித்த பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை வலுவாகவைத்துக்கொள்ளும் தேவை அவர்களுக்கு இருந்தது. உலகின் 70% ஆன எண்ணெய் ஒதுக்குகள் முஸ்லிம் நாடுகளிலேயே இருக்கின்றன.உலகின் மொத்த இயற்கை வாயு ஒதுக்குகளில் 49% ,முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலேயே அமைந்துள்ளது.
(நன்றி U.S. Geological Survey & Oil and Gas Journal)அது மட்டுமல்ல
யுரேனியம் உற்பத்தியில் 21% முஸ்லிம் நாடுகளிலிருந்தே பெறப்படுகின்றன.மேற்கில் நுகரப்படும் விவசாய உற்பத்திகளில் 40% ஆனவை முஸ்லிம் உலகத்தில் இருந்தேயாகும்.சுருங்க சொன்னால், இன்று பூகோள உருண்டை சுழல்வது முஸ்லிம் தேசங்களில் பொதிந்து கிடக்கின்ற வளங்களினாலாகும்.
மேற்படி முக்கிய சித்தாந்தங்களில் இருந்தே இந்தத் தலைப்பை நாம் அணுகவேண்டும் உலகின் பயங்கரவாததிற்கெதிரான போர் பெண்கள் சமூகத்தில் பின்வரும் அடிப்படைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது
01- இதுவரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய தேசங்களில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள நேரடியான முதல் நிலை பாதிப்புகள்
02- பயங்கரவாததிற்கெதிரான போரில் நேரடியாக பங்கேற்ற மேற்குலக நாடுகளில் பரந்து வாழும் முஸ்லிம் பெண்களிடம் அது தோற்றுவித்திருக்கும் இரண்டாம் நிலை பாதிப்புகள்
03- பொதுவாக உலகில் வாழும் எல்லா முஸ்லிம் பெண்களையும் தழுவியதாக நிகழும் மூன்றாம் நிலை பாதிப்புகள்
இரும்புச்சுவர்களுக்குள் ஆப்கானியப்பெண் சமூகம்
ஆப்கான் -வரலாற்றின் தொடக்க காலம் முதலே அது ஒரு வளம் செழித்த பூமித்துண்டு. சீனாவுக்கும் அராபியாவுக்குமிடையிலான பட்டுப்பாதையில் அமைந்திருந்தமை அதன் கேந்திர முக்கியத்துவத்திற்கு காரணமாகும்.
ஈராக், ஈரான் ஆப்கானிஸ்தான், இவை அனைத்தும் 1904ஆம் ஆண்டுவரை ஒரே பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது, 1904ல் பிரித்தானிய காலனித்துவ வாதிகளின் திட்டப்படி ஆப்கான் ஈரானுடனான தனது எல்லைகளை ஒழுங்குபடுத்தி தனியான ஆட்சிப்பிரதேசமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது.
1774ல் இஸ்லாமிய சாம்ராஜ்யத்திலிருந்து விலகி அஹ்மத் சாஹ் துர்ரானி ஆப்கானை ஒரு தனியான இராச்சியமாக நிறுவினார். தொடர்ந்து ஆப்கான் இங்கிலாந்தினதும் ரஷ்யாவினது ஆதிக்கப்போரில் சிக்குண்டு பல இழப்புக்களின் விளைநிலமாகியது.
1919 ல் ஆப்கான் மூன்றாவது அங்கோலாப்போரின் முடிவில் தனியான சுயாட்சியுடைய நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதே பொழுதுகளில் இங்கிலாந்தின் காலனித்துவமும் முடிவுக்கு வந்தது, இருப்பினும் இங்கிலாந்தும் ரஷ்யாவும் தமது கூலிப்படைகளை அமர்த்தி மறைமுகமாக ஆப்கானில் சிவில் யுத்தத்தை நடாத்தினர்.
