5. நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - உண்மையா ? மிக அழகான கேள்வி.என் சிந்தனைவேர்களில் தாகமாய் வந்தமர்ந்த வினா..
நிழல்கள் நிஜமாவதில்லை, கனவுகள் நனவாவதில்லை - இந்த கூற்றின் முரண் தான் என் நம்பிக்கை.
நிழல்கள் தான் நிஜமாகின்றன , கனவுகள் தான் நனவாகின்றன – இது உண்மை!அனுபவித்துச் சுவைத்த உண்மை .எதை நாம் அதிகம் நினைக்கிறோமோ,எதை நாம் அதிகம் கனவு காண்கிறோமோஅதை நாம் அடைகிறோம்………
என் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் ஒருவர்….
அவர் அறிமுகம் தேவையில்லை.வசதியாயிருந்து பின் வறுமையின் அடிமட்டத்துக்கே போன ஒரு குடும்பத்தின் வாரிசு………….
அவருக்கு படிப்பில் அபாரத் திறமை……
காலில் செருப்பில்லாது,தேய்ந்த ஒரே சீருடையுடன் பள்ளிக்கு போனவர்.மீதி நேரத்தில் கடையில் எடுபிடி வேலையிலிருந்து தெருவில் கூவி விற்பது வரை ஓடாய்த் தேய்ந்தவர்……….
வாழ்க்கை பற்றி இரவின் தனிமையிலே யோசிப்பாராம் …….`
நானும் ஒரு நாள் வாழ்வில் உயர்வேன்.என் குடும்பம் கெளரவமாய் வாழும்`என்ற கனவு……
இன்று அவர்ஒரு அருமையான குடும்பம்,மிக கெளரவமான வாழ்க்கை,சமூக அங்கீகாரத்தோடு வாழ்கிறார்.இறைவனுக்கே புகழ் அனைத்தும்இப்படி நிறைய வாழும் உதாரணங்களைக் கண்டிருக்கிறேன்.கேட்டிருக்கின்றேன்.உளவியலில் மனதை மூன்றாகப் பிரிப்பார்கள்
1.வெளிமனம்
2.உள் மனம்
3.ஆழ் மனம்
இதில் நாம் வெளிமனதையும் உள்மனதையும் தான் அறிகிறோம்.மிகவும் சக்தி மிக்க ஆழ்மனதின் ஆற்றலை குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம்.ஆழ்மனது ஒன்றை அழுத்தமாக விரும்பி விட்டால் அதை அடைந்தே தீரும்.
அடிக்கடி மனக்கண்களால் கனவு காண்பது ஆழ்மனதின் அடியாழத்தில் தங்குகிறது……..எனவே நிழல்கள் நிஜமாகின்றன……
கனவு காண்பதில் நான் கஞ்சத்தனம் காட்டுவதில்லை எப்போதுமே!!!
சின்ன வயதில் என் அறையில் மாட்டியிருந்த படத்தில் இருந்த`keep on believing ……….Your Dreams can come true` என்ற வாசகத்தை எப்போதுமே என் இதயத்தில் பதித்து வைத்திருக்கின்றேன்……
கனவுகள் ஒரு நாள் நனவாகும்……………..
நிழல்கள் அனைத்தும் நிஜமாகும்………………
வானம் எனக்காய் இறங்கி வரும்………………
நிலவும் பனித்துளி பரிசு தரும்……………………..
அன்புடன் சுடர் என்னிடம் - 5
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம் - 4
4. உங்களுக்கு யாரைப் பார்த்தால் கோபம் வரும் ? கோபப்பட்ட சிலஅனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
கோபம் -காயப்பட்ட உள்ளத்தின் கொந்தளிப்பு……
சீண்டப்பட்ட பாம்பின் உஷ்ணக்காற்று……..
கோபம் வரக்கூடாத இடங்களுண்டு……………..
கோபம் வந்தாக வேண்டிய இடங்களுமுண்டு…………..
வரக்கூடாத இடங்களில் வந்தும் வரவேண்டிய இடங்களில் வராமலும் இந்த கோபம் என்ன பாடு படுத்துகிறது.
எனக்கும் சின்ன சின்ன கோபங்கள் வருவதுண்டு.