இதன் ஒரு கட்டமாக 1979ல் ரஷ்யப்படை ஆப்கானுக்குள் பிரவேசித்து ஆப்கானை ஆக்கிரமித்தது. பழமை பேணுகின்ற பழங்குடிகளைக்கொண்ட ஆப்கான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மகுடமாய் ஒளிர்ந்தது, மிகவும் ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்பையும், கடினமான மலைப்பாங்குகளில் வசிக்கின்ற திடகாத்திரமான மக்கள் வளத்தையும் கொண்டதாக ஆப்கான் திகழ்ந்தது.
முஸ்லிம்கள் ரஷ்யப்படைக்கெதிராக ஜிஹாதை மேற்கொண்டு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ திடசங்கற்பம் பூண்டு செயற்படுகின்ற வேளையில் மேற்கின் சதித்திட்டத்தின் ஒரு உருவாக்கமான அமெரிக்க பிரித்தானிய ஏஜெண்டுகளான தாலிபான்கள் ஆப்கானீய ஜிஹாதில் நுழைகின்றனர்,
உண்மையான முஜாஹிதுகள் வியர்வையும் இரத்தமும் சிந்திப் பெற்ற வெற்றி காற்றிலடித்த பஞ்சாய்ப் பறந்து உள்நாட்டுப்போர் மீண்டும் மூளுகின்றது, இந்நிலையில்தான் அமெரிக்காவின் ஏஜெண்டுகளாக இருந்த தாலிபான்கள் தாம் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்காவை எதிர்க்க தன்னிச்சையாக முடிவு செய்தனர் இதனைக் காரணமாக வைத்தே ஆப்கானின் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் படையெடுப்பு 2002ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது.
சுமார் 9 வருடங்களையும் தாண்டியும் இன்னமும் அமெரிக்கா ஆப்கானில் தனது நோக்கத்தை அடைந்துகொள்ளவில்லை என்று சொல்லி உலகை ஏமாற்றி வருகிறது. கடந்த 100 வருடங்களாக பிரித்தானியாவும் ரஷ்யாவும் அமெரிக்காவும் மாறி மாறி ஆப்கானில் மனித வேட்டை நடாத்திவிட்டு ஆப்கானிய மக்கள் தாலிபான்களினால் அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள் எனவேதான் நாம் அவர்களை விடுவிக்க முயற்சிக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்
கடந்த 100 வருட மேற்குலகின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் யுத்த நிகழ்வுகளாலும் ஆப்கானிய மக்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வியல் ஒழுங்கு முற்றாக சீரழிந்திருக்கின்றது.
கல்வி வாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் முறையாக பெற்றுக்கொள்ளமுடியாத துர்ப்பாக்கியமான நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்,வாழ்வாதாரம் தொலைந்த நிலையில் இருப்பே வினாக்குரியாய் விடைத்து நிற்கிறது.தொடந்தும் 100 வருடங்கள் யுத்தக்கலாச்சாரத்தினால் அவர்களது மனோநிலை மற்றும் வாழ்வியல் ஒழுங்குகள் யுத்ததிற்கு ஏற்ற அமைப்பிலேயே ஒழுங்கமைக்கப்பட வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது.
எனவே பெண்களை சமூக வேலிகளுக்குள் பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆப்கானிய சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக பெண்களை சாதாரண நாகரீக உலகோடும் அசுர வேக வளர்ச்சி காணும் தொழிநுட்ப மாற்றங்களோடும் அவர்களால் தொடர்புபடுத்த முடியாத இக்கட்டு நேர்ந்திருக்கிறது.
வேலியை மேய்ந்த வெள்ளாட்டு மேற்குலகு இன்று தன்னை மிகவும் நல்லபிள்ளையாகக் காட்டிக் கொள்கின்றது ஆனால் வேறு யாருமல்ல இதே மேற்குலகம் தான் ஆப்கானியப்பெண்களின் பின்னடைவுக்கான மூல கர்த்தாக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
யுத்ததினால் ஏற்படும் சாதாரண மன உளைச்சல் முதல் கொண்டு பாலியல் பலாத்காரம் வரையான கண்ணீரும் கொடுமையும் ஆப்கானியப்பெண்களின் அன்றாட வாழ்க்கையாகி விட்டிருக்கிறது.
ஆப்கானியப்பெண்களை நாகரீக மயப்படுத்துவதற்கான செயற்திட்டம் என்ற பெயரில் ஏராளமான அமெரிக்கக் குள்ள நரித்தன அரங்கேற்றங்கள் இன்று ஆப்கானில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன, அழகு நிலையங்கள் தொடங்கி விபச்சார விடுதிகள் வரை அமெரிக்கர்களினால் திட்டமிடப்பட்டு பகிரங்கமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன, ம்ற்றொரு புறத்தில் பெண் ஒருபால் சேர்க்கை முறையும் மேலைத்தேய பெண்ணியமும் ஆப்கானில் ஊடுருவி வருகின்ற கவலையான செய்தி நெஞ்சை அறுக்கிறது. அமெரிக்க சிந்தனைகளைக்கொண்டு செல்லும் உள்ளூர் பெண் அறிஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இங்கு பற்றாக்குறையில்லை, இவ்வாறாக ஆப்கானியப்பெண்கள் தமது இயல்பானதும் இஸ்லாத்தின் வழிநின்றதுமான வாழ்வியலை விட்டும் வெகுதூரத்துக்கு அழைத்துச்செல்லப்படும் சமூகவியல் ரீதியான அபாயம் இன்றைய ஆப்கானில் நிலவுகின்றது.
யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்களினால் ஏற்படுத்தப்பட்ட இரசாயன ரீதியான பாதிப்புக்கள் காரணமாக இயற்கைச்சூழல் ஆரோக்கியமான வாழ்தலுக்கு அச்சுறுத்தலாகி உள்ளது.இனந்தெரியாத நோய்கள் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் சிறார்கள் மத்தியிலும் காணக்கூடியதாக இருக்கின்றது, குழந்தைப்பேறு இன்மை, வலது குறைந்த மற்றும் புத்திசுவாதீனனம்ற்ற குழந்தைப்பேறுகள் என ஆப்கானியப் பெண் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் நீள்கின்றன.
உலகில் அதிக உரிமைகளைஅனுபவித்த ஈராக்கியப்பெண்கள்
1980களுக்குமுந்திய ஈராக்கியப் பெண்களின் நிலை உலகில் மிகவும் உயர்வான இடத்தில் வைத்து நோக்கப்பட்டது, உலகில் அதிகம் கல்வியில் தேர்ச்சி கண்ட பெண்களைக்கொண்ட நாடாகவும் ஈராக்கே திகழ்ந்தது, 1980ல் ஈராக்கின் யாப்பில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எவ்விதபாகுபாடுமற்ற சட்டமுறைமைகளை காணக்கூடியதாக இருந்தது. ஈராக்கியப்பெண்களே உலகில் அதிகம் உரிமைகளை அனுபவித்தவர்கள் என்று 1990ஆம் ஆண்டின் ஐ.நா அறிக்கை கூறுகின்றது. மகப்பேற்றுக்கான விடுமுறைக்காலம் 6 மாதங்களாகவும் இருந்ததோடு குறித்த 6மாதத்துக்குமான முழுமையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு மேலதிகக் கொடுப்பனவுகளும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றன.இது மட்டுமல்லாது பொருளாதார சுதந்திரம் முதல் நாட்டின் அரசியலில் ஈடுபடுவது முதலாய சகல துறைகளிலும் ஆண்களுக்கு நிகரான பங்களிப்பை வழங்குவதில் ஈராக்கியப்பெண்கள் பின்னிற்கவில்லை.
1991 அமெரிக்க மறைகரத்தின் உந்துதலால் வளைகுடாப்போர் தொடங்கப்பட்டது அன்றுதான் ஈராக் தனது மக்களுக்கு மன்னிக்கப்பட முடியாத ஒரு பெருந்தவறை இழைத்தது. தனக்கிருந்த எதிரியை மடக்குவதற்கு உலகின் வடிகட்டிய நயவஞ்சகனோடு ஈராக் கைலாகு செய்தது. விளைவு இன்னும் பல பத்து ஆண்டுகளுக்கு மறுமலர்ச்சியை நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு அது பின்தள்ளப்பட்டது.