அன்பானவர்களின் புறக்கணிப்பு கோபம் கலந்த அழுகையை கொண்டு வந்து நிறுத்தி விடும்……
உலகமே எதிராய் நின்றாலும் கலங்காத உறுதியுண்டு.
இனியவர்களின் ஒரே அலட்சியப் பார்வை போதும் உயிரை வலிக்கச் செய்ய………….
எனக்கு வலிமை குறைந்தவர்களை வலியவர்கள் காலில் போட்டுமிதிப்பது
கண்டால் கோபம் எல்லை மீறும்.
எங்களூரில் இருக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை இளைஞர்கள் கேலி செய்து சிரிப்பதைக் கண்டு இரத்தம் கொதித்திருக்கிறேன்.
படித்தவர்கள்(?) தங்களை விட தகுதிகள் குறைந்தவர்களை ,மட்டம் தட்டிப் பேசுவதை அல்லது அவமதிப்பதை கண்டால் என்னுள் சினம் பிறக்கும்.
கோபத்தில் இரண்டு வகையிருக்கிறது.
நீர்————————-மணல்
நீர் சூடாக நேரம் எடுக்கும்……………
ஆனால் சூடாகி விட்டால் இலேசில் ஆறாது.
மணல் அவசரமாய் சூடாகி விடும்………
அதே அவசரமாய் ஆறியும் விடும்………
`நான் நீரா ? மணலா ?தெரியவில்லை.`
ஆனால் ஒன்று
அநேகமாய் என் கோபம் கண்ணீரில் தான் கடைசியாய் வந்து தணியும்.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம்-3
3. மகள், மனைவி, தாய், தோழி – என்ற வெவ்வேறு நிலைகளில் பெண்மையின் உன்னதம் எந்த நிலையில் உயர்வையும் மன நிம்மதியையும் அடைகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
உண்மையில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது இந்த வினா…….. பெண்மையின் உன்னதம் உயர்வும் நிம்மதியும் ,இந்த நிலைகளை அடைவதில் அல்ல இந்த நிலைகளில் ஒரு பெண்ணின் மனோபாவம் பொறுத்தே நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் அபிப்பிராயம்.
சுயநலமற்ற நேசம்……
உள்ளார்ந்த அன்பு……..
தலைகோதி நெஞ்சின் சிடுக்கெடுக்கும் விரல் நுனிகள்…. இதயம் உடைந்து விம்மும் வேளைகளில் ஆறுதல் பனித் துளிகள் ……
பிழை செய்தால் அன்பு கலந்த கண்டிப்பு…..
எப்போதும் எரிக்காத பார்வை…………
இவை ஒரு பெண்ணின் மனவெளியில் உலவும் வரை அவள் பெண்மையின் உன்னதம் வான் தொடும்.
நிம்மதியின் ஊற்று கரை உடைக்கும். `ஆண் பெண் சமத்துவம்`இன்று நிறமிழந்து பெண் தன் மணமிழந்து நிற்கிறாள்…
கூட்டுக்கும் கூண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டாலே போதும்……………………
பெண்ணின் மென்மை கலந்த மேன்மை உயிர் சிலிர்க்கும்!
பொத்தி வளர்க்கும் ஒரு மகளின் அலை புரளும் பாசம்……….
உயிர் வேரில் ஒவியமாய் சிலிர்க்கும் மனைவியின் மென்காதல்…………
மனம் வலிக்கும் பொழுதுகளில் தலைதடவி தாலாட்டும் தாயின் நேசம்…….
தொடாத தூரத்திலிருந்தாலும் சுவாசத்துடிப்பறிந்த தோழியின் நட்பு……… ஒவ்வொன்றுமே பெண்மையின் உன்னதம் தான்………………..
பெண்ணின் மனோபாவமும்,அன்பின் ஆளுகையும் தான் அதனைத் தீர்மானிக்கும்.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம்-2
விதி என்பது என்ன?
இறைவனின் நாட்டமும் மனிதனின் முயற்சியும் சந்திக்கும் தொடுபுள்ளி .
விதிக்கு ஒவ்வொரு விதமான விளக்கங்கள் இருந்தாலும் விதியைக் காரணம் காட்டி உழைப்பையும் உற்சாகத்தையும் இழப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இறைவனுடைய நாட்டம் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது உண்மை தான்:அந்த ஏட்டில் இருப்பது என்ன என்பது எமக்குத்தெரியாது……………
எனவே
உழைக்கும் போது நம் கை மட்டுமே நமக்குப் பலன் தரும் என்பது போல வியர்வை சிந்த வேண்டும்……….
மனதில் உழைப்பைப் பற்றி நினைக்கும் போது நம் வெற்றிக்கு இறைவன் நாட்டமேயன்றி வேறு காரணம் இல்லை என்ற பணிவும் சார்தலும் வேண்டும்.
உளம் தளராத உறுதியின் இரகசியம் இது என்பது என் கருத்து.
இன்னுமொன்று………
நேற்று நடந்ததை நம் அறிவு விளங்கி வைக்கும்.
நாளை நடப்பது எமது அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஆனால் இறைவன் நேற்றையும் நாளையையும் ஒரே போல் அறிகிறான்.
இது தான் விதியின் அடிப்படை.
நாளை நடப்பதை அறிந்து கொள்ள சோதிடர் தேடி அலைவதிலும்
தினசரிப் பத்திரிகையில் ராசிபலன் பார்ப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கைப் பூவுடன் நடப்போம்.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
அன்புடன் சுடர் என்னிடம் 1
1. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்று இந்த சமூகம் என்றாவது உங்களை நினைக்கவைத்திருக்கிறதா ?
அருமையான பதில்களால் எங்கள் உளம் தொட்டு பின் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்துப் பறக்க வானம் தரும் உங்கள் கேள்விகள் என் கதவு தட்டுகின்றன. நன்றிகள் சகோதரர் ஷாஜஹானுக்கு!!!
இறைவனுக்கே புகழனைத்தும்.
பெண் குழந்தைகளை விரும்பி வளர்க்கும் ஒரு பெற்றோருக்கு நான் பிறந்தது என் பாக்கியம். சூழலில் வேறு பெண்குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டு கொண்டே நான் வளர்ந்தேன். எனக்கு சகோதரர்கள் இல்லை: சகோதரிகள் மாத்திரம் தான். எப்போதாவது ` நான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்`என்ற ஆதங்கம் என் உள்ளம் குடைந்ததில்லை. ஒரு ஆணைப் போல் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டதுமில்லை. இந்த விடயத்தில் என் பெற்றோரின் பரந்த மனோபாவத்திற்கு நான் நன்றிசொல்லியே ஆக வேண்டும்
ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்மையின் குளிர்ச்சிக்கு தனிதுவமான இடமும் உரிமையும் வழங்கிய உயர் மார்க்கத்தின் வாரிசான பெண் நான். இறைவனுக்கு மட்டுமே அடிபணிவதன் இன்பத்தின் பின்னால் அத்தனை தளைகளும் அடிமைத்தனங்களும் அறுந்து விழுகின்றன. பெண்ணாய்ப் பிறந்ததற்காய் உளம் சிலிர்த்த கணங்களே அதிகம்.
கொள்கையைச் சரியாகப் புரியாமல் குருட்டு வெளிச்சத்தில் குளிர்காயும் சமூகத்தின் ஒரு பகுதியால் நான் காயப்பட்ட உண்மையை நான் மறுக்கவில்லை. பெண் என்பதற்காய் என் பின்னால் அறைந்து சாத்தப்பட்ட கதவுகளின் சத்தம் என்காதுகளில் இன்னுமே ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
பெண் என்பதால் என் எழுத்தும் வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கப் படும் துக்கத்தை அனுபவித்திருக்கிறேன்……….
தன் உள்ளத்தின் ஓசைகளைத் தெளிவாக முன்வைக்கும் பெண் ,அமைதியும் மென்மையும் கொண்ட குடும்ப விளக்காக இருக்க பொருத்தமற்றவள் என்ற மனோபாவம் கண்டு வெதும்பியிருக்கிறேன்.
பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை
இஸ்லாமிய வரலாற்றின் சாதனை மகளிரை, அறிவின் ஊற்று அன்னை ஆயிஷாவை, வீரத்தாய்உம்மு அமாராவை, எகிப்தியப் போராளி சைனப் கஸ்ஸாலியை பாராட்டும் சமூகம்,அதே பணியை முன்னெடுக்கும் தன் நிகழ்காலச் சகோதரியை வேற்றுக்கண் கொண்டு பார்க்கும் அதிர்வு எனக்குள் பதிவாகியிருக்கிறது.