நடந்து முடிந்த யுத்த வடுக்களை சரிசெய்து முடிப்பதற்குள் இன்னொரு பூகம்பத்தை ஈராக் எதிர்நோக்கியது. 2003ல் அமெரிக்க ஆதிக்கப்போர் ஈராக் மேல் தொடக்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை ஈராக்கியப்பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்களை வெறும் எழுத்துக்களால் விவரித்து விட முடியாது.
உயிர் உடமை இழப்புகள் தொடர்கதையாகும் அவர்களது வாழ்க்கை ஆப்கானிய பெண்களின் வாழ்வையே கூடுதலாகவோ குறைவாகவோ ஒத்திருக்கின்றது. ஒரு காலத்தில் பெண் அறிஞர்களின் தாயகமாகத் திகழ்ந்த ஈராக்கில் இன்று வாழும் பெண்கள் கடுமையான உளப்பாதிப்புக்களால் அன்றாட வாழ்வைக்கொண்டு நடாத்தும் திறனைக்கூட இழந்திருக்கும் துக்கம் தொண்டை அடைக்கிறது.
பாலியல்பலாத்காரங்கள், துஷ்பிரயோகங்கள், உளவியல் கெடுபிடிகள், அச்சம், என அவர்களது வாழ்வியல் ஒரு மீள முடியாத ஒரு குப்பை மேட்டில் வீசி எறியப்பட்டிருக்கிறது.விதவைகளின் எண்ணிக்கை ஏறிச்செல்லும் அதே வேளை, அநாதைகளின் அளவுகளிலும் உளநோயாளிகளின் அளவுகளிலும் வெகுவான அதிகரிப்பு நிக்ழ்ந்திருக்கின்றது. சமூகவியல் நோக்கில் பார்க்கும் போது இது ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்பின் அடித்தளத்தையே ஆட்டங்காண வைக்கும் அம்சமாகும்.சதாமின் மறைவோடு அமெரிக்காவின் அட்டகாசம் அடங்கும் என்று நினைத்தால் அது வேறுவிதமாகவே இருக்கின்றது.
இரண்டாம் நிலைப்பாதிப்புகள்
இரண்டாம் நிலைப்பாதிப்புகள் என்று இங்கு நாம் அடையாளப்படுத்துவது குறிப்பிட்ட பயங்கரவாததுக்கெதிரான போரினை நடாத்துகின்ற அமெரிக்க மற்றும் மேலை நாடுகளில் தோன்றியிருக்கின்ற முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்களையாகும்.
மேலைநாட்டு முஸ்லிம் பெண்கள் எனும் போது மேற்கு தேசங்களில் பிறந்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்ட பெண்கள்,முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்த மகளிர் மற்றும் கீழைத்தேய நாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்ந்த மங்கையர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கலாம்.
செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப்பின்னர் என்றுமில்லாத வகையில் மேற்கில் இஸ்லாத்தினை அறியும் ஆர்வம் கிளர்ந்தெழுந்துள்ளது.அந்த வகையில் ஒப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களே இஸ்லாமிய சிந்தனைகளை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.முஸ்லிம் பெண்கள் விரும்பி அணியும் கெளரவமான ஹிஜாப் உடை இன்று பிற்போக்குவாதத்தின் சின்னமாகவும் அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் சித்தரிக்கப்படிகிறது. அமெரிக்காவினதும் அதன் அடிவருடிகளினதும் ‘பயங்காரவதத்திற்கெதிரான யுத்தத்தின் பின்னால் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் ஹிஜாபிற்கெதிரான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றிருக்கின்றன.