அன்புடன் போட்டிக்கு அனுப்பிய என் இயல் கவிதை என் மன உணர்வுகளின்கண்ணாடி.
முதிர்ந்த இலைகள்
நிலா காயும்
என்
தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
தூரத்தில் அசையும்
ஒளிர்ந்து
இருளின் மடியிலும்
ஒழுங்கையோ
முள்பட்டே
ரணங்களின் அந்தரங்கத்தில்
ஆண் அல்ல
திறமை வெள்ளத்தின்
பிரார்த்தனை விழிகளின்
வானம் தொட்டு
அழுத்தும் சுமைகள்
எத்தனை இருந்தும்……………….பெண்ணாய் ஏன் பிறந்தோமோ என்று உடைந்து போனதில்லை.
Labels: அன்புடன் சுடர் , எண்ணத்துணுக்கு
நாம் சிலந்தியா சிக்கியிருக்கும் பூச்சியா?
இணையத்தின் வருகை ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்தின் அதிர்வுகளால் உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒரு கனவாய் கண்டு மகிழ்ந்த காட்சிகள் இன்று நனவின் வெளியில் நின்றுலாவுகின்றன.
எனினும் மாற்றங்களின் தூண்டல்களுக்கு போதுமான துலங்கலைக் காட்டுவதில் முஸ்லிம் சமூகம் முன்னிற்கவில்லை என்ற கவலை போதுமானளவு இருக்கிறது. சில்லரைச் சர்ச்சைகள்,சிடுக்கெடுக்க முடியாத பிரச்சினை முடிச்சுக்கள்,சம்பிரதாயச்சேறுகள்,சின்னத்திரை நாடகங்கள் இவற்றுக்கு மேலால் சிந்திக்கவும் சுயமாய்ச் செயற்படவும் முடியாமல் இருக்கும் நம் பெரும்பான்மை பெண் சமூகம் இணையத்தின் வாசத்தை இன்னும் நுகரவில்லை.
இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஆணிவேர்கள் பழகிப் புளித்துப் போன பழைய முறைகளில் தான் இன்னும் தங்கிக் கிடப்பதான ஒரு பிரமையில் திருப்தியடைகிறோம்.இஸ்லாமியப் புரட்சியொன்று இனி ஏற்படுமானால் அது அறிவின் அடியாழத்தில் எழும் சிந்தனாரீதியான மறுமலர்ச்சியினால் மட்டுமே சாத்தியம்.
அறிவியலும் ஆராய்ச்சிகளும் ஆழ்கடல் தொட்டு விண்மீன்கள் கண் சிமிட்டும் வான் வெளி வரை வியாபித்திருக்கும் ஒரு யுகத்திலே வாழ்கிறோம்.தொழி நுட்பத்தின் சிக்கலானதும் தவிர்க்க முடியாததுமான வலைப் பின்னலில் விரும்பியோ வெறுத்தோ நாம் அனைவருமே சிலந்திகளாகி விட்டிருக்கிறோம்.
இன்றைய இளைய சமுதாயம் சென்ற நூற்றாண்டுகளில் பூமி சுமந்த தங்களது மூத்த தலைமுறைகளிலிருந்து மிகப் பாரிய இடைவெளியை உணர்கிறது.அறிவியல் தொழி நுட்ப ரீதியான முன்னடைவு மட்டுமல்லாது பண்பாட்டு கலாசார ரீதியான பின்னடைவும் இந்த இடைவெளிக்குப் பங்களிப்புச்செய்கின்றன. எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் துடிப்பூக்கம் மிகுந்து காணப்படும் இளைய தலைமுறை கையடக்கத்தொலைபேசி,கணனி,இணையம் ஆகிய காலத்தின் தொழி நுட்ப மாற்றங்களுக்கு விரைவில் இயைபடைகின்றது.
எனினும்,துரதிஷ்டவசமாக மிக அதிகமான இளைஞர்கள் சிகரட்டுக்கும் போதை மருந்துகளுக்கும் அல்ல, இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.’கனியிருப்ப காய் கவர்தற் போல் ’இன்ட நெட் எனும் இணைய வலைப்பின்னலின் கோடானு கோடி நன்மைகளை மறுதலித்து அதன் அத்துமீறும் தீமைகளை அணைத்து கொண்டிருக்கின்றனர்.
காளான் குடை போல் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் ‘இன்டெர் நெட் கஃபே’களில் மணிக்கணக்காய் கணனித்திரையை முறைத்துக் கொண்டிருக்கும் கண்களை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நமது நாளைகள் பற்றிய நம்பிக்கையை சிதறடிக்கும் பார்வைகள் அவை.
எமது தாய்மார்கள் தமது நம்பிக்கை நட்சத்திரங்கள் கணனியில் கல்வி கற்பதான கற்பனையில் இன்னும் பெருமை பேசிக்கொண்டிருக்கின்றனர். இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாகத் தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு என்பது கண்டு நம்மில் சிலர் புருவம் உயர்த்தலாம். நிதர்சனத்தில் வரையறை மீறி கட்டறுந்தோடும் இளமையின் வசந்தம் வெறும் காட்டிலெறித்த நிலவாய்ப் போகும் சோகம் விழி தொடுகிறது.
இணையம் ஒரு திறந்த ஊடகம்,தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது என்பதை அறியாததால் அப்பாவி அன்னையர் சமூகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.தனக்காக வேண்டாம்,தான் சுமந்த உயிரின் மிச்சம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை அறியவாவது இணையம் பற்றிய புரிதல் பெண்களுக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.
இணையத்தின் மறுபக்கத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு அறிவுச்சுரங்கம்.கேட்டதைக் கொடுக்கும் அலாவுதீன் பூதம்.அள்ள அள்ள நீர் சுரக்கும் ஊற்றுக்கண்.இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பது பலருக்கு இனிப்பான செய்தி.
நம் உள்ளம் கவர்ந்த உரைகளை,கருத்தாழம் மிக்க பாடல்களை,ஆச்சரியமூட்டும் அசையும் காட்சிகளை,மனம் கிளறும் ஒளிப்படங்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
தமிழ் பத்திரிகைகளின் சுடச்சுட செய்திகளின் மொருமொருப்பு…
வித்தியாசமான ஆர்வப்பகிர்வுகளுக்கான ஏராளமான குழுமங்கள்….
எழுத்துதிறனை பட்டை தீட்டி ஒளிரச்செய்யும் வாசிப்பார்வத்துக்கு நீரூற்றி வளர்க்கும் ஏராளமான படைப்பாளிகளின் கவிதை,கட்டுரை,சிறு கதை, நேர்காணல்கள் தாங்கி வரும் இணைய இதழ்கள்….
யாரிடமும் கேட்க முடியாத சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ,மார்க்க விளக்கங்களை எம்மை அறிமுகப் படுத்தாமலே கேட்டறிக்கூடிய வசதி வாய்ப்புகள்…
தொடராமல் போன மேற்படிப்பைத் தொடரவும் ,புதுப்புது பாட நெறிகளில் இணைந்து புத்துணர்வு கொள்ளவுமான சூழலை அறைக்குள்ளே ஏற்படுத்தித் தரும் இணையப் பல்கலைக்கழகங்கள்….
துறை ரீதியான வழிகாட்டல்களை வழங்கும் இணையப்பக்கங்கள்…
நோய்கள்,அவற்றுக்கான பல்வேறுவிதமான மருத்துவ வழிகாட்டல்கள்,உளவியல்,உளவளத்துணை சம்பந்தமான தெளிவூட்டல்கள் இணையத்தில் தாராளமாய் காணக்கிடைக்கின்றன
இலட்சக்கணக்கான சமையல்,அழகுக்குறிப்புக்கள்…
.உலகின் எந்தப்பாகத்திலிருந்தும் உறவு வளர்க்கும் உபயோகமான இணைய நட்புக்கள் என வலை விரிகிறது……
எமது முஸ்லிம் சமூகம், அதிலும் குறிப்பாக பெண்கள் சமூகம் இணையம் குறித்த போதுமான விழிப்பைக்கூட வைத்திருக்கவில்லை என்பது கவலை தரும் செய்தி. அறிவு ஜீவிகளாக அடையாளம் காணப்படும் ஆசிரியைகள்,வைத்தியர்கள்,துறை சார் பெண்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.