யூதர்கள் அணியும் சிறு தொப்பியோ, சீக்கிய சமுதாய மக்கள் அணியும் தலைப்பாகையோ அல்லது இஸ்லாமிய ஆண்கள் அணியும் தொப்பியோ, ஆணடிமைத்தனத்தை ஏற்படுத்துவதாக குரல் எழுப்ப எண்ணாத இவர்கள், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய முன்வருகையில் மட்டும் கொதித்தெழுந்து துடிப்பதன் பின்னணி என்ன?
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் முஸ்லிம் பெண்கள் அணியும் உடையை ஒத்ததான தலையையும் உடலையும் முழுவதுமாக மறைக்கும் அங்கியை அணிகின்றனர். இவர்களை எவரும் பரிதாபமாக பார்ப்பதுமில்லை,பெண்ணுரிமை பறிபோனதாகக் கூக்குரல் எழுப்புவதுமில்லை.
அண்மைக்காலமாக லண்டன் மாநகரத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதிலும் குறிப்பாக ஹிஜாப் அணியும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சூழலில் லண்டனில் உள்ள முஸ்லிம் கல்லூரியின் முதல்வரும், பிரிட்டன் பள்ளிவாசல் மற்றும் இமாம்கள் குழுமத்தின் தலைவருமான ஷேக் ஜக்கி பதாவி அவர்கள், “ஹிஜாப் அணிவதால் தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகுவோம் என்று அஞ்சும் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்” என்று கூறும் அளவுக்கு விவகாரம் முற்றியிருக்கிறது.எனினும் என்ன நடந்தாலும் ஹிஜாபைத்துறக்க மாட்டோம் என்று இங்கிலாந்து யுவதிகள் உறுதியாய் நின்றிருப்பது இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது.
லண்டன் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து 5 லட்சம் முஸ்லிம்கள் பிரிட்டனை விட்டு செல்ல முடிவெடுத்திருப்பதாக கார்டியன் நாளிதழ் நடத்திய ஆய்வு கூறுகிறது.குண்டு வெடிப்பு நடைபெற்ற பிறகு மூன்று நாட்களில் 1500 முஸ்லிம் பெண்கள் இனவெறித் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள்.
இதே நேரம் கடந்தாண்டு ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் "மர்வா அல் ஷெர்பினி' எனும் 31 வயதேயான பெண் அநியாயமாகக் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தின் காயம் இன்னும் ஈரமாகவே இருக்கிறது.
அலெக்ஸ் எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.
தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்க திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்
"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் பேசும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் ஒரு பானைச்சோற்றின் ஒரு பதம் மட்டுமே.
ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் மேலைத்தேய சிந்தனைகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?அதிகபட்சம் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் அவர்களது உயிர்களுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அறிக்கை விடுவார்கள்.
அண்மையில் பிரான்சில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து இனவெறிக்கும்பல்களின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைய முடியும் என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.Save Muslim women முஸ்லிம் பெண்களை காப்போம் என்ற அடிப்படையில் எழுந்ததாக வாதிடப்படும் ஹிஜாபுக்கெதிரான தடை இறுதியில் அவர்களுக்கெதிராக அநீதியாக நடாத்தப்பட்டு வரும் போரை ஒதுக்கப்படல்களை நியாயப்படுத்தி முஸ்லிம் பெண்களின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.சார்கோஸியின் கருத்தும் எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாகவே அமைந்திருக்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த டொக்டர் ஆஃபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸசூசெட்ஸ் நிறுவனத்தின் உயிரியல் பட்டதாரி.அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் ‘நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானத்தினை’ பாடமாக எடுத்து கலாநிதி பட்டம் பெற்றவர்.தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போது ‘பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்’என்ற ஆய்வுக்காக ‘கரோல் வில்ஸன் விருது’பெற்றவர். டொக்டர் ஆஃபியா, உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் எங்கிருந்தாலும் உடனடியாக FBஈ க்கு அறியத்தருமாறும் திரும்பத் திரும்ப அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியிருந்த தன் தாய் வீட்டிலிருந்து ராவல்பிண்டிக்கு செல்ல டக்ஸியில் ஏறுகிறார் டொக்டர் ஆஃபியா.
அவருடன் 7 வயதான மகன் அஹ்மத் 5 வயது மகள் மர்யம்.வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.டொக்டர் ஆஃபியாவின் மடியில் 6 மாதங்களே நிரம்பிய குழந்தை சுலைமான் .
விமானநிலையம் நோக்கிச் சென்ற ஆஃபியா குழந்தைகளுடன் காணாமல் போகிறார். செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies) மடக்கப்பட்டு American Federal Bureau of Investigation (FBI) யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள். டொக்டர் ஆஃபியாவிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப் படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப்பக்கம் திரும்பியது.
Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறைக் காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. 2008 ஓகஸ்ட் 4ந்திகதி அமெரிக்க அரசு ஆஃபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.ஜூலை 17 ந்திகதி
பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடனும் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா18ந்திகதி ஆஃபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது.அத்தோடுஅமெரிக்க அரசு ஆஃபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று முழுப்பூசணியை சோற்றில் மறைத்தது.
ஓகஸ்ட் 4ந்திகதி ஆஃபியா அமெரிக்காவின் நிவ்யோர்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.` டொக்டர் ஆஃபியா சிறையிலிருந்த போது அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குறைஞர்கள் சொல்கிறார்கள்.
அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக்காயத்தில் இரத்தம் உரைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் சகிக்க முடியாமல் இருந்ததோடு ஆஃபியா வின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் பெப்ரவரி 3ந்திகதி வழக்கில் டொக்டர் ஆபியாவை விசாரித்த நீதிமன்று அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் மே 6,2010 யிலிருந்து அவரது தண்டனைக்காலம் ஆரம்பமாகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகள் புர்கினி என்ற மூடிய நீச்சலுடையைத்தடை செய்தன.முகம்,கை தவிர்ந்த உடலின் ஏனைய பாகங்களை மறைக்கும் இந்த உடையை அணிந்து கொண்ட பெண்களுக்கு நீச்சல் தடாகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
மூன்றாம் நிலை பாதிப்புகள்
அதி கூடிய முஸ்லிம் சிறுபான்மையினரைக் கொண்டுள்ள நமது அண்டை நாடான இந்தியாவின் பல பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிவதற்கெதிரான அழுத்தங்கள் தோன்றியுள்ளன.ஹிந்துத்துவா போன்ற அமைப்புக்கள் இதன் பின்னணியில் செயற்படுவதாக சில கல்லூரி அதிபர்கள் பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளனர்,
இலங்கையில் சில கல்விக்கலாசாலைகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர கல்லூரி நிருவாகங்கள் தடைவிதித்துள்ள விடயத்தை நாம் ஏலவே அறிவோம்.
முன்பும் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றாலும் பயங்கரவாதத்துக்கெதிரான போரைத்தொடர்ந்தே இந்நடவடிக்கைகள் உக்கிரம் பெற்றுள்ளன.
மீறி ஹிஜாப் அணியும் மாணவியர் கடுமையான சொல்லாடல்களால் சாடப்படுகிறார்கள்,அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறான காரணங்கள் பயங்கரவாதத்துக்கெதிரான போரின் பக்க விளைவுகளே ஆகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.முஸ்லிம் பெண்கள் பொது வசதிகளை பாவிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறார்கள்.கல்லூரிகளிலிருந்து இடைநிறுத்தப்படுகிறார்கள்.அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். விமானப்பயணங்களில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறார்கள்.பொலிஸாரினால் துன்பத்துக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.
மேற்கு ஈட்டித்தருவதாக ஆசை காட்டும் பெண் விடுதலை எப்படிப்போனாலும் இன்று முழு உலகிலும் முஸ்லிம் பெண்கள் இதே விடுதலையின் பெயரால் வன்முறைக்கும்,ஓரங்கட்டப்படுதலுக்கும் தீண்டாமைக்கும் இலக்காகி இருக்கும் துயரம் நெஞ்சு துவைக்கிறது.
0 comments:
Post a Comment