இந்த நூற்றாண்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமென்றால் தொழி நுட்ப வளர்ச்சி பற்றிய புரிதலின்றி அது வெறும் ஒரு கனவு மாத்திரமே.வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைகளில் தவிக்கும் பெண்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம்.கற்கவும்,கற்பிக்கவும்,கற்றதை செயற் படுத்தவும் வீட்டிலிருந்தே தொழில் புரியவும் தேவையான ஒரு களத்தை நாம் ஏன் மறுதலித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் சிலந்தியா? சிக்கியிருக்கும் பூச்சியா?சிந்திப்போமா?
நன்றி அல்ஹஸனாத் செப் 2007
Labels: அல்ஹஸனாத் , ஊடறு , வார்ப்புக்கள்
புதிதாக சிந்திக்கக் கூடாது!
நேற்றிரவு மின்சாரம் அறுந்து போனது….அடிக்கடி கிண்கிணுக்கும் அலைபேசியை அறையிலேயே வைத்து விட்டு வெளியே வருகிறேன்.லேசாக மழை தூரல்……சட்டென்று இறுகிப் போன முகத்தை ஒரு புன்னகை தொட்டுச்செல்கிறது.
இறைவனைப் புகழ்ந்துகொள்கிறேன்.
இறைவாமாற்றங்களை ஏற்க மறுக்கின்ற குறுகிய மனத்தை எனக்குத் தந்து விடாதே என் மனம் உள்ளுக்குள் இருகரமேந்துகிறது.
புதிதாக ஒன்றை செய்ய முடியாது. சிந்திக்கக் கூட முடியாது.அது சரிவராது…வழமையானபடியே செய்வோமே…இவ்வளவு காலம் இதைத் தானே செய்தோம் இப்படியானவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது பெரிய சவால்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்புக்கடிததைத் தயாரிக்க நேரிட்டது.
நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிகழ்ச்சி. சம்பிரதாயமான அலுவலகக்கடிததிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு அமைப்பில் கடிதத்தை வடிவமைத்தோம். கடிதம் அழகாக வந்திருக்கிறது என்ற கருத்தில் பலர் இருக்க அந்தப் பிரிவின் பொறுப்பாளர்கள் சிலர் இப்படி வந்திருக்க தேவையில்லை என்று அபிப்பிராயப்படார்கள். அவர்கள் அதற்கு சொன்ன காரணம் மிகவும் வருத்தத்தைத் தந்தது. எல்லாப் பிரிவுகளின் கடிதங்களும் ஒரே விதமாக இருக்க இந்தப் பிரிவுக்கு மட்டும் என்ன முக்கியத்துவம் வேண்டியிருக்கிறது? வாழ்ந்து கொண்டிருப்பது கணிப்பொறி யுகத்தில்.ஒரு பிரிவின் செயற்பாடுகளின் தரம் அதிகம் என்றால் அதற்கேட்ப மற்றப் பிரிவுகளின் நடவடிக்கைகளின் தரத்தையும் அதிகரிப்பது தானே ஆக்கபூர்வமானது.
இப்படியான மனோநிலைகள்.
ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பது என்றாலும் அது ஒரு பெரிய சுற்று சுற்றி விட்டுத் தான் சம்பந்தப்பட்டவர் காதுகளுக்கு வரும். ஏனோ தெரியவில்லை. சிலருக்கு சொல்வதை முகத்துக்கு முன் சொல்லத் தைரியமில்லை.
மனசில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அந்த தூரத்து நட்சத்திரம் பதில் சொல்லிவிட்டது.
மீண்டும் புதிய உற்சாகத்துடன் வீட்டினுள் நுழைந்தேன்.
தையெல்லாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா? ஒரு நிறுவனம் என்றால் பலதரப்பட்டவர்களிருப்பார்கள். இணங்கித் தான் ஆக வேண்டும். அதிலும் வயதில் மூத்தவர்களிடம் சற்று தாழ்ந்து போனால் தான் அவர்களுக்கும் திருப்தி.
Labels: எண்ணத்துணுக்கு